தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழ்ந்த கோட்டை பிள்ளைமார் பற்றிய அறியாத பல விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த சமூகத்தினர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மண் கோட்டையால் ஆன பகுதியில் வெளி உலகத்திற்கு தெரியாமல் பல ஆண்டுகாலம் வாழ்ந்து வந்தனர். அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே கோட்டை சுவரை தாண்டி வெளியே வந்தனர் இங்குள்ள பெண்களுக்கு வெளியே வர அனுமதி இல்லை .
கோட்டையை விட்டு வெளியே வரும் ஆண்கள் தங்களுக்கு தேவையான சாமான்களை வெளியில் இருந்து வாங்கி வந்தனர். இவர்கள் நன்குடி வெள்ளாளர்கள் என அழைக்கப்பட்டனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளபடி பாண்டிய மன்னர்களால் இந்த கோட்டை இவர்களுக்காக கட்டப்பட்டது. இங்குள்ள மக்கள் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இவர்கள் வட திசையில் இருந்து நாடோடிகளாக வந்த போது பாண்டிய மன்னனின் கனவில் ஐந்து தலை நாகம் தோன்றி இவர்களுக்கு தங்குமிடம் செய்து தர கூறியதாக வரலாறு உண்டு. இவர்கள் பாண்டிய மன்னர்களுக்கு முடி சூட்டவும் அரசு அதிகாரத்தில் ஆலோசனை கூறவும் போர் தந்திரங்கள் கூறவும் உதவியாக இருந்து வந்தனர்.
இவர்கள் முதலில் ராமநாதபுரத்தில் உள்ள பாண்டிய மன்னர்களுக்கும் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இந்த சமூகத்தினர் பாண்டிய மன்னர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்திருந்தனர் . அங்கு இருந்தபோது பாண்டிய மன்னருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அதன் படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பாண்டிய மன்னர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் வந்து தங்கினார்கள். இந்த கோட்டையில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டை 22 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
மூன்றரை மீட்டர் உயரமும் ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட மண் சுவர்களாலான கோட்டையாகும். மண், பதநீர், சுண்ணாம்பு இவைகளால் ஆன உறுதியான கோட்டை ஆகும். கோட்டைக்கு நான்கு வாசல்கள் உண்டு. கோட்டையின் மேற்கு வாசலை ஆண்கள் பயன்படுத்தி வந்தனர். கிழக்கு வாசல் எப்போதும் அடைக்கப்பட்டு இருக்கும்.
பெண்கள் யாரேனும் இறந்தால் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அவர்களின் சடலம் தாமிரபரணி நதிக்கரையில் எரிக்கப்பட்டு மீண்டும் கிழக்கு வாசல் மூடப்படும். நான்கு வாசலுக்கும் எப்போதும் ஆண்கள் காவலுக்கு நிற்பார்கள். நாவிதர், வண்ணான், கோவில் பூசாரி இவர்களுக்கு மட்டும் உள்ளே வர அனுமதி உண்டு. கோட்டையில் உள்ள அழகர் கோவிலில் பூஜை செய்ய அர்ச்சகருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆண்கள் இறந்தால் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள இடமில்லை.
கோட்டை உள்ளே குழந்தை பிறப்பு நடைபெற்றால் அந்தக் குழந்தையை பார்ப்பதற்கு உள்ளே இருப்பவர்கள் ஓலைப்பெட்டியில் நெல் வைத்து பார்க்கச் செல்வார்கள். 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு பின்னர் தங்கள் இனத்தை சைவப் பிள்ளைமார் இவர்களுடன் இணைத்துக் கொண்டனர். இவர்கள் உள்ளேயே கல்வி கற்று வந்தனர். 1911 நிலவரப்படி கோட்டையில் 400 நபர்கள் இருந்தனர் 1970 இல் 300 நபர்கள் இருந்தனர். 1985 ஆம் ஆண்டு 34 நபர்கள் மட்டுமே இருந்தனர். 1972 ஆம் ஆண்டு கோட்டையில் இருந்து சண்முகசுந்தர் ராஜா என்பவர் அரசியலில் நுழைந்தார் .
பின்னர் அவர் அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார் . அப்போதுதான் முதல் முதலாக போலீசார் கோட்டை உள்ளே விசாரணைக்குச் சென்றனர். அந்த அவமானம் தாங்காமல் கோட்டையில் இருந்த 34 நபர்களும் கோட்டையை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
1985 இல் அனைவரும் வெளியேறிய பின்னர் கோட்டை வெற்றிடமாக மாறிவிட்டது. தற்போது இந்த கோட்டையில் உள்ளே அரசு போக்குவரத்து பணிமனை, பிஎஸ்என்எல் ஆபீஸ் மற்றும் சில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோட்டை பிள்ளைமார் இருந்த இடமே சுவடு தெரியாமல் மாறிவிட்டது.