
இயேசுவின் தாயாகிய மரியா, சதா சகாய மாதா, சதா சகாயத் தாய், இடைவிடா சகாய மாதா (Our Lady of Perpetual Help) எனும் சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளார். இலத்தீன் மொழியில் "Sancta Mater de Perpetuo Succursu" என வழங்கப்படும் இப்பெயரைத் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மரியாவை அழைக்கப் பயன்படுத்தினார். இப்பெயர் கிபி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிசான்சியக் கலையில் அமைந்த ஒரு மரியா திருவோவியத்தோடு தொடர்புடையதாகும்.
கிரேக்க நாட்டின் தீவுகளுள் ஒன்றாகிய கிரேத்து (Crete) பகுதியின் தனிப்பாணி இவ்வோவியத்தில் விளங்குகிறது. இத்திருவோவியம் கிபி 1499 ஆம் ஆண்டிலிருந்து ரோமை நகரில் இருந்து வந்துள்ளது. இப்போது, ரோமையில் புனித அல்போன்சு லிகோரி (St. Alphonsus Liguori) கோவிலில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த மரியா திருவோவியம் மரபு வழிக் கீழைச் சபையில் 'பாடுகளின் இறையன்னை' (Theotokos of the Passion) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
இத்திருவோவியத்தின் தனித்தன்மைகளுள் ஒன்று, அதில் உள்ள அன்னை மரியா நம்மை நேரடியாகப் பார்ப்பதும், குழந்தை இயேசு தாம் அனுபவிக்கப் போகிற துன்பத்தை முன்னறிந்து அச்சம் கொள்வதும், அதனால் அவர் தம் காலிலிருந்து காலணி கழன்று விழுவதும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது ஆகும்.
இந்த ஓவியம் கிரேத்துத் தீவில் எழுதப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அது எழுதப்பட்டுள்ள பலகை வாதுமை மரப் பலகை. இந்த ஓவியம் எழுதப்பட்ட காலத்தில் கிரேத்துத் தீவு வெனிசு குடியரசின் கீழ் இருந்தது. எனவே எண்ணிறந்த திருவோவியங்கள் அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவற்றுள் ஒன்று சிறப்புமிக்க இவ்வோவியம் ஆகும்.
இத்திருவோவியம் ஒரு பெண் தம் குழந்தையைக் கையில் வைத்திருக்கிறார் என்று காட்டுவது போல் தோன்றினாலும், அதன் ஒவ்வொரு அம்சத்திலும், ஆழ்ந்த பொருள் அடங்கியிருப்பதைக் காணலாம் என்கின்றனர்.
கிறித்தவ நம்பிக்கையுடையோர் இத்திருவோவியத்தில் தம் சமய நம்பிக்கையின் அடித்தளங்களைக் காண்பர். இவ்வோவியம் அவர்களுக்குத் தியானப் பொருளாகவும் இறைவேண்டல் பொருளாகவும், இறையறிவு பெறும் ஊற்றாகவும் உள்ளது. சதா சகாய மாதா திருவோவியம் எழுதப்பட்டுள்ள பலகையின் அளவு 17x21 அங்குலங்கள் ஆகும். ஓவியத்தின் பின்னணி தங்க நிறத்தில் உள்ளது.
இத்திருவோவியத்தின் மையப் பாத்திரங்கள் அன்னை மரியாவும், அவர் தம் கைகளில் தாங்கியிருக்கும் குழந்தை இயேசுவும் ஆவர்.
அன்னை மரியா கருசிவப்பு நிற உடை அணிந்திருக்கிறார். அது இயேசுவின் பாடுகளுக்கு அடையாளம். மரியாவின் மேலாடை நீல நிறத்தில் உள்ளது. அது மரியாவின் கன்னிமையின் அடையாளம். மரியா அணிந்துள்ள தலைத்திரை அவர்தம் பணிவைக் குறிக்கிறது.
இடது புறத்தில் மிக்கேல் அதிதூதர் உள்ளார். அவரது கைகளில் இயேசுவின் விலாவைக் குத்தித் திறந்த ஈட்டியும், இயேசு "தாகமாயிருக்கிறேன்" என்று கூறிய போது அவருக்கு அளிக்கப்பட்ட புளித்த திராட்சை இரசமும் அதைத் தோய்த்த கடற்பஞ்சும் உள்ளன.
