கேரள மாநிலத்தில் அதிகமாகவும், கர்நாடக மாநிலத்தில் துளுநாடு பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வந்த செண்டை மேளம், தற்போது தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் நடைபெறும் விழாக்களில் முன்னிலை பெற்று வருகிறது. பூப்புனித நீராட்டு விழாச் சடங்கின் போது, தாய்மாமன் சீர் கொண்டு வரும் நிகழ்வுகள், திருமணச் சடங்கின் போது, மண்டபத்தின் முன்பு வரவேற்பு நிகழ்வுகள், கோயில் திருவிழாக்களில் இறை உருவங்களின் வீதி உலா நிகழ்வுகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களது வரவேற்பு மற்றும் ஊர்வல நிகழ்வுகள் என்று பல நிகழ்வுகளில் செண்டை மேளங்களின் அதிகச் சப்தத்துடனான இசையைக் கேட்க முடிகிறது.
செண்டை மேளம் என்பது பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன் பரிணாம வளர்ச்சியைக் கொண்ட ஒரு இசைக்கருவியாகும். 18 ஆம் நூற்றாண்டில் இந்த இசைக்கருவியானது தற்கால வடிவத்தைப் பெற்றிருக்கிறது. இது நீண்ட உருளை வடிவத்திலுள்ள மரக்கருவியாகும்.
இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்ட இதன் இரண்டு முனைகளும் செண்டை வட்டங்களால் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாக, இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்படுகிறது. தரம் மிக்க ஒலிக்காக பசு மாட்டின் அடி வயிற்றுத் தோல் பயன்படுத்தப்படுகிறது. காளை மாட்டின் தோல் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. செங்குத்தாக வைப்பதற்காக வாசிப்பவர்களின் தோளிலிருந்து தொங்கவிடப்படுகிறது. செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படுகிறது.
உரத்த விறைப்பான ஒலிக்கு இந்த இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது. செண்டைக்கு இடது மற்றும் வலது என்று இரண்டு பக்கமுண்டு. இடது பக்கத்தினை இடந்தலை என்றும் வலது பக்கத்தினை வலந்தலை என்றும் சொல்கின்றனர். இடந்தலை ஒன்று அல்லது இரண்டு அடுக்கு மாட்டுத் தோலும், வலந்தலை ஐந்து முதல் ஏழு அடுக்கு மாட்டுத் தோலும் கொண்டது.
இத்தோல்கள் நிழலில் உலர்ந்த பிறகு செண்டை வட்டத்துடன் கட்டப்படுகிறது. செண்டை வட்டம், ஈரப்பனை அல்லது மூங்கில் மரத்தால் உண்டாக்கப்படுகிறது. தோல்களைக் கட்டுவதற்காக பனிச்சை மரத்தின் விதைகளை கொண்ட பசை உபயோகிக்கப்படுகிறது. வட்டக் கட்டமைப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு நாள் முழுவதும் கொதிக்க வைத்த பின் வட்டமாக வளைக்கப்பட்டு காய வைக்கப்படுகிறது.
செண்டையின் உடற்பகுதி 2 அடி 36 அங்குலம் விட்டமும், 1.5 அங்குலம் தடிமானமும் கொண்டது. பலா மரத்தின் இளமரத்தால் செய்யப்படுகிறது. சிறந்த அதிர்வொலிக்காக, தடிமானம் 0.25 அங்குலங்களுக்கு குறைக்கப்பட்டு ஒருமித்த புள்ளியியல் தள்ளி வைக்கப்படுகிறது. ஆண்டில் சராசரியாக ஒரு பறையாளர் 15 முறை மரக்கட்டமைப்பை மாற்றிக் கொள்கின்றனர்.
செண்டை இசைக்கருவி கேரள மாநிலத்தில் நடைபெறும் இந்து சமய விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. கதகளி, கூடியாட்டம், கண்யர்களி, தெய்யம் மற்றும் பல சமஸ்தான நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகத்திலும் யட்சகான கலையின் போது பயன்படுத்தப்படுகிறது.
செண்டை உருவாக்கும் கலை இன்று சில பெரும் கொல்லர் குடும்பங்களுடனே உள்ளது. பெருவேம்பை, இலக்கிடி, நென்மாறை, வெள்ளார்காடு, வலப்பயை போன்ற கிராமங்களில் செண்டை இசைக்கருவி அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இவற்றுள் வெள்ளார்காடு செண்டை மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது.
எட்டரை வீசான் செண்டை, ஒன்பது வீசான் செண்டை, ஒன்பதே கால் வீசான் செண்டை, ஒன்பதரை வீசான் செண்டை, ஒன்பதே முக்கால் வீசான் செண்டை, ஒன்பதே முக்கால் கலி வீசான் செண்டை என்று அளவுகள் வடிவில் பல செண்டைகள் பயன்பாட்டிலிருக்கின்றன.
இதேப்போன்று, உருவ அளவின் அடிப்படையில் வீக்கு செண்டை, அச்சன் செண்டை, உருட்டு செண்டை, முறி செண்டை என்றும் பல செண்டைகள் இருக்கின்றன. உருட்டு செண்டையில் பல மாறுபட்ட ஒலிகளை இசைக்க இயலும். இச்செண்டை இசைக்கருவியே வாத்தியக் குழுவில் முன்னணி வகிக்கும். எனவே, இதனை "பிரமாண வாத்தியம்" என்கின்றனர். வீக்கு செண்டையும் அச்சன் செண்டையும் இசையில் தாளத்தை பராமரிக்க உள்ளது. இதனைக் கொண்டு திடமான ஒலி ஒலிக்க முடியும்.
செண்டை மேளத்தில் செண்டை, இலைத்தாளம், குழல் மற்றும் கொம்பு உட்பட நான்கு வாத்தியங்கள் உள்ளன. செண்டை மேளத்தில், பஞ்சாரி மேளம், பாண்டி மேளம், சம்ப மேளம், செம்பட மேளம், அடந்த மேளம், அஞ்சடத மேளம், த்ருவ மேளம் என்று ஏழு வகையான மேளங்கள் இருக்கின்றன. இவற்றுள் முதல் ஆறு மேளங்கள் "செம்பட" மேளத்தினுள் வருகின்றன. இவற்றைத் தவிர, கேரளத்தில் கல்பம், ஏகதசம் மற்றும் நவம் எனும் மூன்று மேளங்கள் இருக்கின்றன.
பஞ்சாரி மேளம், பாண்டி மேளம் மற்றும் தாயம்பகையில் பயன்படுத்தப்படும் செண்டையின் வட்டம் மெல்லியதாக இருக்க வேண்டும். சிங்காரி மேளம் செண்டையின் வட்டம் திடமாகவும் குறைந்த விலை கொண்டது. சிங்காரி மேளம் மேளக்கலைகளில் சேர்க்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் அதிரடியான மற்றும் அதிகமான சத்தத்துடன் இசைக்கப்படும் செண்டை மேளத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பல விழாக்களில் செண்டை மேளம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு விழாக்களில் ஒலித்து வந்த இனிமையான மங்கல இசையைத் தவிர்த்து, செண்டை மேளங்களின் அதிரடியான இசை தேவைதானா? என்று விழாக்களில் பெரியவர்கள் புலம்புவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.