கண்கவர் கோபுரம்; கட்டடக்கலையோ கம்பீரம் - கங்கை கொண்ட சோழபுரம்! கவனிக்க வேண்டிய 13 அம்சங்கள்!

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

அரியலூர் மாவட்டத்தின் ஒரு சிற்றூராக இன்று விளங்கும் கங்கை கொண்ட சோழபுரம், பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக இவ்விடம் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தியோடு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும் இது. கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது இந்த பதிவு!

கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிவிட்டு கங்கை நீரைக் கொண்டுவந்த முதலாம் ராஜேந்திர சோழன், விரிந்துவிட்ட சோழப் பேரரசைத் திறம்பட நிர்வகிக்க வேண்டி தஞ்சையிலிருந்து இன்னும் வடக்கு நோக்கி நகர்ந்து இந்த இடத்தைத் தன் தலைநகராக்கினான். கங்கை கொண்டவன் ஆதலால் இவ்விடம் கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர் பெற்றது.

இங்கே சிவாலயம் ஒன்றை எழுப்பி ஏரி ஒன்றையும் வெட்டினான். சிவாலயத்தில் அருள்பாலிக்கும் சிவபிரானுக்கு கங்கை கொண்ட சோழீஸ்வரர் என்றும் ஏரிக்கு சோழகங்கம் என்றும் பெயரிட்டான். வடக்கிலோடும் ஜீவநதியான கங்கை நீரைக் கொண்டு சிவபெருமானுக்கு திருநீராட்டினான்.

1000 ஆண்டுகள் உருண்டோடி வந்துவிட்டது காலச்சக்கரம் என்றாலும் இன்றும் நிலைத்திருக்கிறது இக்கோவில். ஆனால் முழுமையாக அல்ல என்பது வருத்தமளிக்கத்தான் செய்கிறது. இக்கோவில் இன்று ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

இங்கே கவனிக்க வேண்டிய 13 சிறப்பம்சங்கள் இதோ..

1. சற்று தொலைவிலேயே ராஜ கோபுரம் காட்சி கொடுத்து வரவேற்கும். தஞ்சை பெரிய கோவிலோடு ஒத்துப்போகிறதே என்ற எண்ணம் வரும். ஆனால் தஞ்சை பெருவுடையார் கோவிலை விட இக்கோவில் கோபுரத்தின் அடி அகண்டிருப்பதையும் உயரம் குறைந்திருப்பதையும், பெரிய கோவில் கோபுரத்தைப்போல் நேராக கம்பீரமாக ஆண்மையோடு அல்லாமல் வளைவுகள் கொண்ட பெண் கோபுரமாக அழகியல் துதம்ப இது வடிவமைக்கப்பட்டிருப்பதையும் கிட்டே சென்றபின் கண்டுபிடிக்கலாம்.

2. முதல் வாயில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. சேதப்படுத்தப்பட்டு பாதியாய் மேற்கூரையின்றி காட்சியளிக்கும் இரண்டாவது வாயிலே உங்களை வரவேற்கும். உள்ளே நுழையும் வழியில் சிறு மேடை உள்ளது. புகைப்படப் பிரியர்கள் அங்கே நின்று புகைப்படம் எடுத்தால் பின்புலத்தில் கோவில் பொருந்தி அழகான புகைப்படம் கிடைக்கும்.

3. குழுவில் பொருந்தாததை வட்டமிடுக என்று சொன்னால் இக்கோவிலின் நந்தியைத் தான் வட்டமிட வேண்டும். இக்கோவிலில் கொடிமரம் பலிபீடம் தாண்டியதும் ராஜேந்திரன் கட்டிவைத்த நந்தி சேதப்படுத்தப்பட்டு சுவடே இல்லாமல் அழிந்துவிட்டது. அதனால் பிற்காலத்தில் வந்த பாளையக்காரர்கள் செங்கல் சூண்ணாம்பினால் கட்டி வைத்த நந்தியம்பெருமான் இவர். அழகாக இருப்பார். கருங்கல் இல்லை என்பதைக் கவனித்தறியலாம்.

