சிந்தி நவராத்திரி: நீர் வழிபாடு முதல் 'சேவ் க்கீர்' வரை – அறியப்படாத ஆன்மீக ரகசியங்கள்!

ஜூலேலால் வழிபாடு, 'அக்கா' சடங்கு மற்றும் தனித்துவமான விரத உணவுகளின் சுவாரசியமான பின்னணி.
சிந்தி நவராத்திரி - Sindhi Navratri
சிந்தி நவராத்திரி - Sindhi NavratriImage credit: Gemini
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on: 

சிந்தி (Sindhi) சமூக மக்களின் நவராத்திரி திருவிழாக் கொண்டாட்டம் மற்ற மாநிலங்களின் வழிபாட்டு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டது.

சிந்தி மக்கள் நவராத்திரி நாட்களைத் தங்கள் குலதெய்வமான ஜூலேலால் (Jhulelal / Varun Dev - நீர் மற்றும் கடல்களின் கடவுள்) மற்றும் துர்க்கா தேவி இருவரையும் ஒன்றிணைத்து மிகக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

'சாளிஹோ' மற்றும் நவராத்திரி விரதம்:

சிந்தி மக்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மிகக் கடுமையான தூய்மை மற்றும் உணவுக் கட்டுப்பாடு களுடன் விரதம் மேற்கொள்கிறார்கள். இந்நாட்களில் பூண்டு, வெங்காயம் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, பழங்கள், பால் மற்றும் பிரத்யேகச் சிந்தி விரத உணவுகள் மட்டுமே உட்கொள்ளப் படுகின்றன. தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறக் குலதெய்வமான ஜூலேலாலுக்கு மெழுகுவர்த்தி அல்லது நெய் தீபங்கள் ஏற்றி சிறப்புப் பூஜைகள் செய்வர்.

'அக்கா' - தானியக் குடம் வழிபாடு:

நவராத்திரியின்போது சிந்தி இல்லங்களில் செய்யப்படும் மிக முக்கியச் சடங்கு 'அக்கா' (Akha) ஆகும். ஒரு சிறிய மண் குடத்தில் நீர் நிரப்பி, அதில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து வைப்பார்கள். ஒன்பது நாட்களும் தினமும் காலையிலும் மாலையிலும் தெய்வத்திற்குப் பூஜை செய்த பின், அந்த நீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் (ஆறு, ஏரி அல்லது கடல்) அர்ப்பணிப்பார்கள். இது நீர் வளத்திற்கும் குடும்பச் செழிப்பிற்கும் செய்யும் வழிபாடாகும்.

'சோஜ்ரோ' மற்றும் ஜோதி ஏற்றுதல்:

நவராத்திரியின் முதல் நாளன்று வீடுகளிலோ அல்லது சிந்தி பஞ்சாயத்து பவன்களிலோ 'அகண்ட ஜோதி' (Akhand Jyot) ஏற்றப்படும். இந்த தீபம் ஒன்பது நாட்களும் அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கும். இதனுடன் 'பல்லவ்' (Pallav) என்னும் சிறப்புப் பிரார்த்தனைப் பாடல்களைப்பாடி இறைவனை வழிபடுவார்கள்.

சிந்தி நவராத்திரி - Sindhi Navratri
சிந்தி நவராத்திரி - Sindhi NavratriImage credit: Gemini

பிரத்யேகச் சிந்தி நவராத்திரி உணவுகள்

நவராத்திரி விரதத்தின்போது சிந்தி மக்கள் தயாரிக்கும் சில பாரம்பரிய உணவுகள்:

சிங்கோட ஆட்டா (Singhara Atta) என்பது நீர்சிங்காரம் அல்லது நீர் அக்ரூட் (Water Caltrop / Water Chestnut) எனப்படும் நீர்வாழ் தாவரத்தின் விதைகளைக் காயவைத்து அரைத்துத் தயாரிக்கப்படும் மாவு ஆகும். இதில் குளுட்டன் (Gluten) இல்லாததால், இது நவராத்திரி போன்ற விரத நாட்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிங்கிஹாரே ஜோ ஆட்டா ஃபராலி பூரி (Singhare ke Aatte ki Puri): மரவள்ளிக்கிழங்கு அல்லது சிங்காரா மாவில் செய்யப்படும் விரதப் பூரி மிகவும் பிரசித்தி பெற்றது.

