
பொதுமக்களின் போக்குவரத்திற்கு எளிமையான மற்றும் விலை குறைந்ததாகவும் இருக்கிறது இரயில் போக்குவரத்து. பொதுவாக குறைந்த தொலைவு செல்லும் பயணிகள் மின்சார இரயில்களுக்கு பெயர் எதுவும் வைக்க மாட்டார்கள். ஆனால் தொலைதூரப் பயணத்திற்கு உதவும் ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் வைகை, பொதிகை மற்றும் காவேரி என பல இரயில்கள் உள்ளன. இந்தப் பெயர்கள் எப்படி வைக்கப்படுகின்றன என்பதை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறது இந்தப் பதிவு.
நம் நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து இரயில்வே. தினந்தோறும் இலட்சக்கணக்கான பயணிகள் இதன்மூலம் பயணம் செய்கின்றனர். இரயில்களுக்கு பெயர்கள் வைப்பதில் பொதுமக்களின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பல்வேறு காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு ரயில் இயக்கப்படும் பகுதியில் உள்ள தனிச் சிறப்புகள், ஆறுகள், நதிகள், மலைகள் மற்றும் சிறப்பு வாய்ந்த விழாக்கள் இவையனைத்தும் கருத்தில் கொள்ளப்படும்.
கோதாவரி எக்ஸ்பிரஸ்:
1974 ஆம் ஆண்டு இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய கோதாவரி எக்ஸ்பிரஸ், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தொடக்க காலத்தில் மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் இருக்கும் 9 இரயில் நிலையங்களுக்கு இந்த இரயில் பயணித்தது. இதில் கோதாவரி சுற்றுவட்டார மக்கள் அதிகம் பேர் பயணித்ததால், கோதாவரி நதியின் பெயராலேயே கோதாவரி என பெயர் சூட்டப்பட்டது.
சபரி எக்ஸ்பிரஸ்:
ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் இது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இந்த இரயிலில் தான் பக்தர்கள் பயணிக்கின்றனர். ஆதலால் தான் சபரி எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
திருமலை எக்ஸ்பிரஸ்:
விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதிக்கு பயணிகள் செல்ல ஏதுவாக இயக்கப்படும் இரயில் தான் திருமலை எக்ஸ்பிரஸ். பக்தர்கள் பெருமாளை தரிசிக்கும் விதமாக, இந்த இரயிலுக்கு திருமலை என பெயர் வைக்கப்பட்டது.
இதுமாதிரி தனிச்சிறப்புடன் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். பல இரயில்களுக்கு அவை சென்று சேரும் இடத்தின் பெயரைத் தான் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மும்பை மெயில், சென்னை மெயில் மற்றும் பெங்களூர் மெயில் என பல ரயில்களைக் கூறலாம்.
இரயில்களுக்கு பெயர் வைக்கும் போது அந்த இரயிலில் பயணிக்கும் பொதுமக்களின் கருத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும். இதன்படி பொதுமக்கள் தங்களின் ஆலோசனையை அருகில் உள்ள உள்ளூர் இரயில் நிலையம் அல்லது அலுவலகத்தில் இருக்கும் ஆலோசனைப் பெட்டியில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் வழங்கும் ஆலோசனையை விடவும், வேறொரு நல்ல பெயர் இருந்தால் அதற்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும். பொதுவாக மக்கள் பரிந்துரைக்கும் பெயர்கள் நதிகளின் பெயர்களாகவே இருக்கும். இதற்கு உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், நாகவல்லி எக்ஸ்பிரஸ் மற்றும் கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் என பட்டியல் நீள்கிறது.
இதுதவிர்த்து பெயர் வைக்கப்படாத இரயில்களும் உள்ளன. பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிறப்பு இரயில்கள் விடப்படும். இந்த இரயில்களுக்குப் பெயர் வைக்கப்படுவதில்லை. மேலும் எண்களால் குறிப்பிடப்படும் இரயில்களும் உள்ளன. பெயர் இல்லாத காரணத்தால், இந்த ரயில்களுக்காக பயணச்சீட்டு வாங்கும் போது பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.