ஒரு பொருள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட இடத்தில் தயாரிக்கப்படுவதற்கே மக்களிடையே மதிப்பு இருக்கிறது. உதாரணமாக திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லிகைப்பூ, காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, ஊத்துக்குளி நெய், மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், தூத்துக்குடி மக்ரூன், விருதுநகர் புரோட்டோ என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அந்த மண்ணில் விளைந்த அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு என்று தனிமவுசு உள்ளது.
இப்படிப்பட்ட மண் சார்ந்த பொருட்களுக்கு புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) மத்திய அரசால் வழங்கப்பபடுகிறது. இதன்படி குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் பெயரை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
சில புவிசார் குறியீடு பெற்று மதுரை மண்ணிற்கு பெருமை சேர்த்த பொருட்களின் மகிமையை பார்க்கலாம்.
மதுரை என்றாலே நினைவுக்குவருவது மீனாட்சி அம்மனும், மதுரை மல்லியும்தான். 'மதுரை மல்லி', மதுரையில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல... உலக அளவில் பிரசித்திபெற்றது. பொதுவாக, 'மல்லிப்பூ பருத்து, உருண்டு, தடித்து இருக்கும் மதுரை மல்லியும் பருத்து, உருண்டு பார்க்க பளபளவென வெண்மையான நிறத்தில் காணப்படும். சந்தைகளில் மதுரை மல்லி எனச் சொல்லி விற்கப்படும் மல்லிகைப் பூக்கள் எல்லாமே, 'மதுரை மல்லி' ஆகாது.
மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விளையும் மல்லி மட்டுமே மதுரை மல்லிகை வகையைச் சார்ந்தவை. இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த மல்லி விவசாய சங்கத்தினர் விண்ணப்பித்து, 2013-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றனர். மற்ற மல்லிகை ஒரு நாளில் வாடிவிடும், ஆனால் மதுரை மல்லி, இரண்டு நாள்கள் வரை வாடாமல் தாக்குப்பிடிக்கும்.
மதுரை மல்லியின் சிறப்பு: சாதாரண மல்லியின் மொட்டானது இரண்டு முதல் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும். மதுரை மல்லியின் இதழ்கள் வட்ட வடிவில் நான்கு அடுக்குகளைக் கொண்டது. அதனால் இம்மல்லியின் மொட்டுக்கள் தாமதமாகவே விரியும். இதனால்தான் மனதை மயக்கும் நறுமணத்தைக் கொண்டிருக்கிறது. இதுதவிர மதுரை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் மண் வளமும் மணத்துக்கு முக்கியக் காரணம்.
மதுரை சுங்குடி சேலைகள்: மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. 'சுங்கு' என்ற தெலுங்கு சொல் 'புடவையின் மடிப்பு' எனப் பொருள்படும். மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு, பல வண்ணப் பின் புலங்களில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தயாரிக்கப்படும் இச்சேலைகள் உலகச் சந்தையில் ஒரு தனி இடத்தை வகிக்கின்றன.
சுங்குடி சேலைகள் நூறு சதவீத பருத்தியால், தயாராகுபவை. கோடைக்கு மட்டுமின்றி குளிருக்கும் இதம் அளிப்பவை. மதுரையில் 6, 7, 9, பத்தரை முழம் கொண்ட சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெள்ளை நிறமாக வரும் காட்டன் சேலைகளை சாயம் அடித்து, அதில் கை அச்சு பதித்து, காய வைத்து, கஞ்சி போட்டு, சலவை செய்து சுங்குடிகளாக உருமாற்றுகிறார்கள். தரமான சுங்குடி சேலைகளை தண்ணீரில் எத்தனை முறை துவைத்தாலும், கலரோ, அச்சுக்களோ மறையாது. இதற்கு புவிசார் குறியீடு டிசம்பர் 12, 2005 அன்று வழங்கப்பட்டது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலம் மசூலிபட்டினத்தை சேர்ந்த சவுராஷ்டிரா மக்களிடம் மஸ்லீன் துணி வகைகள் பெயர் பெற்றிருந்தன. அங்கிருந்து சில மாறுபாடுகளுடன் சுங்குடி புடவைகள் வந்ததாக கூறப்படுகிறது .
மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு (ஜி.ஐ. ) அன்மையில் வழங்கியுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளரக்கூடிய மரிக்கொழுந்து, மதுரையின் இறைவழிபாட்டில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மதுரை மல்லிகை பூவை போலவே மதுரை மரிக்கொழுந்தும் தனித்துவம் மிக்கது. மணம், நிறம், வாடாமல் இருக்கும் தன்மை ஆகியன மதுரை மரிக்கொழுந்துக்கான சிறப்பியல்புகளாகும். 16ம் நுாற்றாண்டில் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண விழாவில் மரிக்கொழுந்து பயன்படுத்தப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. மதுரையின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக விளங்குவதால், மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுரை அருகே விளாச்சேரியில் தொழிலாளர்கள் தயாரிக்கும் களிமண் பொம்மைகள், அப்பகுதியில் கிடைக்கும் இயற்கை மண்ணின் தனித்துவத்தால் பிரபலமானவை. விளாச்சேரி கீழக்குயில்குடி கருப்பசாமி கோயிலின் மூலவர் சிலை நுாறு ஆண்டுகளுக்கு முன் களிமண்ணால் உருவாக்கப்பட்டது என்பது இதன் வரலாற்றுச் சிறப்பை விளக்குகிறது. இந்தப் பொம்மைகள், தெய்வ வழிபாட்டு சிற்பங்கள் என்ற வகையில் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.