
எல்லோரா குகைகள்: மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகில் பாறைகளைக் குத்திக் கொண்டு உருவாக்கப்பட்ட 34 குகைகள் கொண்ட பெரும் கட்டடத் தொகுப்பு. கிமு 600 – கிபி 1000 காலக்கட்டத்தில் பண்டைய இந்தியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.
எல்லோரா குகை(Ellora caves) ஓவியங்களின் சிறப்புகள்
மத ஒற்றுமையின் சின்னம், எல்லோரா குகைகளில் பௌத்தம், இந்துமதம், ஜைன மதம் ஆகிய மூன்று மதங்களின் சிற்பங்கள், ஓவியங்கள் காணப்படுகின்றன. இது மதங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை, ஒன்றிணைவு, கலாச்சார பன்மை ஆகியவற்றின் சான்றாகும்.
கலை நயம்
குகைகளின் சுவர்களிலும் மேல் சுவரிலும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் மிகத் துல்லியமாக வரையப் பட்டுள்ளன. வண்ணப்பூச்சுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயற்கை மூலப்பொருட்கள் இன்று வரை நிறம் குன்றாமல் அழகுடன் உள்ளன.
எல்லோராவின் (Ellora caves) சிறந்த படைப்பு
உலகின் ஒரே பெரிய பாறையைத் துண்டித்து உருவாக்கப்பட்ட மிகப் பெரிய பாறைக் கோவிலாக புகழ் பெற்றது. பௌத்த குகைகள் (1 முதல் 12), இந்துக் குகைகள் (13முதல்29), ஜைன குகைகள் (30 முதல் 34). அனைத்தும் நுணுக்கமான அலங்காரங்கள், ஓவியங்கள் கொண்டவை. இவை இந்தியாவின் கலை வளர்ச்சி மற்றும் மத பரிணாமத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்துகின்றன.
முக்கியமான சில ஓவியங்கள் மற்றும் சிற்பங்களின் காட்சிகள்
1. புத்தரின் வாழ்க்கைக் காட்சிகள்
புத்தர் தியானம், போதனை, தர்மச் சக்கரம் சுற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள், துயரங்களை கடந்து சமாதானம், தியானம், அறிவொளி அடைய வேண்டும் என்பதையும், மக்கள் தங்களின் உள்ளார்ந்த அமைதியையும், கருணையையும் வளர்க்கவும் பயனாகிறது.
2. கைலாசநாதர் கோவில் காட்சிகள்
சிவபெருமான், பார்வதி, நந்தி, கணேசர், கார்த்திகேயர் போன்றவர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், கைலாசக் கோவில் முழுதும் பிரபஞ்சத்தின் ஆற்றல், சுழற்சி, தெய்வீக சக்தி ஆகியவற்றைக் குறிக்கிறது.
3. ராவணன் கைலாசத்தை அசைப்பது
ராவணன் தனது வலிமையால் கைலாச மலையை அசைக்க முயலும் காட்சியானது அஹங்காரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தெய்வத்தின் ஆற்றலை வெல்ல முடியாது. இறைவனிடம் அடக்கம், பணிவு அவசியம் என்பதைக் கற்பிக்கிறது.
4. விஷ்ணுவின் ததசாவதாரங்கள் விஷ்ணுவின் மத்ஸ்யா, கூர்மா, வராஹா, நரசிம்மா, வாமனன் போன்ற அவதாரங்கள் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு அவதாரமும் மனிதனின் ஒழுக்கத்தை பாதுகாக்கவும் அசுரத்தனத்தை அழிக்கவும் இறைவன் எப்போதும் வெளிப்படுவார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மனித வாழ்வில் நல்லதின் வெற்றி, தீமையின் தோல்வி என்பதைக் குறிக்கும்.
5. சித்தார்த்தர் – பௌத்தராகும் காட்சி
இளவரசர் சித்தார்த்தர் துறவறம் பின்பற்றிச் “புத்தர்” ஆகும் தருணம் என்பது உலக வாழ்க்கையின் இன்பம் நிலையற்றது, ஆன்மிகச் சிந்தனை தான் உண்மையான ஒளி எனும் சத்தியம்.
ஜைன தீர்த்தங்கரர்கள் தியானத்தில் அமர்ந்த காட்சிகள், ஜைன தத்துவத்தின் அஹிம்சை, சத்தியம், துறவறம் போன்ற கொள்கைகளை வெளிப்படுத்துகிறது. உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு, மன அமைதி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
6. யானைகள், குதிரைகள், நடனக் காட்சிகள்
பல இடங்களில் யானைகள், குதிரைகள், வேட்டைக் காட்சிகள், நடனக் கலைஞர்களின் உருவங்கள், அக்காலத்தின் சமூக வாழ்க்கை, அரச வலிமை, கலை பண்பாடு ஆகியவற்றைக் காட்டுகிறது. வாழ்க்கையில் ஆன்மீகத்துடன் சேர்ந்து கலை, கலாச்சாரம் முக்கியமானவை என்பதையும் வெளிப்படுத்துகிறது.
7. சிவன் – நடராஜர் காட்சி
சிவபெருமான் பிரபஞ்ச நடனத்தில் ஈடுபடும் காட்சியானது பிரபஞ்சத்தின் படைப்பு, நிலை, அழிவு ஆகியவை அனைத்தும் ஒரே தெய்வீக ஆற்றலின் கீழ் நடக்கின்றன. மனிதன் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
எல்லோரா குகை (Ellora caves) ஓவியங்களில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ஆன்மிக அர்த்தங்களையும், நெறிமுறைகளையும், அக்கால சமூக வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறது.