

உலக வரலாற்றில் தவறுகளும் கூட சில நேரங்களில் அதிசயங்களை உருவாக்குகின்றன. அதன் சிறந்த உதாரணம் தான் இத்தாலியின் புகழ்பெற்ற பைசா கோபுரம் (Leaning Tower of Pisa). மத்திய காலத்தில் ஒரு மணிக்கோபுரமாக கட்டத் தொடங்கிய இந்த கட்டடம், அடித்தள பிழை காரணமாக சாய்ந்து போனபோதிலும், இன்று உலகமே பார்த்து வியக்கும் சிற்பக்கலையின் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. அதனைப் பற்றி அறிந்து கொள்ளலாமே.
வரலாறு
பைசா நகரம் ஒரு காலத்தில் செழிப்பும் வர்த்தக வளமும் நிறைந்த நடுப்பாலைய நகரமாக இருந்தது. நகரின் பெருமையை உலகுக்கு காட்டும் வகையில் பெரிய தேவாலயம், அதன் பின் பாப்டிஸ்ட்ரி (baptistery) மற்றும் இறுதியாக மணிக்கோபுரம் கட்டத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் 1173 ஆம் ஆண்டு பைசா கோபுரத்தின் கட்டுமானம் தொடங்கியது. ஆனால் கட்டுமானத்தின் ஆரம்பகட்டத்திலேயே கோபுரம் சற்றே ஒரு பக்கம் சாய ஆரம்பித்தது.
இப்பொழுது உலக அற்புதமாகக் கருதப்படும் இந்த சாய்வு, அதற்கான காலத்தில் ஒரு கட்டுமானத் தவறாகவே பிறந்தது.
கட்டுமான கட்டங்கள்
பைசா கோபுரம் ஒரே காலகட்டத்தில் கட்டப்படவில்லை. சுமார் 200 ஆண்டுகள் பல கட்டங்களாக அமைக்கப்பட்டது.
முதல் கட்டம் (1173–1178): கோபுரத்தின் முதல் மூன்று தளங்கள் மட்டுமே கட்டப்பட்டபோது அது வடக்கே சாயத் தொடங்கியது. காரணம் மண் பலவீனம். இதனால் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அடுத்த 100 ஆண்டுகள் Pisa பல போர்களில் ஈடுபட்டதால் கட்டுமானம் தொடர முடியவில்லை. இந்த இடைவேளையில் மண் மெதுவாக அடித்து நிலைபெற்றது.
இரண்டாம் கட்ட கட்டுமானம் (1272–1284): கட்டுமானம் மீண்டும் தொடங்கியபோது 4 முதல் 6 தளங்கள் சேர்க்கப்பட்டன. சாய்வை குறைக்க மேல்தளங்கள் ஒவ்வொன்றும் சிறிய கோண வித்தியாசத்துடன் கட்டப்பட்டதால் கோபுரம் சற்று “S” வடிவமாக வளைந்தது.
இறுதி கட்டம் (1350–1372): கடைசியாக மணி ஓங்கும் பகுதி (Bell Chamber) கட்டப்பட்டு 1372ல் கோபுரம் முடிவடைந்தது. முடிந்தபோதும் அது தெளிவாக சாய்ந்தபடியே இருந்தது.
அறிவியல் காரணங்கள்
பைசா கோபுரம் ஏன் சாய்ந்தது என்பதற்கான காரணங்கள் அனைத்தும் புவியியல் மற்றும் பொறியியல் பிழைகளோடு தீவிரமாக தொடர்புடையவை.
மென்மையான மண்: கோபுரம் கட்டப்பட்ட பகுதி பழைய காலத்தில் சதுப்பு நிலம். அதில் இருந்தது களிமண், மணல், சுண்ணாம்பு மண் இவை அனைத்தும் எடை தாங்கும் வலிமை குறைவானவை.
3 மீட்டர் மட்டுமே கொண்ட அடித்தளம் இந்த 14,500 டன் எடையுள்ள கட்டிடத்துக்கு போதாமல் போனது. மண்ணின் ஒரு பகுதி அதிகமாக உட்கார, மற்ற பகுதி நிலையாக இருந்தது. இதனால் கோபுரம் ஒருதிசை மட்டும் சாய்ந்து விட்டது.
கோபுரத்தை பாதுகாத்த நவீன அறிவியல்: 90களில் கோபுரம் ஆபத்தான சாய்விற்கு சென்றதால் ஐரோப்பாவின் பல விஞ்ஞானிகள் இணைந்து அதை காப்பாற்றினர். அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் எதிர்புற மண்ணை எடுத்து கோபுரத்தை நேராக்கும் Soil Extraction, அடியில் பெரிய எடைகள் வைத்து சமநிலை பெறும் Counterweights, இரும்பு கம்பிகளால் தற்காலிகமாகப் பிடித்து நிலத்தடி மண்ணை உறுதிப்படுத்தினர். இதனால் கோபுரத்தின் சாய்வு 5.5° ல் இருந்து 4° ஆகக் குறைக்கப்பட்டது.
பைசா கோபுரம் ஒரு கட்டுமானத் தவறிலிருந்து உலக அதிசயமாக மாறிய ஒரு சின்னம். மனிதன் செய்யும் தவறும், அதை அறிவியலின் உதவியால் சரி செய்வதற்கான முயற்சிகளும் இந்த கோபுரத்தின் வரலாற்றில் அழகாக பிரதிபலிக்கின்றன. இந்த கோபுரம் இன்று இத்தாலிய கலாச்சாரத்தின் அடையாளமாக மட்டுமல்லாது, உலக பொறியியல் திறனின் அடையாளமாகவும் நிற்கிறது. காலத்தால் அழியாத இந்த சாய்ந்த கோபுரம், மனித கலைத்திறமைக்கும் அறிவியலுக்கும் வணங்கப்படும் ஒரு நித்தியச் சின்னமாகத் திகழ்கிறது.