நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சின்னங்கள் (symbols), வெறும் குறியீடுகள் அல்ல. அவற்றுக்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாறும், அர்த்தங்களும் மறைந்துள்ளன. மொபைல் போன், கணினி, டிவி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்களில் இருக்கும் சின்னங்களின் அர்த்தங்கள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஒரு வட்டம், அதற்குள் ஒரு நேர் கோடு இதுதான் பவர் பட்டன் சின்னம். இது, கணினி மொழியில் 'பைனரி' முறையைக் குறிக்கிறது. '1' என்பது 'ஆன்' (on), '0' என்பது 'ஆஃப்' (off). இந்த இரண்டும் இணைந்துதான் இந்தச் சின்னம் உருவானது. இரண்டாம் உலகப் போரின்போது, இன்ஜினியர்கள் இதை முதன்முதலில் பயன்படுத்தினர். இந்தச் சின்னம் சராசரியாக ஒரு நபரால் ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் பயன்படுத்தப்படுகிறதாம்.
ஒரு புள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள அலைகள் கொண்ட இந்த Wi-Fi சின்னம், கண்ணுக்குத் தெரியாத ரேடியோ அலைகளைக் குறிக்க வடிவமைக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு, வயர்லெஸ் நெட்வொர்க் பயன்பாட்டைத் தரப்படுத்துவதற்காக Wi-Fi Alliance என்ற நிறுவனம் இந்தச் சின்னத்தை உருவாக்கியது.
இன்று, Wi-Fi என்பது இணையத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இதன் எளிமையான வடிவமைப்பு, எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் எளிதாகப் புரிந்துகொள்ளப்படுவதால், இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மனித இதயத்தை ஒத்திருக்காத இந்தச் சின்னம், அன்பு மற்றும் பாசத்தின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. இதன் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன. பண்டைய காலத்தில் கருத்தடைக்கு பயன்படுத்தப்பட்ட 'சில்ஃபியம்' என்ற தாவரத்தின் விதையின் வடிவத்திலிருந்து இது வந்திருக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுகிறது. மற்றொரு கோட்பாடு, மத்திய காலத்தில் விசுவாசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஐவி இலையுடன் (ivy leaf) இதை இணைக்கிறது. இன்று, உலகளவில் அனுப்பப்படும் எமோஜிக்களில் 10% க்கும் மேல் இந்தச் சின்னம் உள்ளது.
ப்ளூடூத் சின்னம் இரண்டு நோர்ஸ் (Norse) எழுத்துக்களின் கலவை. இவை 10 ஆம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்ட அரசர் ஹரால்ட் ப்ளூடூத்தை (Harald Bluetooth) குறிக்கின்றன. இவர் டென்மார்க் பழங்குடியினரை ஒன்றிணைத்தார். அதேபோல, ப்ளூடூத் தொழில்நுட்பமும் சாதனங்களை ஒன்றிணைக்கிறது. 1994 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், இன்று நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.
வலதுபுறம் நோக்கிய ஒரு முக்கோணம், இதுவே ப்ளே பட்டன். இதன் வரலாறு, 1960களில் இருந்த ரீல்-டு-ரீல் டேப் ரெக்கார்டர்களுடன் தொடர்புடையது. இது டேப் நகரும் திசையைக் காட்டியது. டிஜிட்டல் உலகில், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. யூடியூபில் மட்டும் ஒரு நாளைக்கு 5 பில்லியனுக்கும் அதிகமான முறை இந்த பட்டன் கிளிக் செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் "பவுண்ட் சைன்" அல்லது "நம்பர் சிம்பல்" என்று அழைக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இன்று டிஜிட்டல் உலகில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது. 2007ஆம் ஆண்டு, கிறிஸ் மெசினா என்பவர் ட்விட்டரில் உள்ள தகவல்களைப் பிரிக்க, இந்தச் சின்னத்தைப் பயன்படுத்தலாம் என்று முதலில் பரிந்துரைத்தார். ஆனால், ட்விட்டர் நிறுவனம் முதலில் இதை நிராகரித்தது.
ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தத் தோல்விக்குப் பிறகு, ஹேஷ்டேக் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டு, ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர், மற்ற சமூக ஊடகங்களும் இதைப் பின்பற்றின. இந்த எளிமையான சின்னம், ஆன்லைனில் தகவல்களைக் கண்டறியும் முறையை மாற்றியமைத்துள்ளது.
இவற்றுள் உங்களுக்குப் பிடித்த சின்னம் (symbol) எது? கமெண்டில் சொல்லுங்கள்!