
கடல் ஜிப்ஸிகள் கடல் நாடோடிகள் என்று அழைக்கப்படும் பஜாவ்(Sama Bajau) பழங்குடியினர் தண்ணீருக்குள் எந்த மூச்சுக் கருவிகளும் இல்லாமல் டைவ் அடிப்பதில் வல்லவர்களாகவும், பல மணி நேரம் கடலுக்குள்ளேயே இருக்கும் திறமையும் பெற்றவர்கள். 'சம பஜாவ்' என்றும் அழைக்கப்படும் இவர்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து கடலோரப் பகுதிகளில் காணப்படும் பூர்வீக இன மக்களாகும். இந்த பழங்குடியினர் கடலுடன் ஆழமான மற்றும் பிரிக்க முடியாத தொடர்பை கொண்டுள்ளனர். தண்ணீருக்கடியில் எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாமல் தங்களுடைய மூச்சை ஐந்து நிமிடங்கள் வரை பிடித்து வைத்திருக்கும் திறன் கொண்டவர்கள். அதற்கேற்ப இவர்களுடைய மண்ணீரல் சாதாரண மக்களை விட சற்று பெரியதாக உள்ளதாகவும், மரபணுவின் மாறுபாட்டால் இது சாத்தியமாகி உள்ளது என்றும் மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.
மக்களின் வாழ்க்கை முறை:
இவர்கள் வசிக்கும் வீடுகள் பெரும்பாலும் தண்ணீருக்கு மேல் தூண்களில் கட்டப்பட்டுள்ளன. இவர்களின் நாடோடி வாழ்க்கை காரணமாக இவர்களைப் பற்றி வெளி உலகத்தில் அதிகம் தெரிவதில்லை.
இவர்களின் வாழ்வாதாரமாகவும் வீடாகவும் இருப்பது கடல் மட்டுமே. கடல் நீரில் வீடு கட்டி வாழ்வதும், படகுகளை வீடாக மாற்றி வாழும் பழக்கமும் கொண்டவர்கள். தேவைப்படும் சமயம் மட்டும் மீன்களை விற்பதற்காக நிலப்பகுதிக்கு சென்று வருகிறார்கள். மற்றபடி இவர்கள் நிலப் பகுதிக்கு செல்வது மிகவும் அரிது. கடல் தான் இவர்களின் ஜீவாதாரம் என்றாலும் இவர்கள் ஒரே இடத்தில் வசிப்பதில்லை.
நாடோடி கடல் வாழ்க்கை காரணமாக இவர்கள் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் இருந்து மலேசியா, புருனே மற்றும் இந்தோனேஷியாவின் பகுதிக்கு இடம் பெயர்ந்து கடலில் வாழ்கின்றனர். இந்தப் பழங்குடியினர் கடலில் 30 மீட்டர் ஆழத்திலும் பாரம்பரிய ஈட்டிகளை பயன்படுத்தி ஆக்டோபஸ், மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடுகிறார்கள்.
இப்படி கடலில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே மடியும் பஜாவ் பழங்குடியினர்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை. அத்துடன் இந்த மக்களை எந்த நாடும் இதுவரை தங்களுடைய மக்கள் என்று அங்கீகரிக்கவும் இல்லை என்பது தான் மிகவும் வருத்தமான ஒன்றாகும்.
கலாச்சாரம்:
இவர்கள் இசை, நடனம் மற்றும் கலைகளின் விரிவான கலாச்சாரத்தை கொண்டுள்ளனர். ஆமை ஓடு ஆபரணங்கள் மற்றும் மர வேலைப்பாடுகளை விரிவான வடிவமைப்புடன் உருவாக்குகிறார்கள். பலவிதமான இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார்கள். சில பஜாவ் பழங்குடியினர் குதிரைகளை வளர்க்கிறார்கள். மண்பாண்டங்கள் செய்தல், படகு கட்டுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். பத்து மொழிகளை பேசுகிறார்கள். பஜாவ் மக்கள் பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள் மற்றும் ஷாஃபி பிரிவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அதிக அளவில் கடலோர கிராமங்களில் குடியேறி வருவதால் ரமலான் உள்ளிட்ட இஸ்லாமிய நாட்காட்டியை பின்பற்றுகிறார்கள். அத்துடன் இஸ்லாமிய மரணச் சடங்குகளை கடைபிடிக்கின்றார்கள்.
கடல் மற்றும் வானிலை தெய்வங்கள்:
இணையற்ற டைவிங் திறன்களுக்கு பெயர் பெற்ற இம்மக்கள் 'ஓம்போ திலாட்' என்ற கடல் தெய்வத்தை போற்றுகிறார்கள். ஓம்போ திலாட் மீனவர்கள் மற்றும் மாலுமிகளை வழிநடத்தி பாதுகாக்கும் தெய்வமாக பஜாவ் புராணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 'அம்போ கமுன்சுமு' என்பது வானிலையை கட்டுப்படுத்துவதற்கும், கடல் நாடோடிகளுக்கு சாதகமான காற்று மற்றும் அமைதியான கடலை உறுதி செய்வதற்கும் பொறுப்பான தெய்வமாக எண்ணுகிறார்கள்.
சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்:
பகண்டுலி மற்றும் படேவனன் என்பது தங்கள் தெய்வங்களையும் ஆவிகளையும் கௌரவிப்பதற்காக நடத்தும் குறிப்பிட்ட சடங்காகும். திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மீன்பிடி பருவத்தின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளின் பொழுதும், நெருக்கடியான காலங்களிலும் பகண்டுலி சடங்கு செய்யப்படுகிறது. படேவனன் என்பது நோய்களை குணப்படுத்தவும், தீய ஆவிகளை தடுக்கவும் மேற்கொள்ளப்படுகிற சடங்காகும். இதில் பிரார்த்தனைகள், மந்திரங்கள் மற்றும் மூலிகை மருந்துகளின் கலவையை பயன்படுத்தி குணப்படுத்துகிறார்கள்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள், கடல் வாழ் உயிரினங்களை நேரடியாக பாதிக்கும் வெப்பநிலை உயர்வு, நீரில் ஏற்படும் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடுகள் இந்த பஜாவ் பழங்குடி மக்களின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது அவர்களை பெரிதும் பாதிக்கிறது. எனவே சுற்றுச்சூழலை மாசுபாடின்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.