Strokkur Fountain: பூமிக்கு அடியில் ஆக்ரோஷமான வெந்நீர்! ஐஸ்லாந்தின் பீறிட்டு அடிக்கும் அதிசய நீர் ஊற்று!

Strokkur fountain
Strokkur fountain
Published on

நார்வேயைச் சேர்ந்த கடற்கொள்ளைக்காரனான நாடோட் (Naddodd the Pirate) என்பவன் கி.பி. 860ம் ஆண்டு ஃபரோ தீவுகளை (Faroe Islands) நோக்கிக் கப்பலில் சென்று கொண்டிருந்தான். அப்போது பெரும் புயல் ஒன்று அடிக்க, அவன் இதுவரை பார்த்திராத ஒரு தீவில் ஒதுங்க நேரிட்டது. அங்கு தனது கப்பலைப் பழுது பார்த்த நாடோட் திரும்பி நார்வே வந்து தான் கண்ட காட்சிகளை மக்களிடம் விவரித்தான். இதனால் ஆச்சரியப்பட்ட ஃப்ளோகி வில்டர்கார்ஸன் (Floki Vildergarson) என்பவர் தானே அந்த தீவைப் பார்க்க வேண்டும் என்ற முனைப்புடன் அங்கு பயணமானார். அங்கு பிரம்மாண்டமான பனிப்பாறைகளைக் கண்டு வியந்த அவர் அந்த தீவிற்கு ஐஸ்லேண்ட் என்ற பெயரை இட்டார்.

பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அந்தப் பகுதியில் மிகப் பெரும் தீவாக விளங்கிய ஐஸ்லாந்து, இரண்டாயிரம் ஆண்டுகளில் 30 எரிமலைகளால் 125 வெடிப்புகளைக் கண்ட ஒரு தீவாகும்.

ஐரிஷ் துறவியான ப்ரெண்டென் (Brendan) என்பவரே நாடோட் செல்வதற்கு முன்னர் அந்தத் தீவிற்குச் சென்ற முதல் நபராவார்.

தனியாக தவம் செய்ய வேண்டும் என்று ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கிளம்பிய அவர் கி.பி. 575ம் ஆண்டு இந்த இடத்திற்கு வந்தார். கடல் நடுவே மர்மமான மலை மேகங்கள் சூழ்ந்து இருந்ததையும், ஒரு மலையின் உச்சியில் தீப்பிழம்புகள் ஒளிர்ந்ததையும் அவர் கண்டு ஆச்சரியப்பட்டார்.

ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் இருந்த 4892 அடி உயரமுள்ள 'மவுண்ட் ஹெல்டா' என்ற எரிமலை வெடித்துத் தீப்பிழம்பு கக்குவதை அவர் பார்த்தார். இந்த மலைக்கு வடமேற்கே ஹ்விடா என்ற நதி ஓடிக் கொண்டிருந்தது. இங்கு தான் உலக பிரசித்தி பெற்ற ஒரு வெந்நீர் நீரூற்று பீறிட்டு சுடுநீரை 230 அடி உயரம் வரை வானளாவச் செலுத்திக் கொண்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வெந்நீர் நீரூற்றுக்கள் இங்கு உள்ளன.

1815ம் ஆண்டிலிருந்து 1916ம் வரை இந்த நீரூற்றுகள் இயங்கிக் கொண்டிருந்தன. பின்னர் திடீரென்று நீரூற்றுகள் செயலிழந்தன. பின்னர் மீண்டும் 1935ம் ஆண்டு இயங்கத் துவங்கின. இந்த வெந்நீர் ஊற்றுக்களில் ஸ்ட்ரோக்குர் ஐஸ்லாந்தின் மிகப் பெரும் நீரூற்றாகத் திகழ்கிறது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது அமைதியான தெளிவான நீரைக் கொண்டிருப்பது போல இது காணப்பட்டாலும் சற்று நெருங்கிப் பார்த்தால், அங்கு எழும் நீராவி அனைவரையும் திகைப்படைய வைக்கும். 100 அடி உயரம் வரை இது வெந்நீரைக் கக்குகிறது.

உயரே செல்லும் நீர் கீழே விழுந்து அழகிய ஸ்ட்ரோக்குர் நீரூற்று (Strokkur fountain) உருவாக்குகிறது. 'ஸ்ட்ரோக்குர்' என்ற வார்த்தைக்குக் ஐஸ்லாந்து வழக்கு மொழியின் 'படி கடைதல்' என்று பொருள். ஒரு மணி நேரத்திற்கு ஏழு முறை இது பொங்கி எழுகிறது – இரவும் பகலுமாக!!

இப்படி இயற்கையாகக் கிடைக்கும் சுடுநீரைப் பயன்படுத்த ஐஸ்லாந்து மக்கள் முன்வந்து, 1942ம் ஆண்டு மிக பிரம்மாண்டமான குழாய்களை அமைத்து இந்த வெந்நீரை ரெய்க்ஜாவிக் (Reykjavik) என்ற ஐஸ்லாந்தின் தலைநகரத்தைச் சுற்றிப் பயன்படுத்த வழி வகுத்தனர்.

இதையும் படியுங்கள்:
ஒரே ஆண்டில் டபுளாக உயர்ந்த தங்கம் விலை.. இனி நகை வாங்கவே முடியாதா?
Strokkur fountain

உலகிலேயே இயற்கையாக் கிடைக்கும் சுடுநீரைப் பயன்படுத்துவதில் இந்தப் பகுதி முன்னணியில் இருக்கிறது. புவி வெப்ப சக்தியைப் (GeoThermal energy) பயன்படுத்த வழி வகுத்தது, ஸ்ட்ரோக்குர் நீரூற்று என்றால் அது மிகையாகாது. இயற்கையின் விந்தைகளில் சூடான விந்தை ஸ்ட்ரோக்குர் தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com