வலது புறத்தில் கபிரியேல் அதிதூதர் உள்ளார். அவர் கைகளில் மூன்று குறுக்குக் கட்டைகள் கொண்ட சிலுவையும், இயேசுவை அச்சிலுவையில் அறையப் பயன்பட்ட ஆணிகளும் உள்ளன.
அன்னை மரியாவின் நெற்றிப் பகுதியில் ஒரு விண்மீன் உள்ளது. அது மாலுமிகளுக்கு வழிகாட்டும் விண்மீன் போல, மரியா மனிதர்கள் கடவுளிடம் செல்ல வழிகாட்டுகிறார் என்பதைக் குறித்து நிற்கிறது.
மரியாவின் நெற்றிப் பகுதியில் விண்மீனுக்கு அருகே உள்ள சிலுவை அடையாளம் இந்தத் திருவோவியத்தை எழுதிய குழுவின் குறியீடாக இருக்கலாம்.
வழக்கமாக, பிசான்சியக் கலை மரியா திருவோவியங்களில் மரியாவின் நெற்றிப் பகுதியில் ஒரு விண்மீனும், தோள்ப்பகுதிகளில் இரு விண்மீன்களும் எழுதப்பட்டிருக்கும்.
அன்னை மரியாவின் வலது கை இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு எழுதப்படுகின்ற மரியா திருவோவியம் "Hodegetria" என அழைக்கப்படுகிறது. அதற்கு "(இயேசுவிடம் செல்ல) வழிகாட்டுபவர்" என்பது பொருள். அன்னை மரியா தம்மை வேண்டுவோரை இயேசுவிடம் இட்டுச் செல்கிறார் என்றும், இயேசுவைச் சென்று சேருகின்ற வழி என்னவென்று காட்டுகிறார் என்றும் இது பொருள்படும். இயேசுவே வழியும், வாழ்வும் உண்மையும் என மரியா சுட்டிக்காட்டுகிறார்.
குழந்தை இயேசு சற்றேத் திரும்பி, தாம் அறையப்பட்டு உயிர் துறக்கப் போகின்ற சிலுவையையும் ஆணிகளயும் பார்க்கின்றார். அவரது துன்பங்களின் முன்னடையாளமாக வானதூதர்கள் ஏந்தி நிற்கும் கருவிகளைக் காணும் அவரை அச்சம் ஆட்கொள்கிறது. ஆறுதல் தேடித் தம் அன்னையின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொள்கின்றார். அச்ச உணர்வு மேலிட, அவரது வலது காலிலிருந்த காலணி கழன்று கீழே விழுகிறது. இயேசுவின் பாடுகளை நினைத்து, அவர்தம் அன்னை மரியாவும் துயரத்தால் நிறைந்துள்ளது தெரிகிறது.
வழக்கம்போல, இத்திருவோவியத்திலும் கிரேக்க எழுத்துகளும் சொற்சுருக்கங்களும் உள்ளன. படத்தின் மேல்புறம். இடமும் வலமும் ‘இறைவனின் தாய்’ (Mother of God) என்னும் சொற்சுருக்கம் உள்ளது.
ஓவியத்தின் இடது புற வானதூதரின் மேல்பகுதியில் OAM என்னும் எழுத்துகள் ‘மிக்கேல் அதிதூதர்’ (Archangel Michael) என்பதையும், இடது புறம் OAΓ என்னும் எழுத்துகள் "கபிரியேல் அதிதூதர்" (Archangel Gabriel) என்பதையும் குறிக்கின்றன.
குழந்தை இயேசுவின் தலையருகே காணப்படுகின்ற Iς -Xς என்னும் சொற்சுருக்கம் ‘இயேசு கிறிஸ்து’ (Jesus Christ ) என்பதாகும்.
இவ்வோவியம் 1866, 1940, 1990 ஆண்டுகளில் துப்புரவிடப்பட்டு, செப்பனிடப்பட்ட்டிருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.