4. நந்தி தாண்டி இடப்புறம் வளைந்து படியேறினால் துவார பாலகர்கள் அடுத்தபடியாக உங்களை வரவேற்பார்கள். இவர்களின் சிலைகளும் பெரிய கோவிலோடு ஒத்துப்போவதாய்த் தோன்றும். ஆனால் இல்லை. களிறை விழுங்கும் பாம்பின் வால் நுனியை அசட்டையாய்ப் பிடித்தபடி ஆறு மீட்டர் உயரத்தில் சிரித்த‌ முகமாய் 'ஹாய்' சொல்கிறார்கள் இக்கோவிலின் வாயில் காவலர்கள். வாயில் காவலர்களே இத்தனை பெரியவர்களென்றால் அவர்கள் காவல் காக்கும் அந்த ஈசன் எத்தனை பெரியவர் என்று வியந்து கொண்டே உள்ளே செல்லுங்கள்.

5. துவாரபாலகர்கள் அனுமதியோடு கோவிலின் முகப்பு மாடத்தை அடையலாம். இந்த முக‌மண்டபத்தை இரு நிலைகள் கொண்டதாக கட்டியிருந்தான் சோழன். முதல் தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு தரைத்தளமும் 90% அழிந்துவிட்டதாம். பிற்காலத்தில் வந்தவர்கள் தரைத்தளத்தை மட்டும் புணரமைத்துக் கட்டியுள்ளார்கள். கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கற்களின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

6. முகமண்டபம் தாண்டி சந்நிதானத்தில் நுழைந்தால் அங்கே உற்சவ மூர்த்திகளும் பல்வேறு வாகனங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இடப்புறம் கனக விநாயகர் கையில் எழுத்தாணியோடு காட்சி தருகிறார். ராஜேந்திரன் ஒருமுறை தலைமை கட்டுமான சிற்பியை அழைத்து கோவில் கட்ட எத்தனை செலவாகியிருக்கிறது இதுவரை என்று கேட்டாராம். அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினாராம். அப்போது அருகே இருந்த இந்த கணபதி சட்டென்று அதுவரை ஆகியிருந்த கட்டுமான செலவுக் கணக்கினைச் சொன்னாராம். அதனால் கணக்கு விநாயகர் என்று அழைக்கப்பட்டு வந்தாராம் இந்த கனக விநாயகர்.

7. கருவறைக்குள் பிரும்மாண்டமாய்க் காட்சி தருகிறார் கங்கை கொண்ட சோழீஸ்வரர். கோபுரத்தைப் தஞ்சை கோவிலை விட குட்டையாக்கினாலும் லிங்கத்தைப் பெருவுடையாரையும் விடப் பெரிதாக நிறுவியுள்ளான் சோழமன்னன். ஆவுடையோடு சேர்த்து ஒற்றைக் கல்லால் ஆன லிங்கம் இது. உலக சிவாலயங்களிலேயே மிகப்பெரிய லிங்கத்திருமேனி இவர்தான். கர்ப்பக்கிரஹம் குளிரூட்டி போடப்பட்டது போல் குளுகுளுவென்று இருக்கிறது. இலங்கையைப் போரில் வென்று அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மிகமிக அரிதான, எல்லா கால நிலைகளிலும் குளுமையை வெளியிடக்கூடிய சந்திரகாந்தக்கல் கருவறைக்குள் எங்கோ இருக்கிறதாம். இது ராஜேந்திரன் இக்கோவிலுக்குள் வைத்த ரகசியமாம்.அதனால் தான் கருவறையில் இந்த குளுமையாம். நம்மாலும் அதை உணர‌ முடிகிறது. அன்னாபிஷேகத்தன்று தான் இங்கே அமோக‌ விஷேஷம். அன்னக்காப்பில் அத்தனை அழகாய்க் காட்சிதருகிறார் சோழீஸ்வரர்.

