உயரமான மலைகளால் சூழப்பட்ட வானத்தின் ராஜ்ஜியம் என்று அழைக்கப்படும் ஒரு ஆப்பிரிக்க நாடுதான் லெசாதோ ராஜ்ஜியம். இந்த நாடு கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 22 லட்சம் பேர். லேசாதோ முழுக்க பசோதா என்னும் ஆப்பிரிக்க சமூகத்தினர் 99.7% உள்ளனர். உலகில் ஒரு நாடு முழுக்க ஒரே ஜாதியினர் இருப்பது இங்கு மட்டும் தான். இந்த மக்கள் பண்டு எனப்படும் ஆப்பிரிக்க மொழியை பேசுகின்றனர்.
200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாடு பசாதோ சமூக மன்னரால் ஆளப்பட்டு வருகிறது. 90 களில் புரட்சி ஏற்பட்டு மன்னரை வெளியேற்றினாலும் அடுத்த சில வருடங்களில் மீண்டும் வந்து அவர் ஆட்சியை பிடித்துள்ளார். மன்னரின் அதிகாரம் பாரம்பரிய அளவில் மட்டுமே உள்ளது, மற்றபடி நிர்வாகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் மூலம் வழி நடத்தப்படுகிறது.
லெசோதோ மக்களின் பாரம்பரிய உடை அவர்கள் உடல் முழுக்க போர்த்திக் கொள்ளும் போர்வை அல்லது சால்வை ஆகும். சால்வையில் பல்வேறு வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. தலையில் மொகார்ட்லோ என்ற தொப்பியை அணிகிறார்கள். இந்தத் தொப்பிதான் அவர்களின் தேசிய பாரம்பரியத்தின் சின்னம். அதனால்தான் அவர்களின் தேசியக் கொடியிலும் இந்தத் தொப்பியின் சின்னம் உள்ளது.
ஆப்பிரிக்காவின் மிக உயரமான ஸ்கை ரிசார்ட்கள் எல்லாம் லெசோதோவில்தான் உள்ளது. இங்கு பனி மலைகளில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கள் நடைபெறுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாலோட்டி மலைகள், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாகத் திகழ்கிறது. இந்த மலைகள் ஐரோப்பாவில் உள்ள பனிமலைகளைப் போலவே இருக்கிறது.
லெசோதோவின் மிகப்பெரிய பொக்கிஷமாக மக்கள் கொண்டாடுவது என்னவோ தண்ணீரை தான். இங்கு தண்ணீர் வெள்ளை தங்கம் என்றழைக்கப் படுகிறது. மலை அருவிகளில் இருந்து கொட்டும் தண்ணீரை மக்கள் பெருமிதமாக நினைக்கின்றனர். அங்கங்கே நீரூற்றுகளிலிருந்து வரும் நீரும் மிகவும் சுவையாகவும் இனிமையாகவும் இருப்பதால் லெசோதோ நாடு, ஆப்பிரிக்கா முழுவதும் தங்கள் தண்ணீரை ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்கிறது. நாட்டின் பெரும்பாலான மக்கள் சொற்ப சம்பளத்தில் உள்ளூர் வைரச் சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். இங்குள்ள நிலங்கள் அனைத்தும் பாறைகளால் ஆனது என்பதால் விவசாயத்திற்கு ஏற்ற நிலங்கள் குறைவு. உள்ளூர் இளைஞர்கள் வேலைக்காக தென்னாப்பிரிக்காவிற்கு குடிபெயர்கிறார்கள். லெசோதோவிலிருந்து தயாரிக்கப்படும் ஜீன்ஸ் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. லெசோதோ ஆப்பிரிக்காவின் ஜீன்ஸ் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாட்டில் காணப்படும் பல்வேறு மலைகள் சபிக்கப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். அதனால் மக்கள் அனைவரும் சபிக்கப்பட்ட மலைகளுக்கு செல்வது கிடையாது. அங்கு சென்றால் துரததிர்ஷ்டம் வந்து தங்கள் உயிர் பறி போய்விடும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் அந்த பகுதிகளில் உலவுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த மலைகள் சபிக்கப்பட்ட கதைகளை வெளிநாட்டினர் நம்ப மறுக்கின்றனர். இந்த மலைப்பகுதிகளில் ஏராளமான வைரச் சுரங்கங்கள் இருப்பதால், அவற்றை கொள்ளையடிக்க ஐரோப்பியர்கள் கிளப்பி விட்ட கட்டுக்கதைகள் இவை என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை விகிதமும் உலகிலேயே மிக அதிகமாக இங்கு உள்ளது. உலகளாவிய சராசரி தற்கொலை விகிதத்தை விட சுமார் 10 மடங்கு இங்கு அதிகம். போதைப்பொருள், குடிப்பழக்கம், வேலையின்மை மற்றும் மனநலம் மோசமடைதல் ஆகியவை இதற்குக் காரணம் என்று ஐநா கூறுகிறது. இந்த நாட்டிற்கு சொந்த தனியார் விமானம் வைத்திருப்பவர்கள் மட்டும் செல்ல முடியும். மற்றவர்கள் அண்டை நாடுகளின் வழியாக குதிரைகளில் கூட செல்லலாம்.