தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கும் சென்னை, பல்வேறு அடையாளங்களுக்கு பிரசித்தி பெற்றது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது மெரினா கடற்கரை. 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தியாவிலேயே மிகப் பெரிய மற்றும் உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாக இது விளங்குகிறது. இப்போது அங்கே தலைவர்கள் பலருக்கு நினைவு மண்டபங்களும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிலையை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை. உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும் மே நாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்ட சிலை இது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 1959ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1923 மே மாத மாலைப் பொழுதில்தான், பொதுவுடைமைவாதியான சிங்காரவேலர் முன்னெடுப்பில் இந்தியாவில் முதன் முதலாக மே நாள் இதே மெரினாவில் கொண்டாடப் பட்டது. மே நாள் கொண்டாட்டத்தில் மெரினா பிரிக்க முடியாததாக இருந்ததாலேயே, உழைப்பாளர் சிலை அங்கு வைக்கப்பட்டது.
இந்தக் கடற்கரையில் நிறுவப்பட்ட முதல் சிலை என்ற பெருமை உழைப்பாளர் சிலையைத்தான் சேரும். மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட சிலைகளில் இது மிகவும் பழைமையானது. மே நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும் முக்கிய நிகழ்விடமாகவும் இது உள்ளது.
அப்போதைய மெட்ராஸ் அரசின் கலை மற்றும் கைவினைப் பள்ளியின் முதல் இந்திய முதல்வராக இருந்த சிற்பி தேவி பிரசாத் ராய் செளத்ரிதான் உழைப்பாளர் சிலையை வடிவமைத்தார். 1959ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தமிழகத்தின் அப்போதைய ஆளுநர் விஷ்ணுராம் மேதியால் இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கேற்ப ஒன்றுபட்டு வியர்வை சிந்தி ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு அயராது, முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை உணர்த்தும் விதமாகவே இன்றும் உழைப்பாளர் சிலை நம் கண் முன்னே உயிரோட்டமாகக் காட்சியளிக்கிறது.