இன்று அனைவருக்கும் தெரிந்த ஒரு வெற்றிகரமான பெண்மணி அவள். ஆனால், அவளது ஆரம்ப கால வாழ்க்கை வறுமை, பிரிவு, துயரம், இழப்புகள் என அனைத்தையும் கடந்தவை. ஒருநாள் இரவில் அவளது கணவன், அவளை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினான். அதற்கு முன்பும் அவள் அடி வாங்கினாலும் சொந்த வீடு இல்லாத காரணத்தினால், தாங்கி கொண்டு அவனோடு வசித்தாள். இன்றோ, அவள் வசிக்கும் மாளிகையின் மதிப்பு பல நூறு கோடிகளை தாண்டும்.
அந்த பெண்மணி வேறு யாரும் அல்ல, அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் ஜே.கே. ரவ்லிங் தான். இங்கிலாந்தில் உள்ள யேட் என்னும் சிறிய நகரத்தில் 1965 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஜோன்னே ரவ்லிங் பிறந்தார். பின்னர் அவரின் குடும்பம் விண்டர்போனுக்கு குடியேறியது. அங்கு அருகில் வசித்த ஒரு குடும்பத்தின் பெயர் தான் பாட்டர், அந்த பெயரில் ரவ்லிங் ஈர்க்கப்பட்டார். தனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே ரேபிட் (முயல்) என்ற சிறுகதையை ரவ்லிங் எழுதி விட்டார். பின்னர் 11 வயதில் ஏழு சபிக்கப்பட்ட வைரங்கள் என்ற நாவலை எழுதியிருந்தார். சிறு வயதிலேயே நாவல் எழுதும் அளவிற்கு ஜோன்னே ரவ்லிங் திறமையும் அறிவும் பெற்றிருந்தார்.
ரவ்லிங் தான் படித்த பள்ளிகளில் தன்னை கொடுமைப் படுத்துவதாக உணர்ந்தார். அப்போது பள்ளியில் ஆசிரியை லூசி, ரவ்லிங்கின் கற்பனைகளுக்கு ஆதரவு கொடுத்தார். ரவ்லிங்கிற்கு அவரது தாயும் சகோதரிகளும் எப்போதும் ஊக்கமாக இருந்தனர். அவரது பெரியம்மாவும் புத்தகங்களை அளித்து ஊக்கப்படுத்தி வந்தார்.
1990களில் லண்டனில் இருந்து மான்செஸ்டர்க்கு காதலனுடன் செல்ல இருந்த போது ரயில் தாமதமானது. அந்த நேரத்தில் ரவ்லிங் மனதில் தோன்றியதுதான், உலகில் அதிகம் விற்பனை ஆகும் நாவலான ஹாரிபாட்டரின் கதை. அப்போதே முழு நாவலையும் கற்பனை செய்து விட்டார். ஆனால், அதை அப்போது எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வருடத்தில் அவரது தாயின் இழப்பு அவரை மிகவும் சோர்வுற செய்தது. மேலும் காதலனின் பிரிவு, பணியிடத்தில் இருந்து நீக்கப்பட்டது போன்ற பல நிகழ்வுகள் அவரை காயப்படுத்தியது.
பின்னர் வேலைக்காக போர்ச்சுகல் நாட்டிற்கு சென்றார். அங்கு ரவ்லிங் பத்திரிக்கையாளர் ஜார்ஜ் அரண்டேசை காதலித்து கர்ப்பமானார், அவரின் முதல் கரு சிதைந்தது. ஜார்ஜை அவர் திருமணம் செய்த பின்னர் 1993 இல் ஜெசிகா என்ற பெண் குழந்தையை பெற்றார். அடிக்கடி கணவரிடம் தகராறு வந்ததில் ஒரு நாள் வீட்டை விட்டு துரத்தப்பட்டார். அப்போது தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்துள்ளார். பின்னர் எடின்பர்க் நகருக்கு திரும்பி சகோதரியுடன் வசித்தார்.
அரசு மற்றும் நண்பர்கள் நிதியுதவியுடன் படித்த அவர், கல்லூரி இடைவேளை நேரத்தில் ஹரிபாட்டர் கதைகளை எழுதி முடித்தார். அதை வெளியிட முயன்றபோது 12 பதிப்பகங்கள் அவரது கதையை நிராகரித்தன. 1997 இல் ரவ்லிங்கின் கதையான ஹாரிபாட்டர் அண்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன் முதலில் வெளிவந்தது. 1998 இல் ஹாரிபாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் என்ற பெயரில் அதே கதை அமெரிக்காவில் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. அவரது ஹாரிபாட்டர் புத்தகங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் விற்பனை ஆகி உலகிலேயே அதிக வருமானம் பெறும் எழுத்தாளராகவும் மாற்றியது.
ஹாரிபாட்டர் திரைப்படமாகவும் வெளிவந்து வசூலை வாரிக் குவித்து சாதனை படைத்தது. வறுமையில் வாடிய ஜே.கே.ரவ்லிங் இன்று செல்வ சீமாட்டியாக இருக்கிறார். உலக சமூக பணிகளுக்காக உலகில் அதிக நன்கொடை வழங்கும் பெண்மணியாகவும் உள்ளார். ஜே. கே ரவ்லிங்கின் போராட்டமான வாழ்க்கையும் அவர் பெற்ற பிரம்மாண்டமான வெற்றியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கமாக இருக்கும்.