8. மூலவரைத் தரிசித்துவிட்டு தேவாரப் பதிகங்களை மனமுருகப் பாடி வேயுறு தோளி பங்கனை விடமுண்ட கண்டனை வணங்கிவிட்டு வெளியில் வந்தால் பத்மாசனத்தில் தியான நிலையில் ஞான லட்சுமி அருள்செய்கிறாள். வின்னமாக்கப்பட்ட சில கடவுளர் திருமேனிகளும் கண்ணில் படும். படிக்கட்டுகளில் இறங்கித் திரும்பி ராஜ கோபுரத்தைப் பார்த்து, அதன் அடிப்பகுதி சதுரமாகவும் மேல் பகுதி எண்கோண வடிவத்திலும் உச்சி வட்ட வடிவிலும் இருப்பதை கவனிக்கத் தவறிவிடாதீர்கள். ஒரு சிவலிங்கம் இந்த அமைப்பில் தான் வடிக்கப்படும். அதனால் இந்த கோபுரமே ஒரு லிங்கம் தான் என்பது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு.

9. கோபுரத்தை வணங்கிவிட்டுத் திரும்பினால் இருப்பது வட கைலாயம் என்ற சிறு கோவில். இப்போது சிதலமடைந்து வழிபாடற்ற கோவிலாக உள்ளது. அப்படியே கோபுர சிற்பங்களை ரசித்துக்கொண்டே பிரகாரம் சுற்றிப் பின்புறம் போனால் அரிதான நாகலிங்க மரத்தைக் காணலாம். நாகம் குடைபிடிக்க கீழே லிங்கம் இருப்பது போன்ற பூக்களை உடைய இந்த‌ மரத்தை ரசிக்கத் தவறிவிடாதீர்கள்.

10. தொடர்ந்து வலப்புறம் திரும்பி நடந்தால் இக்கோவிலுக்கு இரு தளங்கள் கொண்ட சுற்றுச்சுவர் இருந்ததற்கு சாட்சி சொல்லிக்கொண்டு எஞ்சி நிற்கும் சிறு பகுதி உங்கள் கவனத்தை ஈர்க்கும். வட கைலாயம் போல் தென் கைலாயம் என்ற சிறு கோவில் இந்தப்பக்கம் உள்ளது. இதில் ராஜேந்திரன் எந்த‌ கடவுளை நிறுவினானோ அவனுக்கே வெளிச்சம். பிற்காலத்தில் இது அம்மன் கோவிலாக்கப்பட்டிருக்கிறது. 9.5 அடி உயரத்தில் பேரழகியாய்க் காட்சிதருகிறாள் பெரியநாயகி. பெருவுடையாரோடு உடனுறைந்து பேரருள் பாலிக்கிறாள்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

11. ஈசன் சந்நதியிலிருந்து வலப்புறமாய் இறங்கும் படிகளின் பக்கச் சுவற்றில் வீணை இல்லாமல் தியான நிலையில் ஞான சரஸ்வதி காணப்படுகிறாள். படிகளின் முடிவில் கீழே சண்டிகேஸ்வரர் அருள் செய்கிறார். அவருக்கு ஈசனும் பார்வதியும் சண்டிகேஸ்வரன் என்று ஈஸ்வரப்பட்டம் கட்டி முடிசூட்டும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது உண்மையில் ராஜேந்திரனுக்கு முடிசூட்டிய காட்சி என்று சொல்கிறார்கள். எனில், மொத்த தென்னிந்தியாவையும் கங்கை சமவெளியையும், இலங்கை, கடாரம், கம்போடியா, சிங்கை, மலேசியா போன்ற கடல் கடந்த தீவுகளையும் கட்டி ஆண்ட சக்கிரவர்த்தியை விழிகள் விரிய பார்த்துவிட்டு நகர்ந்தீர்களேயானால் அடுத்த சிறு கோவிலுக்குள் நுழைவீர்கள். சாளுக்கிய நாட்டை வென்று அங்கிருந்து கொண்டு வந்த சிறு வயது துர்க்கை இந்தக் கோவிலுக்குள் 20 கைகளோடு உங்களுக்கு அருள் பாலிக்க காத்துக் கொண்டிருக்கிறாள். ராஜேந்திரன் ஈசனை வழிபடும் முன்னால் இவளை வழிபட்டுவிட்டுத் தான் கோவிலுக்குள்ளேயே போவானாம். காலடியில் மகிஷாசுரனை வதைத்தபடி சிரித்த முகத்தோடு அருள் பாலிக்கும் இந்த துர்கா தேவி மங்கல சண்டி என்று அழைக்கப்படுகிறாள். அவளையும் தரிசித்து விட்டு முன்னோக்கி நடந்தால் சிதலமடைந்த சில அழகிய சிற்பங்கள் கண்ணில் படும். தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் வெளிப்பட்ட இவையெல்லாம் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்று சொல்கிறார்கள்.

