குடும்ப பட்ஜெட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு அத்தியாவசிய செலவுதான் மின் கட்டணம். குடும்பத் தலைவன், தலைவி என்றில்லாமல் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முயற்சி செய்தால் மட்டுமே மின் கட்டணம் குறையும்.
ஆனாலும், சில வகை மின் சாதனங்களைக் கையாளும் வழிமுறைகளைத் தெரிந்து கொண்டால் மின் கட்டணம் பாதியாகக் குறைந்து விடும். எல்.இ.டி. பல்பு பயன்படுத்துவது கூட மின் கட்டணத்தைக் குறைத்து விடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் மின் கட்டணத்தை பாதியாகக் குறைக்கும் 3 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. சாதாரண ACக்கு பதிலாக inverter AC பயன்படுத்தல்: தற்போது கோடைக்காலம் நெருங்கி வரும் வேளையில் மின்சாரத்தை பாதியாகக் குறைக்க விரும்பினால் முதலில் இன்வெர்ட்டர் அல்லாத ஏசிக்கு பதிலாக இன்வெர்ட்டர் ஏசியை பயன்படுத்துங்கள்.
ஏனெனில், இன்வெர்ட்டர் ஏசி சாதாரண ஏசியை விட மிகவும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, தேவைக்கேற்ப வேகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இது குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் மின்சாரக் கட்டணமும் பாதியாகக் குறைக்கிறது.
2. மின் விசிறியைப் பயன்படுத்துதல்: மின்சாரத்தை சேமிக்க முதலில் தேவையான நேரத்தில் மட்டும் மின் விசிறியை பயன்படுத்த வேண்டும். அறையை விட்டு வெளியே செல்லும்போது மின் விசிறியை நிறுத்துவதை மறக்கக் கூடாது. மேலும், மின் விசிறிகளை தொடர்ந்து சுத்தம் செய்து பராமரிப்பதும் மின்சாரத்தை மிச்சப்படுத்துகிறது.
3. Microwaves பயன்படுத்துவதைக் குறைக்கவும்: மைக்ரோவேவ், தேவையில்லாமல் அதை எரிய வைக்கும்போது, மின்சாரப் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதால் மைக்ரோவேவைப் பயன்படுத்தி முடித்ததும், அதன் பவர் பட்டனை அழுத்தவும்.
மைக்ரோவேவ் மற்றும் பிற மின்னணு சாதனங்களை காத்திருப்பு பயன்முறையில் வைக்கக் கூடாது. ஏனெனில், மின் சாதன பொருட்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் மின்சாரத்தை இது பயன்படுத்துவதால் மின் கட்டணம் அதிகரிக்கும்.
ஆகவே, மின் சாதனப் பொருட்களை தேவைக்கு மட்டும் உபயோகப்படுத்துவது மற்றும் முறையாகப் பராமரிப்பது ஆகியவற்றை சரிவர செய்தாலே வீட்டின் மின் கட்டணம் பாதியாகக் குறைந்து விடும்.