நாட்டிடம் விமானங்கள் இல்லாது போனது வேடிக்கையே!

Flight cancellation
Flight cancellation
Published on
Kalki Strip
Kalki

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் மிக முக்கிய இடத்தை வகிப்பது, விமானக் கண்டுபிடிப்பு என்றால் அது மிகையாகாது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே சகலமும் முன்னேறியதாகச் சொல்வார்கள். அது போலத்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் பட்டதால்தான் பரந்து கிடக்கும் பூமி, பந்தாகச் சுருண்டு போனது!பக்கத்திலிருக்கும் சிங்கப்பூருக்கே பலநாள் கப்பற் பயணம் மேற்கொண்டார்கள் நம் முன்னோர். நாமோ!காலை டிபனைச் சென்னையில் முடித்து விட்டு, லஞ்ச் சாப்பிட சிங்கப்பூரில் இறங்கி விடுகிறோம்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா என்று எல்லா நாடுகளுக்கும் எளிதாகப் பறந்து விடுகிறோம். அதிலும் ஐடி கம்பனிகளின் ஆதிக்கம் ஆரம்பித்த நாளிலிருந்து, விமானங்களின் எண்ணிக்கை விரைந்தே கூடி விட்டது. வயதானவர்களுங்கூட உலகை வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். கழுத்து வலிக்க உயரே பார்த்தவர்கள் எல்லாம் இன்று ஏரோப்ளேன்களில் ஏக உயரத்தில் பறக்கிறார்கள்.

சின்னச் சின்ன நாடுகள் கூட, பல விமானங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளன. நாமும் வைத்திருந்தோம். ஆனாலும், சீனாவைப் பின்னுக்குத் தள்ளி மக்கட்தொகையில் நம்பர் ஒன் இடத்துக்கு வந்த பிறகும், ஐடியில் உலக அளவில் நம் இந்தியர்கள் பிரதான இடத்துக்கு வந்து விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்ள ஆரம்பித்தபோதும், நாட்டு விமானங்களைத் தனியாருக்கு விற்று விட்டோம்!

மகாபாரதத்தில் கர்ணனுக்கு முனிவர் 'தேவைப்படும் நேரத்தில் உன் ஆயுதங்கள் உனக்கு உதவாமற்போகும்’ என்று சாபமிட்டதைப்போல, தேவைப்படும் நேரத்தில் நாட்டிடம் விமானங்கள் இல்லாது போனது வேடிக்கையே!

நேற்று (08-12-25) கூட சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 71 இண்டிகோ விமானங்கள் ரத்தாம். தொடரும் தொல்லை இது! ஆயிரக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு, அடித்துப் பிடித்துக் குடும்பத்தாருடன் விமான நிலையத்தை அடைவோருக்கு, முதலில் தாமதமென்றும், பின்னர் ரத்து என்றும் சொல்ல, விமானக் கம்பனிகள் வெட்கப்பட வேண்டாமா? அலைக் கழிக்கப்பட்ட அவர்களுக்கு, பணத்தைத் திருப்பிக் கொடுப்பதே தண்டனை என்றால், அதனையும் முறையாகத் தராதது மோசத்தின் உச்சமல்லவா? அதனையும் விட அதி மோசம், மீண்டும் புக் பண்ண, கூட்டப்பட்ட கட்டணம் கேட்பதல்லவா?

இதையும் படியுங்கள்:
பயணிகள் ஷாக்..! விமானத்திற்குள் சிறகடித்து பறந்த புறா!!
Flight cancellation

பெங்களூரிலிருந்து டெல்லிக்கு ரூ 1.02 லட்சம் என்று வரும் செய்தி வயிற்றில் புளியைக் கரைக்கிறது. நாட்டு மக்களின் பல்சை ஏற்றிப் பதம் பார்ப்பதல்ல ஒரு நாட்டின் முன்னேற்றம்! மக்களின் அமைதி வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பதல்லவா முன்னேற்றத்தின் முதல்படி!

‘வருமுன் காப்போம்!’ என்று உலகுக்கு உணர்த்திய நாம்தான், வந்த பின்னால் அவதிப்படுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். சரிபோகட்டும். இந்தக் கசப்பான அனுபவத்தை முன்னிட்டாவது மத்திய அரசு இரண்டு, மூன்று விமானக் கம்பனிகளைப் போதுமான விமானங்களுடன் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை மத்திய அரசு யோசித்தால், மாநில அரசுகளாவது விமானங்களை வாங்கி இயக்க முன் வர வேண்டும். குறைந்தது உள்நாட்டுப் பயணங்களுக்காவது அவற்றைப் பயன்படுத்தலாமே!

இதையும் படியுங்கள்:
வின்ஸ்டன் சர்ச்சிலின் நகைச்சுவை குறும்புச் சரங்கள்!
Flight cancellation

ஏற்கெனவே மாநில அரசு, முதலமைச்சரின் பயணத்திற்காக விமானம் வைத்திருப்பதாகச் செய்திகள் வந்தன. அத்தோடு பயணியர் விமானங்களையும் சேர்த்துக் கொள்ளலாமே! விதிகள் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றை மாற்றிக் கொள்வதில் தவறில்லையே! ஜனநாயக நாட்டில் பிரதான இடம் மக்களுக்குத்தானே!அவர்கள் விருப்பப்படிப் பயணங்களை மேற்கொள்ள வசதிகளை அமைத்துத் தர வேண்டியது அரசுகளின் கடமையல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com