
வட லித்துவேனியாவில் அமைந்துள்ள சியாவுலியாய் நகரின் வடக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் ‘சிலுவைகளின் குன்று’ (Hill of Crosses) அமைந்திருக்கிறது. இங்கு சிலுவைகள் மட்டுமின்றி, பெரிய திருச்சிலுவை, லித்துவேனியாப் மறை பிதாக்களின் செதுக்கிய உருவங்கள், மரியாளின் சிலைகள், ஆயிரக்கணக்கான சிறிய உருவச்சிலைகள், ஜெபமாலை போன்றவற்றை அங்கு கத்தோலிக்க யாத்திரிகர்கள் எடுத்துச் சென்று வைக்கின்றனர். இங்குள்ள சிலுவைகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. 1990 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி கிட்டத்தட்ட 55,000 ஆகவும், 2006 ஆம் ஆண்டில் 1,00,000 என்றும் கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
சிலுவைக் குன்றின் சரியான தோற்றம் குறித்த தகவல்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் குன்று சிலுவைக் குன்றாகத் தொடங்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, லிதுவேனியாவை சோவியத் ஒன்றியத்தில் கட்டுப்பாட்டிலிருந்தது. சோவியத் ஒன்றியத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்போராட்டத்தில் பலர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பங்கள் அவர்களை நினைவு கூரச் சிலுவைகளை நிறுவ விரும்பினர். சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருந்த பகுதிக்குள் சிலுவைகளை வைப்பது மற்றும் பிரார்த்தனை செய்வது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியம், போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் சிலுவை, வைக்கும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
இருப்பினும் மக்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்காகச் சிலுவைகளை நிறுவுவதற்குத் தொலை தூர இடங்களைத் தேடினர். அப்போது அவர்களுக்கு, சியாலியாய் நகருக்கு அருகில் உள்ள டோமந்தை மலைக்கோட்டையில் உள்ள குன்று ஏற்றதாகத் தெரிந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அடக்குமுறைகள் இருந்த நிலையில், தங்களுடைய அன்புக்குரியவர்கள் இறந்த பின்பு, அவர்களுடைய நினைவாக அந்தக் குன்றின் மேல் சிலுவைகளை நிறுவத் தொடங்கினர். சோவியத் ஒன்றிய அரசியலாளர்கள், அக்குன்றில் நிறுவப்பட்ட சிலுவைகளை எடுத்துச் சென்று, அதற்குச் செல்லும் சாலைகளை மூடிவிட்டனர். ஆனால், மக்கள் நள்ளிரவில் புதிய சிலுவைகளை மீண்டும் மீண்டும் அக்குன்றில் கொண்டு போய் நிறுவி வருவார்கள்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிதுவேனியா விடுதலை அடைந்ததிலிருந்து, அந்தக் குன்று அதிக முக்கியத்துவம் பெற்றது. அந்தக் குன்றும், சிலுவைக் குன்று என்றாகிப் போனது.
சிலுவைக் குன்று சமய சுதந்திரத்தை அடக்குவதற்கான வீர எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளது. 1993 ஆம் ஆண்டு போப் இரண்டாம் ஜான் பால் அவர்களின் வருகையால், அதன் முக்கியத்துவம் முடிசூட்டப்பட்டது. இப்போதெல்லாம், இது ஒரு பிரபலமான பயணத் தலமாக மாறிப் போய்விட்டது. தற்போது இக்குன்று, கிறித்தவ சமயக் கொண்டாட்டங்களுக்கும், புனிதப் பயணங்களுக்கும் மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.