சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமம் மற்றும் நகரங்களின் தெருக்களில் ஆங்காங்கே பெட்டிக்கடைகள் காணப்படும். முழுக்க முழுக்க மரத்தினால் பெட்டி போன்ற வடிவத்தில் செய்யப்பட்ட கடையை ‘பெட்டிக்கடை’ என்று அழைப்பார்கள். இது பார்ப்பதற்கு பெட்டி போன்ற வடிவத்தில் இருப்பதால் இதற்கு பெட்டிக்கடை என்று பெயர். முன்பக்கத்தில் நான்கு நீளக்கதவுகள் பக்கத்திற்கு இரண்டு வீதமாக இணைக்கப்பட்டிருக்கும். பெட்டிக்கடையின் முதலாளி பெட்டியின் ஒரு ஓரத்தில் அமர்ந்து வியாபாரத்தை கவனிப்பார்.
பெட்டிக்கடைகளை ‘பங்க் கடை’ என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. அவசரத்திற்குத் தேவையான சிறு சிறு பொருட்கள் பெட்டிக்கடைகளில் விற்பனை செய்வது வழக்கம். வழக்கமாக பெட்டிக்கடையில் தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், கமர்கட், தேங்காய் பிஸ்கெட், ஒரு சிறிய வட்ட வடிவ பிஸ்கெட்டின் மேல் பச்சை நிறத்தில் கூம்பு வடிவத்திலான இனிப்பு பிஸ்கெட், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, மூக்குப்பொடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
மக்களுக்கு தலைவலி, ஜுரம் என்றால் பெட்டிக்கடைக்குச் சென்று அனாசின் மற்றும் சாரிடான் மாத்திரை வாங்கி சாப்பிடுவர். பெட்டிக்கடைகளில் சாதாரண சோடா, கலர் சோடா, பன்னீர் சோடா போன்றவை தவறாமல் இடம் பெற்றிருக்கும். சற்றே பெரிய பெட்டிக்கடைகளில் காளிமார்க் என்ற குளிர்பானம் கிடைக்கும். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த இது நமது தயாரிப்பு.
பெட்டிக்கடைகளில் அவசரத் தேவைகளுக்கு தபால் கார்டுகளும், ரெவின்யூ ஸ்டாம்புகளும் விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான விலையை விட ஐந்து காசுகள் அதிகமாக வைத்து விற்பார்கள். மக்கள் அவசரத் தேவைகளுக்கு பெட்டிக் கடைகளில் இவற்றை வாங்கிக்கொள்வார்கள்.
சிறுவர்கள் விளையாடும் கோலி முதலான விளையாட்டுப் பொருட்களை ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து விற்பனை செய்வர். பம்பரத்தை ஒரு இரும்புக் கம்பியால் ஆன கூடையில் போட்டு விற்பனை செய்வர். காற்றாடி சீசனில் சிறு சிறு காற்றாடிகளும் கூட இங்கே கிடைக்கும்.
தற்போது கிராமம் முதல் நகரம் வரை பல பகுதிகளில் ஸ்வீட் ஸ்டால்கள் உள்ளன. அக்காலத்தில் அதெல்லாம் கிடையாது. ஒரு நான்கு சக்கரத் தள்ளுவண்டியின் மேற்புறம் செவ்வகப் பெட்டி வடிவிலான கண்ணாடிக் கூண்டு போன்ற அமைப்பு காணப்படும். மிக்சர், காராசேவு, பக்கோடா, முறுக்கு, கார பூந்தி, சர்க்கரைப் பாகு தோய்த்த இனிப்பு கார சேவு, ஸ்வீட் கலர் பூந்தி போன்ற தின்பண்டங்கள் அந்த சிறிய நகரும் பெட்டிக் கடைக்குள் விற்பனைக்கு வரும்.
ஒரு கத்தை மந்தாரை இலை மற்றும் கட்டுவதற்கு நூல் போன்றவை அதில் இருக்கும். மந்தாரை இலையில்தான் கூம்பு வடிவில் பொட்டலம் கட்டி இதனை விற்பனை செய்வர். அக்காலத்தில் ஒரு சிறிய பொட்டலத்தின் விலை இருபது காசுகளே.
தற்போது பல கடைகளில் ப்ரீஸர்களில் விதவிதமான ஐஸ்கள் வைத்து விற்கப்படுகின்றன. அந்நாட்களில் ஒரு சைக்கிளில் சதுர வடிவ ஐஸ்பெட்டிக்குள் ஐஸ்களை அடுக்கிக் கொண்டு வந்து தெருவில் விற்பனை செய்வார்கள். மூன்று விதமான குச்சி ஐஸ்கள் அதற்குள் இருக்கும். ஒன்று பால் ஐஸ். இதை ‘பாலைஸ்’ என்பார்கள். வெள்ளை நிறத்தில் உருளை வடிவத்தில் இருக்கும். இதற்கு அடுத்து கல் ஐஸ். இதை ‘கல்லைஸ்’ என்பார்கள். ஆரஞ்சு நிறத்தில் செவ்வகப்பட்டை வடிவத்தில் இருக்கும். மூன்றாவது ‘சேமியா ஐஸ்.’ கல் ஐஸின் மேற்புறத்தில் சேமியா படர்ந்திருக்கும். மூன்றுமே மூன்று சுவை. தனிச்சுவை. பாலைஸ், சேமியா ஐஸ் பத்து காசுகள். கல்லைஸ் ஐந்து காசுகள்.
அக்காலத்தில் எல்லாமே மிகவும் எளிமையாக இருந்தன. மக்களும் எளிமையான வாழ்க்கையினை மேற்கொண்டார்கள். மக்களிடம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன. குறைவான வருமானம், நிறைவான திருப்தியான வாழ்க்கை. இதுவே அக்கால மக்களின் வாழ்க்கை முறையாக இருந்தது.