

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி மாநிலத்தின் சட்டம் இயற்றும் முதன்மை அமைப்பாக சட்டமன்றம் உள்ளது. இதன் தலைவராக சபாநாயகர் இருக்கிறார். சபாநாயகர் அமரும் இருக்கை சட்டமன்றத்தில் மிக உயர்ந்த கௌரவமிக்க இடமாக உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சபாநாயகர் அமரும் தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் சபாநாயகர் நாற்காலிக்கு 104 வயது ஆகிறது. அந்த நாற்காலி குறித்த சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காண்போம்.
தமிழக சட்டசபையில் ஜனநாயக முறைப்படி அவையின் மாண்புகளை காத்து பாரம்பரிய முறையில் அமைதியாக சபாநாயகர் வழி நடத்துகிறார். தற்போதைய சபாநாயகராக இருக்கும் அப்பாவு அமர்ந்திருக்கும் சபாநாயகர் இருக்கை பல்வேறு வரலாற்று பின்னணிகளை கொண்டது.
சமீபத்தில்தான் அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதிதான் சபாநாயகர் நாற்காலி 104வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. நாற்காலிக்கு பிறந்த நாளா? என ஆச்சரியப்படுபவர்கள் அதற்கான வரலாற்று நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
வெலிங்டன் பிரபு சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த பொழுது அவரது மனைவி லேடி வெல்லிங்டனுடன் சேர்ந்து கடந்த 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு சபாநாயகர் நாற்காலியை பரிசாக வழங்கினார்கள். இந்த நாற்காலி ஐக்கிய ராஜ்யத்தின் (united kingdom) நாடாளுமன்ற சபாநாயகரின் நாற்காலியைப் போன்றே வடிவமைக்கப்பட்டது.
ஐக்கிய சாம்ராஜ்யத்தின் நாடாளுமன்ற சபாநாயகராக தன்னுடைய தாத்தா இருந்ததால் அந்த நாற்காலியின் நிழலிலேயே வளர்ந்ததால் தான் இந்த இருக்கையை பரிசாக வழங்குவதாக வெலிங்டன் பிரபு பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் அழகாக காட்சி தரும் இந்த நாற்காலி வைரம் வாய்ந்த தேக்கு மரத்தினால் நுட்பமாக செதுக்கப்பட்டது. ரகசிய அறைகளையும் கொண்டுள்ள இந்த சபாநாயகர் நாற்காலி ஒவ்வொரு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வார்னிஷ் செய்து சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
வரலாற்று சின்னமாக கருதப்படும் இந்த சபாநாயகர் நாற்காலியை சட்டமன்ற செயலகம் அதனுடைய பழமை மாறாமல் பாதுகாத்து வருகிறது. சபாநாயகரும் அவருக்கு மேலான அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே இந்த இருக்கையில் அமரலாம் என்பது மாண்பு. அந்த வகையில் சபாநாயகரை தவிர ஜனாதிபதியும், புத்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்ற வரும் கவர்னரும் மட்டுமே இந்த இருக்கையில் அமருவதற்கு தகுதி வாய்ந்தவர்கள்.
சபாநாயகரை தவிர கவர்னரும் ஜனாதிபதியும் அமர்வதற்கு மட்டுமே இன்றுவரை இந்த நாற்காலி வழங்கப்படுகிறது. பரிசாக வழங்கப்பட்ட சபாநாயகர் இருக்கையில் முதல் முதலாக பி. ராஜகோபாலாச்சாரியார் அமர்ந்து அவையை நடத்தினார்.
வெலிங்டன் பிரபுவால் வழங்கப்பட்டு 104 வருட பாரம்பரியத்தை கொண்ட சென்னை தலைமைச்செயலக சட்டசபை வளாகத்தில் இருக்கும் இந்த நாற்காலி, சேப்பாக்கத்தில்உள்ள சென்னை பல்கலைக்கழகசெனட் அரங்கம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம், வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங் கம், ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகை உள்பட பல்வேறு இடங்களுக்கு கொரோனா பரவல் காரணமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.