18 மாதங்கள் உயிருடன் வாழ்ந்த தலையில்லா கோழியின் கதை... இல்லை, இல்லை இது நிஜம்!

அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. அந்த சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம்.
mike the headless chicken
Mike the headless chicken
Published on

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு கொலராடோ. இந்நாட்டில் 'ஹெட் லெஸ் சிக்கன்' என்ற விழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மே மாத மூன்றாம் வார இறுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டில் உள்ள ப்ரூடா நகரில் இந்த விழாவை கொண்டாடுகின்றனர். இந்த விழாவிற்கு முக்கிய காரணம் மைக் (Mike) என்ற கோழியாகும். இது ஒரு Wyandotte வகை ஆண் கோழி. அதிசய மைக் எனப் பெயரிடப்பட்ட இந்த கோழி தலை துண்டிக்கப்பட்ட பிறகும் சுமார் 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது. அந்த சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம்.

அது 1946-ம் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர். அமெரிக்காவின் கொலாராடோவில் இருந்த லாய்டு ஆல்சன் என்ற விவசாயி, அன்று வழக்கம்போல் தனது பண்ணையில் வளர்த்துக்கொண்டிருந்த கோழிகளை இறைச்சிக்காக வெட்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான் மைக் அவர் கைக்கு வந்தது. அவரும் பத்தோடு பதினொன்றாக அதன் தலையை வெட்டிக் கீழே போட இறந்த கோழிகளைச் சுத்தம் செய்த மனைவி அந்த சேவலைக் கையில் எடுக்கக் குனிந்தார். ஆனால், கீழே விழுந்த அந்தத் தலையில்லா சேவல் துள்ளி எழுந்து அங்கும் இங்குமாக ஓடியது. அதிர்ந்துபோன இருவரும், 'முதலில் அஞ்சினாலும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதைப் பிடித்து ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்தனர். "தலையில்லாமல் எவ்வளவு காலம் இருந்துவிடும், எப்படியும் காலையில் இறந்துவிடும்... பயப்படாதே..." என்று மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு லாய்டு தூங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலை பெட்டியைத் திறந்து பார்த்தபோது அந்தச் சேவல் சாகவில்லை. "இது எப்படி...?" என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர். காரணம் தெரியாமல் இருவரும் திகைத்து நின்றனர். இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ள அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். பிறகு அதை விற்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.செய்தி அமெரிக்கா முழுவதும் பரவியது.

ஹோப் வேட் என்ற தயாரிப்பாளர் மைக்கைத் தேடி வந்து, தலையில்லாத கோழியின் மர்மத்தைத் தீர்க்க, அந்தப் பறவையை உட்டா பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு தம்பதியினரை ஊக்குவித்தார். சேவல் ஆய்விற்கு சென்றது. ஆய்வில் மைக்கின் அலகு, முகம், கண்கள் மற்றும் காது ஆகியவை அகற்றப்பட்டதாகவும். இருப்பினும் சேவலின் மூளையின் 80% வரை - மற்றும் கோழியின் உடலைக் கட்டுப்படுத்தும் இதயத் துடிப்பு, சுவாசம், பசி மற்றும் செரிமானம் உட்பட பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. வெட்டுக்குப் பிறகு, ஒரு இரத்தக் கட்டி கோழிக்கு இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுத்தது - மைக் உயிர் பிழைப்பதற்கான சரியான சூழ்நிலையை உருவாக்கியது.

சேவலின் மூளையின் முக்கிய பகுதி பாதிக்கப்படாமல் இருந்ததால் அது உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும், சேவலுக்கு உணவானது சிறிய குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உணவுக்குழாயில் உணவு சிக்காமல் இருக்க நீரானது சிரஞ் மூலம் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 18 மாதங்கள் மைக் உயிரோடு இருந்தது.

இதையும் படியுங்கள்:
கருப்பு முட்டையிடும் கோழி பற்றித் தெரியுமா?
mike the headless chicken

இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. லாய்டு ஓல்சன் 'மிராக்கிள் மைக்' உடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார். மேலும் அந்த சேவல் ஒரு ஊடக ஈர்ப்பாக மாறியது. டைம் அண்ட் லைஃப் போன்ற பத்திரிகைகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

லாய்டு குடும்பம் கலிபோர்னியா மற்றும் அரிசோனாவில் சாலை நிகழ்ச்சிகள் நடத்தி 25 சென்ட் கட்டணத்தில் பொதுமக்களுக்கு தலையில்லாத சேவலை காட்சிப்படுத்தினர். ஆனால் 18 மாதங்களுக்கு பிறகு துரதிர்ஷ்டவசமாக உணவுக்குழலில் உணவு சிக்கி மைக் உயிரிழந்தது. அதன் பின்னர் மைக்கை நினைவுகூறும் வகையில் "ஹெட் லெஸ் சிக்கன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
உலக அளவில் பிரபலமான 10 கோழி இனங்கள் தெரியுமா?
mike the headless chicken

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com