
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது இந்த தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருப்பதாக கூறிய அவர், ஜி.எஸ்.டி அமைப்பில் பெரிய சீர்திருத்தங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். மேலும், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளதாகவும் அது, ஜி.எஸ்.டி. வரிச்சுமையை குறைக்கும் என்றும் அவர் கூறினார். அதன் தொடர்ச்சியாக 17-ம்தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜி.எஸ்.டி. சீர்திருத்ததை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான வரைவு அறிக்கை மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் தேவை என்று நாட்டு மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் மோடி இதுபோல் பேசியிருப்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் வரிவிதிப்பு மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்படி வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள் தீபாவளிக்கு முன்பாக நடைமுறைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது..
தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள வரைவு அறிக்கையில் இனி 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்கு வரிவிதிப்பு முறையும், விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீதம் வரியும் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் விதிக்கப்படும் வரி விகிதங்கள்...
தற்போது இந்தியாவில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
* புதிய காய்கறி, தானியம் போன்றவைகளுக்கு பூஜ்ஜியம் சதவீதம் வரி
* கம்ப்யூட்டர், பேனா, பென்சில் போன்ற 14 சதவீத பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.
* அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட 43 சதவீத பொருட்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.
* சமையல் எண்ணெய், சமையல் கியாஸ், மருந்துகள் உள்ளிட்ட 14 சதவீத பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது
* கார்கள், ஏ.சி., புகையிலை போன்ற ஆடம்பர பொருட்கள் மற்றும் ‘சின்’ பொருட்கள் உள்ளிட்ட சுமார் 19 சதவீத பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
* வைரக்கல், அரிய கற்களுக்கு 0.25% வரியும், தங்க நாணயம் மற்றும் தங்க நகைகளுக்கு 3% வரியும், புகையிலை, ஆடம்பர கார்கள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியுடன் செஸ் வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையில் மக்களிடம் வசூக்கப்படும் ஜிஎஸ்டி வரித்தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக அதாவது தலா 50 சதவீதம் என பிரித்து கொள்கின்றனர்.
இந்தநிலையில் மத்திய அரசு இப்போது 5 மற்றும் 18 சதவீத வரி என இரண்டு அடுக்கு வரிவிதிப்பு முறையை கொண்டுவர உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 5 சதவீத வரியிலும், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரிவிதிப்பிற்கும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டுவரப்படும் பட்சத்தில் மக்களுக்கு பல விதத்தில் லாபம் கிடைக்கும் என்கிற நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரித்தொகை பகிர்வு குறைந்து விடும் என்றும் மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போது ஆடம்பரப் பொருட்களின் மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து தான் மாநிலங்களுக்கு அதிகளவு வருவாய் கிடைக்கிறது. தற்போது இந்த வரி விகிதம் 28%த்திருந்து 18%மாக குறைக்கப்படும் போது அதிகளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றாலும், அதில் சில ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பு 40% ஆக இருப்பதால் அந்த இழப்பை இதன் மூலம் சற்று ஈடுகட்ட முடியும். அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்படும் போது முழு அளவில் இழப்பு ஏற்படுவது உறுதி.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த வரி வரைவு அறிக்கையை வைத்து தங்களது மாநிலங்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என கணக்கீடு மேற்கொள்ளப்பட்டதில், கேரளாவிற்கு தோராயமாக ரூ.5000 கோடி வரை இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஜி.எஸ்.டி வசூலில் நாட்டிலேயே 4-ம் இடத்தில் உள்ள தமிழகத்திற்கு குறைந்தபட்சம் ரூ.3000 கோடி வரை நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலங்களும் தங்களது பட்ஜெட்டில் ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாயை கணக்கில் கொண்டு தான் மாநிலங்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாயில் பெரிய துண்டு விழுந்தால் மாநிலங்கள் என்ன தான் செய்யும்.?
இது தொடர்பாக மத்திய அரசின் நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஜிஎஸ்டி வரி குறையும் போது அந்த பொருட்களின் விற்பனை அதிகமாகும். உதாரணமாக ஒரு மாதத்தில் 28% வரி கொண்ட பிரிட்ஜ் 500 எண்ணிக்கையில் விற்பனையாகிறது என்றால் இனி வரி விகிதம் 18% ஆக குறையும் போது 550 வரை கூட பிரிட்ஜ் விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்பதால் பொருட்களின் விற்பனை மூலம் வரி வருவாய் குறைவு தவிர்க்கப்படும் என்றார்.
மேலும், ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால் எவ்வளவு இழப்பு ஏற்படும்? லாபம் எவ்வளவு இருக்கும் என்று அந்தந்த மாநிலங்கள் முழுமையாக கணக்கிட்டால் தான் பாதிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக சொல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.