தமிழ்நாட்டில் ஒரு குட்டி டென்மார்க்... 225 ஆண்டுகால ‘தரங்கம்பாடி’ ரகசியங்கள் தெரியுமா?

தரங்கம்பாடி (Tranquebar) என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரமாகும்.
தரங்கம்பாடி வரலாறு
தரங்கம்பாடி வரலாறுAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டிலேயே ஒரு காலத்தில் டென்மார்க் நாட்டின் ஆட்சி இருந்தது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் அந்த இடம்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ‘தரங்கம்பாடி’ (Tranquebar). இந்நகரம் ஒரு விசித்திரமான புனைப்பெயரையும் கொண்டுள்ளது. அது ‘இந்தியாவின் டென்மார்க்’ என்பதாகும்.

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரமான தரங்கம்பாடி, 1620 முதல் 1845 வரை 225 ஆண்டுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்தியாவில் பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்கள் போலவே டென்மார்க் நாட்டவரும் (டேனியர்கள்) இங்கு ஒரு வலுவான வணிகத் தளத்தை அமைத்து ஆட்சி செய்தனர்.

நவம்பர் 19, 1620-ஆம் ஆண்டு டென்மார்க் மன்னர் நான்காம் கிறிஸ்டியனின் பிரதிநிதியாக வந்த கடற்படைத் தளபதி ஓவே கிட்டே (Ove Gjedde), தஞ்சாவூர் மன்னர் ரகுநாத நாயக்கருடன் ஒரு ஒப்பந்தம் (Tranquebar Treaty) செய்தார். அதில் ஆண்டுக்கு 3,111 தங்க வராகன் நாணயங்கள் குத்தகைத் தொகையாகத் தருவதாக ஒப்புக்கொண்டு, தங்க ஓலையில் எழுதப்பட்ட ஒப்பந்தம் மூலம் தரங்கம்பாடியில் வணிகம் செய்யவும் கோட்டை கட்டவும் அனுமதி பெற்றார்.

போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க விரும்பிய ரகுநாத நாயக்கர், டேனியர்களுடன் நட்புறவை ஏற்படுத்த முன்வந்தார். ஒப்பந்தத்தின்படி, அலைகள் பாடும் ஊர் எனப் பொருள்படும் மீனவக் கிராமமான தரங்கம்பாடி டேனியர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

இதுவே இந்திய வரலாற்றில் ஒரு தனிச்சிறப்பு. டானிஷ் குடியேற்றம் போரால் இல்லை, அரச அனுமதி அடிப்படையில் உருவானது. இந்த நட்புறவை உறுதிப்படுத்தும் விதமாக, ரகுநாத நாயக்கர் கையொப்பமிட்ட தங்க ஓலை மடல் இன்றும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் தேசிய ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன் மூலம் தரங்கம்பாடியில் டேனியர்களுக்கு வர்த்தகம் செய்யவும், கோட்டை கட்டவும் அனுமதி கிடைத்தது. அதன்பிறகு கடற்கரையில் பிரம்மாண்டான டேனிஷ் கோட்டை (Danish Fort) அதாவது டாண்ஸ்போர்க் கோட்டை கட்டப்பட்டது.

தரங்கம்பாடி
தரங்கம்பாடிAI image

இது டேனிஷ் வர்த்தக நிலையத்தின் முக்கிய மையமாக மாறியது. டென்மார்க்கிற்கு வெளியே அமைந்துள்ள இரண்டாவது பெரிய டேனியக் கோட்டை இதுவாகும்.

தரங்கம்பாடி வெறும் கோட்டை மட்டும் அல்ல. இது ஒரு முக்கிய வர்த்தக மையம். தமிழ்நாட்டின் துணிகள், மிளகு உள்ளிட்ட பொருட்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் 225 ஆண்டுகள் தரங்கம்பாடி டேனியர்களின் வர்த்த ஆட்சியின் கீழ் இருந்தது. ஆனாலும இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பது சிறப்பு.

அதேசமயம் ஐரோப்பிய போர்களின் தாக்கத்தால் தரங்கம்பாடி சில காலம் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலும் இருந்தது. இறுதியில் 1845-ல் டேனியர்கள் தரங்கம்பாடியை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு (British East India Company) விற்றனர்.

டென்மார்க் தனது இந்தியப் பகுதிகளை ஆங்கிலேயர் களிடம் ஒப்படைத்த பிறகும், டேனிஷ் மக்களின் சுவடுகள் காலத்தால் அழியாமல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாத டென்மார்க் மக்களின் வாழ்க்கை ரகசியம்!
தரங்கம்பாடி வரலாறு

வங்காள விரிகுடாவை நோக்கியபடி இன்றும் கம்பீரமாக நிற்கும் டேனிஷ் கோட்டை, அந்தப் பொற்காலத்தின் வரலாற்றின் சுவடுகளை இன்றும் தாங்கி நிற்கின்றன.

பழமையான தேவாலயங்களும், காலனித்துவ பாணிக் கட்டிடங்களும், அமைதியான கடலோரக் காற்றோடு கலந்து ஐரோப்பிய கடந்த காலத்தை இன்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

இன்று தரங்கம்பாடி அமைதியாக இருக்கிறது. ஆனால் அங்கு நிற்கும் டேனிஷ் கோட்டை 225 ஆண்டு கால வரலாற்றை சுமந்து கம்பீரமாக நிற்கிறது.

தரங்கம்பாடி வரலாறு, சிறப்புகள்:

* தமிழ் பெயரான 'தரங்கம்பாடி' என்பதை உச்சரிக்க சிரமப்பட்ட டேனியர்கள், அதனை டிரான்கியூபார் (Tranquebar) என அழைக்கத் தொடங்கினர்.

* 1706-ஆம் ஆண்டு சீகன்பால்கு (Bartholomäus Ziegenbalg) என்ற ஜெர்மானியப் பாதிரியார் இங்கு வந்தார். அவர் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தை (Printing Press) இங்கு நிறுவி தமிழ் நூல்களை அச்சிட்டார்.

* பழமை வாய்ந்த மாசிலாமணிநாதர் கோலில் மற்றும் அருங்காட்சியகம் இங்கு உள்ளன.

* தரங்கம்பாடி இன்று சுற்றுலா தலம், ஷூட்டிங் ஸ்பாட், கல்வி வரலாற்றின் அடையாளம், என பல முகங்கள் கொண்ட பிரபலமான இடமாக மாறியுள்ளது.

* 2004 சுனாமியிலும் கூட நிலை குலையாமல் இருந்தது இந்தக் கோட்டை.

* அடுப்படியில் புழுங்கிகிடந்த பெண்களுக்கு கல்வியை கொடுத்து சிறகடிக்க செய்த இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளி இங்கு உள்ளது.

இதையும் படியுங்கள்:
தரங்கம்பாடி கடற்கரையில் காற்று வாங்கலாம் வாங்க..!
தரங்கம்பாடி வரலாறு

* இந்தியா - டென்மார்க் நாடுகளின் நீண்டகால நட்பைக் குறிக்கும் வகையில் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகிறது.