எவ்வளவுதான் செயற்கை நிறங்கள் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தாலும், இயற்கை நிறங்களைக் கொண்டு வரையப்படும் ஓவியங்களுக்கு ஈடாகுமா? தென்னிந்தியாவில், ஓவியங்களுக்கு பேர் போன, பெருமை மிக்க தஞ்சையில், வரையப்படும் ஓவியங்கள் பற்றியும், வரைவதற்கு பயன்படும் நிறங்களை உருவாக்கும் விதம் பற்றியும், தஞ்சை ஓவியங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
தஞ்சை ஓவியம் உருவான விதம்
தஞ்சை நகரம் கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இசை மற்றும் நடனம் போன்ற கலைகளுக்கு பேர் போன இடமாக திகழ்வதால் ‘தென்னிந்தியாவின் கலைகளின் தொட்டில்’ என்று அறியப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகள் பழமைமிக்க இந்த ஓவியம், 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் தோன்றியதால் ’தஞ்சை ஓவியம்’ ஆயிற்று. 1676ல் தஞ்சையில் மராட்டிய கட்டுப்பாடு நிறுவப்பட்டதை அடுத்து, மராட்டிய மன்னர்கள் மற்றும் கலைஞர்கள், கலைகளின் வளர்ச்சியை ஊக்குவித்தனர். அக்காலக் கட்டத்தில் தஞ்சை ஓவியம் பரவி, இன்றளவும் போற்றப்படுகிறது.
தஞ்சையின் கலைஞர்கள், ஓவிய நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு நிலைகளில் இந்து கடவுள்களையும், தெய்வங்களையும் சித்தரிக்கின்றனர். இயற்கை முறையில் நிறங்களை உருவாக்கி, மரப்பலகையில் ஓவியம் தீட்டப்படுவதால், இது ’பலகைப் படம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தஞ்சை ஓவிய முறை
பலா மரம் அல்லது தேக்கு மரத்தாலான பலகைகளில் வரையப்படுவதால், ‘பலகைப் படம்’ என்றழைக்கப்படுகிறது. இந்த ஓவியம், அதன் துடிப்பான வண்ணங்கள் மற்றும் தங்க இலை அலங்காரங்களுக்கு பேர் போனது.
இதில், வெட்டப்பட்டக் கண்ணாடி, முத்துக்கள், விலை மதிப்பற்ற கற்கள் அலங்காரக் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கலைஞர்கள், காய்கறி மற்றும் கனிம சாயங்களைப் பயன்படுத்தி இயற்கை வண்ணங்களை உருவாக்கினர். இவற்றின் வண்ணத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பச்சை, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் துடிப்பான 'டோன்' தஞ்சை ஓவியத்தை மற்ற ஓவியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பால கிருஷ்ணர், ராமர் போன்ற பல கடவுள்கள், தெய்வங்கள், துறவிகள் மற்றும் இந்து புராணங்களில் உள்ள உருவங்கள் தஞ்சை ஓவியத்தின் மையக் கருக்களாக அமைகின்றன.
தஞ்சை ஓவிய சிறப்பு
தஞ்சை ஓவியத்தின் தனித்துவமாக விளங்குவது அதன் முப்பரிமாண கெஸ்ஸோ வேலைப்பாடு. இந்த ஓவியங்களுள், மீனாட்சி திருமணம், ராதாவுக்கும் கிருஷ்ணருக்குமான காதல் இடைவெளிகள் மற்றும் ஸ்ரீராமரின் முடிசூட்டு விழா போன்ற குறிப்பிட்ட புராணக் கதைகள் அடங்கும். செழுமை மிக்க துடிப்பான நிறங்கள், உருவப் படங்கள், தங்க இலை, உருவங்களின் பார்வை சித்தரிப்பு, தடித்த மரச் சட்டங்கள் போன்றவை தஞ்சை ஓவியங்களை மேலும் சிறப்பிக்கின்றன.
இயற்கை வண்ண ஓவியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கலையை அங்கீகரிக்கும் விதமாவும், 2007ல் தமிழக அரசு தஞ்சை ஓவியத்திற்கு புவிசார் குறியீடு வழங்கி தஞ்சையின் அடையாளமாக்கியது. இது பல்வேறு ஓவிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.