'பிக்காசோவின் நீலக்காலம்' - பிக்காசோவின் ஓவியங்கள் விற்பனையாகாமல் மோசமடைந்ததற்கு காரணமென்ன?
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ (Pablo Picasso). இவர் ஓவியர் மட்டுமில்லை, சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத்திறன் பெற்றவர். 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஓவியர்களுள் ஒருவராக அறியப்பட்டவர்.
1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் என்று இவரின் கலைப்படைப்புகள், பிரான்சின் பாரிஸ் அரும்பெருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அவிக்னோக் பெண், பர்ட்டாட் சிடின் சித்திரம், பெண் குதிரையில் உள்ள சிற்பம், குட்டையான நடனக்காரர், நோயாளிக் குழந்தை, இத்தாலியப் பெண்கள், அழும் பெண், மனிதனின் மூன்று யுகங்கள், பெண்ணின் உடல், கிட்டார், இரண்டு குழந்தைகள், மரத்தின் கீழ் நாய் மற்றும் குவர்னிகா ஓவியங்கள் போன்றவை இவருடைய படைப்புகளில் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.
முதலாம் உலகப் போரின் போது, குவர்னிகா நகரில் குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இவர் வரைந்த குவர்னிகா ஓவியம் மிகவும் புகழ் பெற்ற ஓவியமாகும். ‘கொலாஜ்' சித்திர வேலைப்பாட்டைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப் பெற்ற இந்த ஓவியத்தில், யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகியவை இச்சித்திரத்தின் கருப்பொருளாக இருந்தது. தற்போது இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில், தனது ஓவியங்களில் நீல நிறத்தை முதன்மைப்படுத்தி ஓவியங்களை வரையத் தொடங்கினார். இந்த ஓவியங்களுக்கான கருப்பொருட்களாக ஏழைகள், விலக்கி வைக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தினார். இந்த ஓவியங்களில், நீல நிறச் சாயங்கள் மூலம் துயரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களின் வரவுக்குப் பின்பு, இவரது ஓவியங்களில் ஆர்வம் கொண்டிருந்தவர்களும், திறனாய்வாளர்களும், இவரது ஓவியங்களிலிருந்து விலகிச் சென்றனர். மக்கள் இவ்வாறான ஓவியங்களை வாங்கித் தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட விரும்பவில்லை. இருப்பினும், பிக்காசோ தொடர்ந்து இவ்வகையிலான நீல நிறச் சாயங்களுடனான ஓவியங்களையே வரைந்தார். அதனால் அந்த ஓவியங்கள் அனைத்தும் விற்பனையாகாமல் நின்று போனது, அவரது பொருளாதார நிலையும் மோசமானது.
1901 முதல் 1904 வரையான காலப்பகுதியில் பிக்காசோ இந்த நீல நிறச் சாயங்களிலான ஓவியங்களை அதிக அளவில் வரைந்திருந்தார். இக்காலத்தில் இந்த ஓவியங்களில் அரிதாகவே, வேறு சில நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இக்காலத்தில் வரையப்பெற்ற ஓவியங்கள் அனைத்தும், 'பிக்காசோவின் நீலக்காலம்' என்று சொல்லப்படுகிறது. 1901 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஓவியத் தொழிலில் மிகவும் புகழ் பெற்றவராக இருந்த பிக்காசோவின் ஓவியங்கள் துயரமானவைகளாகவும், நீல நிறச் சாயத்திற்கும் மாற்றமானதற்குக் காரணமென்ன?
பிக்காசோவின் நண்பர் கார்லோசு கசாகெமாசு என்பவர் தன்னைத் தானேச் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பின்பு, அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட்டது என்கின்றனர். நண்பனின் இறப்புச் செய்தியைக் கேட்டதிலிருந்துதான் நீல நிறத்திலான ஓவியங்களை வரையத் தொடங்கியதாக பிக்காசோவே ஒரு முறை கூறியிருக்கின்றார். இருப்பினும், கலை வரலாற்று ஆய்வறிஞரான எலன் செக்கெல் என்பவர், இது குறித்துச் சில ஐயங்களை எழுப்பியுள்ளார்.
"கசாகேமா பாரிசில் இறக்கும் போது, பிக்காசோ அங்கு இல்லை. பிக்காசோ மே மாதம் பாரிசுக்குத் திரும்பிய போது இறந்த நண்பனின் கலையகத்தில் பல வாரங்கள் தங்கி ஒரு கண்காட்சிக்குத் தயார்படுத்தினார்.
அக்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் பளிச்சிடும் நிறங்களையும், பகட்டான விடயங்களையும் கொண்டிருந்தன. 1901 ஆம் ஆண்டில் பிக்காசோவின் உளவியல் நிலைமை மோசமானது. அவ்வாண்டின் பிற்பகுதியில் பிக்காசோ கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். அதனால், அவர் ஓவியங்களில் நீலச் சாயையைக் கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.
ஆண்டின் முற்பகுதியில் அவரது நண்பர் இறந்த போது பிக்காசோ வரைந்த "கசாகெமாசின் இறப்பு" (La mort de Casagemas) என்னும் ஓவியத்தில் பிரகாசமான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. நீல நிறக் காலத்தின் முதல் ஓவியம் என்று கொள்ளத்தக்கது "தனது சவப்பெட்டியில் கசாகெமாசு" எனத் தலைப்பிட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியத்தை வரைந்து முடித்த காலத்தில் பிக்காசோ மோசமான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார். வழக்கமாக மற்றவர்களுடன் பழகுவதில் விருப்பம் கொண்டவரான பிக்காசோ இக்கட்டத்தில் தனது நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தார். இவரது மன அழுத்தத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது" என்று எலன் செக்கெல் கூறுகிறார்.
1904ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்நிலைமை மாறி, பிக்காசோவின் ஓவியங்கள் அனைத்தும் இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாற்றம் பெற்றன. அதன் பின்னர், அந்த ஓவியங்கள் மீண்டும் நல்ல விலையுடன் விற்பனையாகத் தொடங்கியது.