

பிரசாந்தி நிலையம் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிளையை 14-7-1966 அன்று திறந்த போது பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா (Sathya sai baba) ஆற்றிய அருளுரையின் சுருக்கம்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பிரசாந்தி நிலையம் பகுதியில் தனது கிளை ஒன்றை திறப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அர்த்தம் (பொருள்) என்பது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று.
இந்த வங்கி உங்கள் பணத்தை அதில் போட்டு வைக்கும் போது பாதுகாப்பாக இருப்பதற்கு உதவுகிறது. ஆனால், உங்கள் பணமானது உலகியல் விவகாரங்களுக்கு மட்டுமே உதவுகிறது. ஆனால் இவை அனைத்தையும் துறந்து விட்டு வெறும் கையுடன் செல்ல வேண்டிய நாள் ஒன்றும் வரும். இந்த பாஸ் புக் அங்கே பார்க்கப்படமாட்டாது.
இன்னொரு வங்கி ஒன்று இருக்கிறது. அங்கு உங்களது டெபாஸிட் அனைத்தும் வாங்கப்பட்டு மிக நேர்த்தியாகவும், அந்தரங்கமாகவும் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும், செயலும் நல்லதோ கெட்டதோ அங்கு பதிவு செய்யப்பட்டு கணக்கிடப்படுகிறது.
இந்த வங்கி உங்கள் ஆஸ்தியை (சொத்து, பணம்) பாதுகாக்கையில் அந்த வங்கி உங்கள் ஆஸ்தீகத்தைப் பாதுகாத்து கணக்கிடுகிறது. அந்த வங்கியில் உங்கள் கணக்கை ஆரம்பித்தால் உங்கள் ஆன்மீக முயற்சிகளால் அது வளர்ந்து உங்களுக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் தரும்.
உங்களது வயதான காலத்திற்காக இங்கு சேமிப்பு பழக்கத்தை உருவாக்கி வரும் போது இன்னொரு சேமிப்பு பழக்கத்தை “இதற்கு அப்பால்” உள்ள காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க உருவாக்கிக் கொள்ள வேண்டும். தர்மம் சர, சத்யம் வத, அறவழியில் நட, சத்யத்தையே பேசு என்பது தான் அதற்கான வழி!
இந்த வங்கி கண்டவர்களுக்கேல்லாம் கடனை வழங்காது. யார் அதற்கு தகுதி உள்ளவர்களோ அவர்களுக்கு மட்டுமே அது வழங்கும். அந்த வங்கியும் சத்யம், தர்மம் சாந்தி, ப்ரேமை ஆகியவற்றைக் கொண்டவர்களுக்கே அவர்களது துன்பம், சங்கடத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றும். பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணிய கர்மங்களின் பலனை அந்த வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். அவை இல்லையெனில் உங்கள் செக் அங்கு ஏற்கப்படமாட்டாது.
இந்த வங்கி உங்கள் சொத்தையோ அல்லது வீட்டையோ நிலத்தையோ அடமானமாக வைத்தால் தான் உங்களுக்கு கடனை வழங்கும். அந்த வங்கியோ உங்கள் பூர்வ ஜென்ம கணக்குகளிலிருந்து உங்களுக்கு வேண்டியதை நீங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.
ஆகவே தான் பலர் தீயவராக, கொடுமையாளராக, கருமியாக இப்போது இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக துக்கமின்றி நன்கு வாழ்வதைப் பார்க்கிறீர்கள். அவர்கள் தங்கள் பழைய கணக்கில் சேமிப்பாக வைத்ததை இப்போது எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சில சமயம் இந்த வங்கி உங்களுக்கு ஓவர் டிராப்ட் மூலம் உதவி செய்து உங்களை தற்காலிக நெருக்கடிகளிலிருந்து காக்கிறது. எவ்வளவு ஓவர் டிராப்ட் தருவது என்பதை வங்கி மானேஜர் உங்களது நம்பகத்தன்மை மற்றும் தகுதி ஆகியவற்றைப் பொருத்து முடிவு செய்கிறார்.
நீங்கள் சத்கர்மம், சச்சிதானந்தம், சத்பாவம், சத்சங்கம் ஆகியவற்றின் மூலமாக எவ்வளடு சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து கடவுள் தன் அனுக்ரஹத்தையும், கருணையையும் வழங்குகிறார்.
இந்த வங்கியில் உங்கள் நகைகள், சட்ட ரீதியான ஆவணங்கள், பணம், மதிப்பு வாய்ந்த பொருள்களை பாதுகாப்பாக வைக்க சேஃப்டி வால்ட்ஸ் உள்ளன. திருடர்களிடமிருந்து அவற்றை இந்த பாதுகாப்புப் பெட்டகங்கள் காக்கின்றன.
ஆன்மீகக் கணக்கைக் கொண்டுள்ள அந்த வங்கியிலும் சேஃப்டி வால்ட்ஸ் உள்ளன. ரத்தினங்கள் போல உள்ள உங்களது அறிவு, புத்திகூர்மை, சேவை செய்யும் திறன், நீங்கள் போற்றி வளர்க்கும் உங்கள் அகங்காரம் ஆகிய அனைத்தையும் அங்கு சரணாகதி செய்து விடுங்கள். பிறகு நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள், மாம் ஏகம் சரணம் வ்ரஜ – என் ஒருவனையே சரணாக அடை என்று அவன் உங்களை அழைக்கிறான். பின்னர் அப்படிச் செய்தால் மா சுச – நீ துக்கமே பட வேண்டாம் என்பது அவன் வாக்கு.
தனஞ்செயன் என்று அர்ஜுனன் அழைக்கப்படுகிறான். இங்கு தனம் என்பது அவனது ஆன்ம ஞானத்தைக் குறிக்கிறது. இந்த வங்கி ஒரு விதமான தனத்தைப் பாதுகாக்கும் போது அந்த வங்கி எளிமை, புனிதம், பற்றின்மை, நல்ல வாழ்வு வாழ்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்களின் அந்த தனத்தை ஏற்றுக் கொள்கிறது.
இந்த வங்கியில் உங்கள் உலகியல் பணத்தைக் கொண்டு வந்து போடுங்கள். இன்னொரு தனமான நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். அவற்றை டெபாசிட்டுகளாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.