12. அடுத்ததாக ஒரு சிம்ம வடிவிலான சிறு மண்டபம் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அந்த மண்டபத்தின் பக்கத்தில் பெரிய அகண்ட கிணறு ஒன்றும் தென்படும். இது சிம்மக்கிணறு / சிம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிம்ம மண்டபமும் பாளையக்காரர்களால் அமைக்கப்பட்டது தான். இந்தக் கோவிலில் மழை நீர் சேமிப்பு கட்டுமானம் செய்யப்பட்டிருந்ததாகவும் மழை நீரும் கடவுள் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்யும் நீரும் இந்த கிணற்றில் வந்து வடியுமாறு அமைக்கப்பட்டு இருந்ததாகவும் சொல்கிறார்கள். சிம்ம வடிவில் உள்ள மண்டபத்தில் அந்த சிங்கத்தின் வயிற்றுப் பகுதியில் உள்பக்கமாக படிகள் இறங்குகின்றன. அந்தப் படிகளில் இறங்கி கிணறு நோக்கி நடக்க சுரங்கப்பாதை உள்ளதாகவும் அங்கே கிணற்றின் உவரி நீர் கொண்டு குளிப்பதற்கான வசதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. பாளையக்காரர்களின் ராணிகள் கோவிலுக்குள் நுழையும் முன்னே இந்த சிம்ம மண்டபத்தின் வழி இறங்கி சிம்ம தீர்த்தத்தில் நீராடி விட்டு பிறகு கோவிலுக்குள் செல்வதற்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். கோவிலைச் சுற்றி மிக அழகான சோலை பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதையும் கவனிக்க தவறாதீர்கள்.

13. மழைநீர் சேகரிப்பு அமைப்போடு, பொக்கிஷங்கள் வைக்கும் நிலவறை, பல ரகசிய சுரங்கப் பாதைகள், பதுங்கி இருக்க உதவும் அகழிகள் கூட இந்த கோவிலுக்குள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அனுமன் எழுதிய இராமாயணம்!
Gangaikonda Cholapuram

கூடுதல் தகவல்: வெளியில் ஒன்றிரண்டு பூக்கடைகள் இருக்கின்றன. பார்க்கிங் வசதியும் உள்ளது. 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். தொல்லியல் துறையின் பராமரிப்பில் தூய்மையான கழிப்பிட வசதியும் இருக்கிறது.

மொத்தத்தில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஆன்மீக அனுபவத்தை தரும் கங்கைகொண்ட சோழபுரம் நிச்சயமாக பார்க்க வேண்டிய ஓர் இடம். பக்திக்கும் வரலாற்றுக்கும் பஞ்சமில்லாத இத்தலத்துக்குக் குடும்பத்தோடு போய்வாருங்களேன். மேற்சொன்ன 13 அம்சங்களையும் கவனித்து வியந்து நம் பாரம்பரியத்தைப் பற்றி யுனெஸ்கோவோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் பெருமைப்பட்டுக்கொள்ளலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com