

பணம் நம் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என அனைவரும் தங்களுக்கு தேவையான பணத்தை பைகளில் வைத்திருப்போம். நாணயங்களில் 1, 2, 5, மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வட்டமாக (Round Coin) இருக்கின்றன. நாணயங்கள் வட்டமாக இருப்பதன் அறிவியல், வரலாற்று மற்றும் நடைமுறை காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தற்போதைய காலகட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவமாக இருக்கின்றன. ஆகவே, நாணயங்கள் என்றாலே வட்டமாக தான் இருக்கும் என்பது அனைவரின் நினைப்பாக உள்ளது. உண்மையில் பண்டைய காலங்களில் சதுரம், செவ்வகம், முக்கோணம் போன்ற வடிவமைப்புகளில் நாணயங்கள் இருந்தன. நாணயங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உலோகம், தொழில்நுட்பம் மற்றும் ராஜா அல்லது ராஜ்ஜியத்தின் சின்னத்தை பொறுத்து, நாணயங்களின் வடிவங்கள் மாறி இருக்கின்றன.
முதலில் ஒரு ரூபாய் வட்ட நாணயம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு வகைகளில் 2, 5,மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசாங்கங்கள் நாணயங்களை அறிமுகப்படுத்தப்பட்ட உடன் வட்ட வடிவமாக இருப்பதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கண்டறிந்தன. பல வழிகளில் வட்ட வடிவ நாணயங்கள் மிகவும் சாதகமாக இருந்ததே இதற்கு காரணம்.
நாணயங்கள் வட்ட வடிவமாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை மதிப்பை பாதுகாப்பவையாக இருந்தன. ஏனெனில், பண்டைய காலங்களில் சதுர விளிம்புகளை கொண்ட நாணயங்களில், அதன் விளிம்புகளை சிறிது சிறிதாக வெட்டி உள்ளே தங்கம் அல்லது வெள்ளியை அகற்றியதால் நாணயங்களின் அசல் மதிப்பு இழந்ததாக கூறப்படுகிறது.
வட்ட வடிவ நாணயங்கள் சமமாக இருப்பதால் அதனுடைய விளிம்புகளை வெட்டுவது மிகவும் கடினம். மேலும் வட்ட நாணயங்கள் ஊழலை குறைத்து அவற்றின் அசல் மதிப்பை பாதுகாக்கும் வகையில் இருந்தன.
நாள்தோறும் நாணயங்களின் புழக்கம் அதிகமாக இருக்கும் கடைகள், பேருந்து நடத்துனர்கள், வங்கிகளில் பயன்படுத்தும் போது வட்ட நாணயங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பது எளிதாகவும் நழுவும் வாய்ப்பு குறைவாகவும் உள்ளது.
பக்கவாட்டு விளிம்பு வடிவ நாணயங்களை சேமிப்பது மிகவும் சிரமமாக இருப்பதோடு, அதனுடைய மதிப்பையும் இழந்து விடுகின்றன. ஆகவே, தான் பெரும்பாலான நாடுகள் கையாள்வதற்கு எளிதாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருப்பதால் வட்ட வடிவ நாணயங்களையே பயன்படுத்துகின்றன.