
பறவைகளில் மிகப்பெரியதாக இருக்கும் நெருப்புக்கோழி (Ostrich) 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. ஒவ்வொரு பறவைக்கும், அதன் இரண்டு கால்களில், ஒவ்வொரு காலுக்கும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட விரல்கள் இருக்கும். ஆனால், நெருப்புக் கோழியின் ஒவ்வொரு காலிலும் இரண்டு கால் விரல்கள் மட்டுமே இருக்கின்றன. இருப்பினும், நெருக்கோழியின் கால்கள் மிகவும் வலிமையானவை. இதன் பெரிய, உள் கால் விரலில் உள்ள நகம் ஒரு குளம்பை ஒத்திருக்கிறது. வெளிப்புறக் கால் விரலில் நகம் இல்லை. கால் விரல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இப்பறவை வேகமாக ஓடுவதற்கு உதவுகிறது. இக்காலின் அமைப்பு வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் உதவியாக இருக்கின்றன. பொதுவாக, நெருப்புக் கோழிகள் மணிக்கு 70 கி.மீ (43 மைல்) வேகத்தில் ஓடக்கூடியவை. ஒரே அடியில் 3 முதல் 5 மீ (9.8 முதல் 16.4 அடி) வேகத்தில் ஓடும் திறனைப் பெற்றிருக்கின்றன.
நெருப்புக் கோழிகளின் கால்களைப் போன்றே, ஜிம்பாப்வேயைப் பூர்விகமாகக் கொண்ட வேட்டைக்காரச் சமூகத்தைச் சேர்ந்த டோமா அல்லது வாடோமா பழங்குடியினருக்கும் ஒவ்வொரு காலிலும் இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கின்றன.
சிலருக்கு மூன்று விரல்கள் இருக்கின்றன. மிகச் சிலருக்கு மட்டும், நம்மைப் போன்று ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள் இருக்கின்றன. எனவே, இப்பழங்குடியினரை நெருப்புக் கோழி கால் மனிதர்கள் என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணமென்ன? என்று அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா...?
காரணமறிந்து கொள்வதற்கு முன்பாக, இந்தச் சமூக மக்களைப் பற்றிச் சிறிதாகத் தெரிந்து கொள்வோம். டோமா புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படி, இப்பழங்குடியினர்களின் முன்னோர்கள் ஒரு பாபாப் மரத்திலிருந்து இறங்கி, வேட்டையாடவும், தங்கள் நிலத்தின் பழங்களைச் சேகரிக்கவும் நிமிர்ந்து நடந்ததாக நம்பப்படுகிறது. இன்றும், இப்பழங்குடியினர் மலைகளில் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மீன்பிடித்தல், வேட்டையாடுதல், காட்டுப் பழங்கள் மற்றும் வேர்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டும் இப்பழங்குடியினரின் அதிகாரப்பூர்வ மொழி ’டெமா’ என்று அழைக்கப்படுகிறது.
டோமா மக்களில் பெரும்பான்மையினர் 'எக்ட்ரோடாக்டிலி' எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 'லாப்ஸ்டர் நகம்' நோய்க்குறி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிய மரபணு நிலையில், நடுவில் உள்ள 3 கால்விரல்கள் இல்லாமல், 2 வெளிப்புற விரல்கள் உள்நோக்கித் திரும்பியுள்ளன.
இது குரோமோசோம் 7 இல் உள்ள ஒற்றைப் பிறழ்வால் ஏற்படுகிறது. மேலும், இது ஒரு ஆட்டோசோமால் ஆதிக்கம் செலுத்தும் முறையில் மரபுரிமையாகப் பெறப்படுகிறது. அதாவது பெற்றோரில் ஒருவருக்கு இது இருந்தால், அவர்களின் சந்ததியினருக்கும் இது ஏற்பட 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாய்ப்பு உள்ளது. இந்தப் பண்பினால், இப்பழங்குடியினர் நெருப்புக் கோழி கால் மனிதர்களாகி விட்டனர்.
டோமா மக்கள் தங்கள் குழுவிற்கு வெளியேத் திருமணம் செய்து கொள்வது அந்தச் சமூகப் பழங்குடி சட்டத்தின் காரணமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக, அவர்களது கால்களில் இருக்கும் கால் விரல்கள் இரண்டு எனும் நிலை அவர்களின் குழுவிற்குள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், அவர்கள் தங்கள் இரண்டு கால்விரல் கால்களை ஒரு குறைபாடாகக் கருதுவதில்லை. அவர்கள் இந்தக் கால் விரல்களின் எண்ணிக்கை இரண்டாக இருப்பதாலேயேப் பல்வேறு பணிகளை எளிதாகச் செய்ய முடிகிறது என்றும், இம்மக்களிடமிருக்கும் இரண்டு கால் விரல்களின் தன்மையால் மட்டுமே, மரங்களில் விரைவாக ஏறுவதற்கு உதவுகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.