நூற்றாண்டுகளைக் கடந்தும் பாளையங்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் ஊசி கோபுர தேவாலயம்!

A church that has passed through the centuries
A church that has passed through the centuries
Published on

‘இரட்டை நகரம்’ என அழைக்கப்படுபவை திருநெல்வேலி, பாளையங்கோட்டை. இவற்றில் பாளையங்கோட்டையின் அடையாளச் சின்னமாக அமைந்திருப்பது ஊசி கோபுரம் என அழைக்கப்படும் தூய திரித்துவ பேராலயம். இந்த ஆலயம் 1826ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டதாகும். பாளையங்கோட்டையில் ஊசி கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது.

தென்னிந்திய திருச்சபையின் போதகரான ரேனியஸ் பாளையங்கோட்டையில் ஒரு பெரிய தேவாலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜபித்தார். 1826ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் நாள் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்திற்கு கால்கோள் நாட்டு விழா நடைபெற்றது. அதே ஆண்டில் ஜூன் மாதம் மூன்றாம் தேதி ஆறு மாதங்களுக்குள் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தேவாலயத்திற்கு பெரிய கோயில், புது கோயில், வேத கோயில், ரேனிஸ் கட்டிய கோயில், ரோடு கோயில் என்று மக்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அழைத்து இயேசுவை வணங்கிச் சென்றனர்.

ரேனியஸ் நெல்லையில் விடைபெற்றதும் பேராயர் காரி 1830ம் ஆண்டில் முதல்முறையாக திருநெல்வேலிக்கு வந்தார். அப்போது பாளையங்கோட்டை பெரிய கோயிலில் தேவசகாயம் என்பவருக்கு கிறிஸ்துவப்பட்ட ஆராதனையின்போது இவ்வாலயத்திற்கு ‘பரிசுத்த திரித்துவ பேராலயம்’ என்று பெயர் சூட்டினார். நூற்றிபதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1940ம் ஆண்டில் அந்நாளில் நெல்லை பேராயர் ஸ்தேவான் நீல் காலத்தில், ‘அத்தியட்சாலயம்’ என்ற பெயரும் பெற்றது. எத்தனைப் பெயர்கள் இருந்தாலும் மக்கள் ஊசி கோபுரம் என்று அழைப்பதில்தான் பெருமை கொள்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
மின்சார கிறிஸ்துமஸ் மர விளக்குகளைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?
A church that has passed through the centuries

இந்த ஊசி கோபுரம் கட்டும் பணிகள் 1845ம் ஆண்டு தொடங்கியது. கோபுரத்துக்கு உறுதியான அடித்தளம் அமைய கோட்டை சுவர்களில் உள்ள கற்களை அதிகாரிகளின் அனுமதியோடு பெற்று பயன்படுத்தினார்கள். கோபுரத்தை மூன்று தளங்கள் உடையதாகவும் உச்சிப்பகுதி ஊசி போன்ற அமைப்புடையதாகவும் அமைத்தனர். கோபுரத்தின் உச்சியில் ஆறடி சுற்றளவு உள்ள இரும்பு உருண்டை பதிக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் 1845ம் ஆண்டிலேயே நிறைவடைந்தன.

இறை வழிபாட்டிற்கு மக்களை அழைக்க மணி அடிக்கும் பழக்கம் அன்று இல்லை. பனந் தூறு ஒன்றில் துளையிட்டு அதன் மேல் பகுதியை ஆட்டுத் தோலால் போர்த்தி அதைத் தட்டுவதன் மூலம் ஓசை எழுப்புகிற முறையே அன்று இந்த ஆலயத்தில் கையாளப்பட்டது.

கோபுரம் ஆலயத்திற்கு அணியாகவும் நகருக்கு அலங்காரமாகவும் கிறிஸ்துவ பெருமானுக்கு நற்சாட்சியாகவும் விளங்கி வருகிறது. நெல்லை பகுதியில் இந்த கோபுரம்தான் மிக உயரம் உடையதாக திகழ்கிறது. நூற்றிபதினைந்து அடி உயரம் உடையது. இத்தகைய  அமைப்புடைய கோபுரத்தை ஆங்கிலத்தில் ‘ஸ்டீபிள்’ என்று அழைப்பார்கள். தமிழில் ‘ஊசி கோபுரம்’ என்று அழைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
7 சிறந்த 'ரகசிய சான்டா' பரிசு யோசனைகள்!
A church that has passed through the centuries

ஆலய மணியும் கடிகாரமும் லண்டனை சார்ந்த ஜான் முரே சன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை. அது கடந்த 1850ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி வந்து சேர்ந்தது. பின்னர் ஊசி கோபுரத்தில் ஏற்றப்பட்டது. இவ்வாலய மணி சமீப காலத்தில் இரு முறை பழுதடைந்து மீண்டும் வார்க்கப்பட்டது. எனினும் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கடிகாரம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பது வியப்பான விஷயமாகும். கடந்த 1998ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிக்கன் சபையின் சார்பில் புதிய பெரிய மணி வழங்கப்பட்டது. இதுவே தற்போது கோபுரத்தில் உள்ள மணியாகும்.

இன்றளவும் கிறிஸ்துவ மக்களின் பிரார்த்தனைக்குரிய முக்கிய இடங்களில் ஒன்றாக திகழும் ஊசி கோபுரம் தேவாலயம்  பாளையங்கோட்டையின்  முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com