
செப் .3 அன்று சீனா ஒரு பிரம்மாண்டமான இராணுவப் பேரணியை தன் நாட்டில் நடத்திக்காட்டியது. பார்ப்பதற்கு பழைய ஹாலிவுட் பட காட்சிகளை நினைவு படுத்தினாலும், அந்த காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது. அதற்கு காரணம் சீன இராணுவத்தினரின் நேர்த்தியான அணிவகுப்பும், அதன் பின்னணியில் இருந்த பெய்ஜிங்கின் மிகப் பிரம்மாண்டமான அரண்மனையும் காட்சிகளை கச்சிதமாக காட்டின.
இந்த அணிவகுப்பின் முக்கிய ஹைலைட்டே சீன வீரர்களின் ஒரே மாதிரியான அணிவகுப்பு அசைவுகள்தான். இந்த மாதிரி வித்தை எல்லாம் சீனா மட்டுமே செய்ய முடியும். இதை எல்லாம் தாண்டி, ரஷ்ய அதிபர் புடின், வட கொரிய அதிபர் கிம்ஜான் ஆகியோர் கலந்துகொள்ள இந்நிகழ்ச்சி உலகளவில் பேசு பொருளானது. ஆயினும் இந்த தினத்தில் உள்ள சோகமான வரலாறு என்னவென்று தெரியுமா?
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்து சீனா வெற்றி பெற்றதாக ஒவ்வொரு ஆண்டும் செப் 3 தேதி வெற்றி தின விழாவை கொண்டாடி வருகிறது. 1937 ஆம் ஆண்டு ஜப்பான், சீனா மீது படையெடுத்து ஆக்கிரமித்தது.
ஜப்பான் மிகவும் சிறிய நாடாக இருந்தாலும், மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போரை பொறுத்த வரையில், அனைத்து நாடுகளையும் நடுங்க வைக்கும் நாடாக இருந்தது. ஜப்பான் போர் திறனின் முன்னால், ஜெர்மனியும், இத்தாலியும் அருகில் கூட வர முடியாது. ஜப்பானை பொறுத்தவரையில் அதன் ஆக்கிரமிப்பில் தொடர் வெற்றிகளை குவித்து வந்தது.
ஜப்பான் முதலில் மார்க்கோ போலோ பாலத்தில் தாக்குதல் நடத்தி போரை தொடங்கியது. போரில் ஆரம்பத்தில் இருந்தே ஜப்பானின் ஆதிக்கம் குறையாமல் இருந்தது. அவர்கள் மிகவும் மூர்க்கத்தனமாக சீனாவை தாக்கினர். சீனா தன் வரலாற்றில் நினைத்து பார்க்க முடியாத பேரழிவை சந்தித்துக் கொண்டிருந்தது. சீனாவின் நான்ஜிங் நகரத்தை கைப்பற்ற 50,000 சீன வீரர்களை ஜப்பான் பலி வாங்கியது. மேலும் 3 லட்சம் பொதுமக்களையும் கொன்று குவித்தது. அடுத்து ஷாங்காய், வூஹான் என சீன நகரங்கள் எல்லாம் வேட்டையாடப்பட்டன.
தொடர்ந்து 8 ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போரில் சீன மக்கள் 3.5 கோடி பேர் வரை கொல்லப்பட்டதாக இங்கிலாந்தின் போர் ஆய்வுக் குழு தலைவர் டங்கன் ஆண்டர்சன் பிபிசியில் எழுதி இருந்தார். ஆனாலும் சீனா வென்றது எப்படி? என கேள்வி எழும். ஜப்பான் தனது சேட்டையை சிவனே என்று அமைதியாக இருந்த அமெரிக்கா மீது காட்டியது. அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரை சர்வ நாசம் செய்துவிட்டு வந்தது ஜப்பானிய விமானப்படை.
மோசமான பேரழிவை சந்தித்தாலும் உடனடியாக எந்த ஒரு ரியாக்சனும் காட்டாமல் அமைதியாக இருந்த அமெரிக்கா, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டை வீசி பேரழிவை ஏற்படுத்த, ஜப்பான் உடனடியாக போரில் இருந்து பின்வாங்கியது. ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் சரணடைவாதாக அமெரிக்காவிடம் கோரியது. அதிகாரப் பூர்வமாக செப்டம்பர் 2 ஆம் தேதி அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசோரி போர்க்கப்பலில் ஜப்பான் சரணடையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஜப்பான் ஆக்கிரமித்த சீனா உள்பட பல நாடுகளில் இருந்து வெளியேறியது. செப் 9 ஆம் தேதி முதல் சீனர்களிடம் ஜப்பான் ராணுவம் சரணடைந்தாலும், அந்த பகுதிகளை மீட்க அமெரிக்காவை சீனா நம்பியிருந்தது.
சோவியத் கைவசம் வந்த மிகப்பெரிய மஞ்சூரியா நிலப்பரப்பை விட்டு ஜப்பான் படை தானாக வெளியேறியது. சோவியத் ராணுவம் அப்பகுதிகளை சீனாவிடம் ஒப்படைத்தது. இந்த போரின் ஒரே ஆறுதல் சீனாவிற்கு மஞ்சூரியா கிடைத்ததுதான். ஆயினும் இந்த போரில் சீனாவின் நிலங்கள் மீண்டும் கிடைக்க அமெரிக்காவும் சோவியத் யூனியனும் முக்கிய காரணமாக இருந்தது.
மீண்டும் ஒருமுறை தன் நாடு மோசமாக பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்திலும், சீனாவின் ஆயுத வலிமையை காட்டும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் செப் 3 ஆம் தேதி பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை சீன அரசு நடத்துகிறது.