

மஸ்லெனிட்சா (Maslenitsa) என்பது குளிர்காலத்திற்கு விடை கொடுத்து, வசந்த காலத்தை வரவேற்கும் ஒரு பாரம்பரிய ரஷ்ய திருவிழாவாகும். இது ஈஸ்டருக்கு முன் வரும் 'பான்கேக் வாரம்' (Pancake Week) என்றும் அழைக்கப் படுகிறது. பிளினி (Blini) எனப்படும் வட்ட வடிவ பான்கேக்குகளை உண்பது, களியாட்டங்கள், மற்றும் வைக்கோல் பொம்மையை எரித்தல் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும். உலகில் ரஷ்ய நாட்டில் மட்டும் இந்த மகிழ்ச்சி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் கொண்டாடப்படுகிறது.
வட்டமாகவும், சூடாகவும் இருக்கும் பிளினி அப்பங்கள் சாப்பிடுவது இந்த விழாவின் முக்கிய அம்சம். சூரியனையும், வசந்த காலத்தின் வெப்பத்தையும் இவைகள் குறிக்கின்றன. பிளினி பான்கேக் (Pancake) என்பது மைதா/கோதுமை மாவு, முட்டை, பால் மற்றும் புளித்த ஈஸ்ட், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான வட்டவடிவ ரொட்டி, மாவை லேசான பதத்தில் கலந்து, சூடான தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்து. தேன் அல்லது ஜாம் கலந்து பரிமாறப்படும் இது, பஞ்சுபோன்ற மென்மையான அமைப்பில் இருக்கும்.
இவ்விழாவில் குளிர்காலத்தை குறிக்கும் வைக்கோல் பொம்மையை (Maslenitsa) எரிப்பது, குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதைக் குறிக்கிறது. இது ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மக்கள் உறவினர்களைச் சந்திப்பது, விளையாட்டுக்கள், பனிச்சறுக்கு மற்றும் நடனங்கள் ஆடுவது இந்த விழாவின் ஒரு அங்கம்.
மஸ்லெனிட்சா என்பது வசந்த காலத்தை வரவேற்பதற்கும், ஆர்த்தடாக்ஸ் லென்ட் பருவத்தின் தொடக்கத்திற்கும் ஒரு பாரம்பரிய ரஷ்ய பண்டிகையாகும். இது மஸ்லெனிட்சா பட்டர் வீக் என்றும் அழைக்கப்படுகிறது ("மாஸ்லோ" என்பது வெண்ணெய்க்கான ரஷ்ய வார்த்தை). இந்த திருவிழா பான்கேக்குகளை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வாரத்தின் ஒவ்வொரு நாளுடனும் தொடர்புடைய குறிப்பிட்ட ஒரு மரபுகள் கொண்டவை. எப்படி நாம் பொங்கல் பண்டிகையை மூன்று நாட்கள் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகிறோமோ அதனைப்போல அவர்கள் ஆறு நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
திங்கட்கிழமை என்பது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்ப்பதற்கும், விருந்தினர்களை வரவேற்பதற்கும் பயன்படுத்தி அவர்களுடன் ப்ளினி சாப்பிடுகிறார்கள். முதலில் சுடப்படும் பிளனி அப்பத்தை வீட்டின் கூரையில் அல்லது ஜன்னல் வெளியே வைத்து மூதாதையர்களுக்கு படைத்து பின்னர் உண்ணுகிறார்கள். குளிர்காலத்தைக் குறிக்கும் ஒரு வைக்கோல் பொம்மையான "லேடி மஸ்லெனிட்சா" தயாரிக்கப்பட்டு பெண்களின் பழைய ஆடைகள் அணிவிக்கப்படுகிறது. அதனை ஒரு கம்பத்தில் இணைத்து, அந்த பகுதியில் சுற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, திருவிழாவிற்காக ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் வைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை குளிர்கால செயல்பாடுகளுக்கு தங்களை பக்குவபடுத்த ஸ்லெடிங், ஸ்கேட்டிங் அல்லது குளிர்கால நடைப்பயிற்சி செய்கிறார்கள். புதன்கிழமை ஒரு இனிய நாள் விதவிதமான பான் கேக் மற்றும் உணவுகளை வீட்டில் அல்லது உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் சென்று சாப்பிட்டு மகிழ்கிறார்கள். விருந்துகளில் கலந்து கொள்கின்றனர்.
நான்காவது நாள் களியாட்ட வியாழன் - , சறுக்கு வண்டி சவாரிகள், பனிச்சறுக்கு மற்றும் பனிப்பந்து சண்டைகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடு படுகின்றனர்.வெள்ளிக்கிழமை பாரம்பரியமாக தனித்து வாழும் பெற்றோர்களையும், மாமியார்களையும் சந்தித்து அவர்களுடன் விருப்பமான வெண்ணெய் பான் கேக்களுடன் விருந்துண்டு மகிழ்கின்றனர். சனிக்கிழமைகளில், குடும்பக் கூட்டங்கள், அணி வகுப்புகள், தெரு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், நடனம், சந்தைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்றவைகளையுடன் பொழுதை ஆனந்தமாக கழிக்கிறார்கள்.
திருவிழாவின் கடைசி நாள், மன்னிப்பு ஞாயிறு (Forgiveness Sunday) எனப்படுகிறது தவக்காலத்திற்கு (Lent) முன் அனைவரும் ஒருவரை ஒருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, சமாதானமாகும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இது கலாச்சார, சமய நம்பிக்கைகள் கலந்த, மகிழ்ச்சியான உணர்வுகளுடன் கொண்டாடப்படும் ஒரு சமூக நிகழ்வாகும்.
பின்னர் ஏற்கனவே ஊருக்கு வெளியே வைத்து விட்டு வந்த "லேடி மஸ்லெனிட்சா" ஒரு நெருப்பில் எரிக்கப்படுவதோடு திருவிழா நிறைவடைகிறது. ஆர்த்தடாக்ஸ் மத மரபுபடியான ஈஸ்டர் நாளைப் பொருத்து மஸ்லெனிட்டா பண்டிகை நாள் மாறும். இந்த பண்டிகையை கொண்டாட ரஷ்ய அரசு பொது விடுமுறை அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரஷ்யர்கள் இந்த பண்டிகையை இங்கு கொண்டாடுகிறார்கள்.