ரயில் பயணம் வசதியானது மட்டுமல்ல, செலவு குறைவானதும் கூட. சிக்கனமான போக்குவரத்துக்கு ரயில் பயணமே சிறந்தது. ரயிலில் பயணம் செய்வதால் இலவச சேவைகள் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் பெற்று பயன் பெறலாம். படுக்கை வசதி முதல் உணவு வரை நாம் நிறைய நன்மைகளைப் பெற முடியும்.
இலவச உணவு: ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் பயணம் செய்யும்பொழுது இரண்டு மணி நேரத்திற்கு மேல் ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே துறையே உங்களுக்கு இலவச உணவை வழங்குகிறது. அத்துடன் ரயில் தாமதமாகும்பொழுது நல்ல உணவு ஏதாவது சாப்பிட விரும்பினால் ரயிலில் ஈ கேட்டரிங் சேவையில் உணவை ஆர்டர் செய்யலாம்.
இலவச மருத்துவ வசதி: ரயிலில் பயணம் செய்யும்போது உடல்நிலை சரியில்லை என்றால் ரயில்வே நமக்கு இலவச முதலுதவி வழங்குகிறது. நம் உடல்நிலை திடீரென்று மிகவும் மோசமாகப்போனால் ரயில்வே அதிகாரிகள், மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள். தேவைப்பட்டால் அடுத்த ரயில் நிறுத்தத்தில் மருத்துவ சிகிச்சை வசதியைப் பெற நியாயமான கட்டணத்தில் ஏற்பாடும் செய்து தருவார்கள். ரயில்வேயில் இந்த இலவச மருத்துவ வசதி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. உயிர்களைக் காப்பதில் முக்கியத்துவம் கொடுக்கும் மனித நேயம்மிக்க செயல் இது.
இலவச படுக்கை வசதி: நீண்ட தூரப் பயணம் செய்யும்பொழுது இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஏசி பெட்டிகளில் போர்வை, தலையணை, பெட்ஷீட்டுகள், துண்டு ஆகியவற்றையும் வழங்குகிறது. சில ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பிலும் கூட இந்த வசதிகள் உள்ளன.
காத்திருப்பு அறை: போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சில சமயம் ரயிலை பிடிப்பதற்காக ஸ்டேஷனுக்கு முன்கூட்டியே வந்து விடுவோம். அம்மாதிரி சமயங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயண டிக்கெட்டை காட்டி ஸ்டேஷனில் உள்ள ஏசி அல்லது ஏசி இல்லாத காத்திருப்பு கட்டடத்தில் பயணிகள் காத்திருக்கலாம். இந்த வசதி ரயிலை பிடிப்பதற்காக காத்திருக்கும் நேரத்தில் வசதியாக அமர்ந்து ஓய்வெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறுகிய கால பயன்பாட்டுக்கானது. இதற்கு காத்திருப்பு அறை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பொருட்கள் பாதுகாப்பு அறை: முக்கியமான ரயில் நிலையங்களில் லாக்கர் ரூம், க்ளோக் ரூம் எனப்படும் அறைகள் உள்ளன. இதில் நம் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும். இதற்கான கட்டணமும் உண்டு. அதை செலுத்தி இந்த அறைகளில் நம் பொருட்களை அதிகபட்சம் ஒரு மாதம் வரை கூட வைத்திருக்கலாம்.
ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கோயில்களையோ, சுற்றுலா தலங்களையோ பார்க்க வேண்டி இருப்பின் நம் பொருட்களை பத்திரமாக லாக்கரில் வைத்துவிட்டு அருகில் உள்ள இடங்களை சுற்றி பார்த்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அடுத்து பயணிக்க வேண்டிய ரயிலை பிடிக்க வசதியாக இருக்கும் இந்த லாக்கர் அறைகள்.
ஓய்வு அறைகள்: முக்கியமான ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் வசதி உண்டு. இதற்கு முன்பதிவு அவசியம். ஏசி மற்றும் ஏசி இல்லாத ஒற்றை மற்றும் இரட்டைப் படுக்கையறை வசதிகள் உள்ளன. இதற்கு குறைந்தது 12 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.