சேவ் க்கீர்(Sev Kheer / Samak Rice Kheer): சாமையரிசி மற்றும் பாலில் செய்யப்படும் சிறப்புப் பாயாசம் இது. இவைகளில் நிறைய நட்ஸ் வகைகளை சேர்த்து பாயசம் செய்து குளிர வைத்து சில்லென்று கொடுப்பார்கள். சில சமயங்களில் சேமியாவுடன் பால் சேர்த்து சுண்டக்காய்ச்சி நட்ஸ் சேர்த்து குளிரவைத்து அருந்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் ஆண்ட்ராய்டு போன் திருடு போய்விட்டதா? 5 நிமிடங்களில் லாக் செய்து, டேட்டாவை அழிப்பது எப்படி?
சிந்தி நவராத்திரி - Sindhi Navratri

ஆலுக் டுக் (Aloo Tuk - Farali): விரதத்திற்கு ஏற்ற வகையில் பாறை உப்பு (Rock Salt/Sendha Namak) சேர்த்துச் செய்யப்படும் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல்.

தஹி வடா (Dahi Vada - Farali): சாமையரிசி மாவில் செய்யப்படும் விரதத் தயிர் வடை அவர்கள் சமையலில் இன்று சிறப்பு பெரும்.

'சாண்ட்' -பாரம்பரிய நடனம்:

குஜராத்தி மக்களின் 'கர்பா' நடனத்தைப்போல, சிந்தி மக்கள் நவராத்திரி நாட்களில் தங்கள் பாரம்பரிய 'சாண்ட்' (Chhej) என்னும் நாட்டுப்புற நடனத்தை ஆடுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் ஜூலேலால் மற்றும் அம்பிகையின் புகழ்பாடும் பாடல்களுக்கு ஏற்றவாறு கைதட்டியும், சிறிய குச்சிகளைக்கொண்டும் வட்டமாக நடனமாடி மகிழ்வார்கள்.

சிறப்பம்சம்: சிந்தி சமூகம் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என்பதால், நவராத்திரியின் 10-வது நாளான விஜயதசமி அன்று தங்கள் கணக்கு புத்தகங்கள் (Account Books) மற்றும் தொழில் உபகரணங்களுக்குப் பிரத்யேகப் பூஜைகள் செய்து புதிய வணிக முயற்சிகளைத் தொடங்குவார்கள்.

இதுபோல் மிகவும் சுவாரசியமாகவும் பயபக்தி உடனும் நவராத்திரி வழிபாட்டை கொண்டாடி மகிழ்வார்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரே கூரையின் கீழ் தனித்தனியா? குடும்ப உறவுகளை இணைக்கும் 20 நிமிட அதிசயம்!
சிந்தி நவராத்திரி - Sindhi Navratri

குறிப்பு: திருமணமான புதிதில் டெல்லியில் வசித்த பொழுது எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் சிந்தி சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் வீட்டிற்கு அந்த சகோதரியின் கூட பிறந்த 16 பேரும் சேர்ந்து வந்து இந்தத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வார்கள். எங்களையும் அழைத்து மகிழ்விப்பார்கள்.

அப்பொழுது அவர்கள் செய்யும் பூஜை முறைகளை அருகில் இருந்து பார்த்து நாங்களும் ரசித்தோம். அந்த வித்தியாசமான கொண்டாட்டம் மற்றும் அவர்களின் சிறப்பான உணவு முறைகளும் என்றென்றும் மறக்க முடியாதவை.

logo
Kalki Online
kalkionline.com