குருவின் பெருமை பேசும் 'குருபூர்ணிமா' - இந்த நாளை எவ்வாறு அனுசரிக்க வேண்டும்?

guru Purnima 2025
guru Purnima 2025
Published on
deepam strip

“ஞானம் என்னும் மைதீட்டும் தூரிகையால், அறியாமை இருளால் ஒளியிழந்தவனுடைய அகக் கண்ணைத் திறந்து வைத்த குருவுக்கு வணக்கம். – சமஸ்கிருத ஸ்லோகம்.”

ஒவ்வொரு வருடமும், ஆஷாட மாதம் பௌர்ணமியன்று குரு பூர்ணிமா அனுஷ்டிக்கப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களில் ஒன்று. இது ஆனி மாத அமாவாசையோடு தொடங்கி, ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடியும். குரு என்ற வட மொழிச் சொல்லுக்கு “இருளை நீக்குபவர்” என்று பொருள். ஆகவே, அறியாமையை நீக்கி ஆன்மீகத்தைப் போதிக்கும் ஆசிரியர் அல்லது வழிகாட்டியைக் குரு என்று சொல்லலாம். அதைப் போலவே கல்விக் கண்ணைத் திறக்கும் ஆசிரியரையும் குரு என்று குறிப்பிடலாம். பூர்ணிமா என்பது முழு நிலவு நாள்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இந்து மத சம்பிரதாயத்தில் குரு தெய்வத்திற்கும் மேலாகப் போற்றப்படுகிறார்.

நம் நாட்டில் செப்டம்பர் 5ஆம் தேதியை “ஆசிரியர் தினம்” என்று அனுசரிக்கிறோம். ஆனால், இந்த தினம் பொதுவாக கல்வி சார்ந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் குரு பூர்ணிமா, ஆசிரியர் மற்றும் ஆன்மீக வழிகாட்டிகளைக் கௌரவிக்கிறது. ஞானம், அறிவு, வழிகாட்டுதல் ஆகியவற்றைப் போற்றுகிறது. இந்த நாள் ஆன்மீகம், வேதம், பாரம்பரிய கலாச்சார வேர்களைப் போற்றும் நாள்.

குரு பூர்ணீமா, இந்து மதத்தின் ஆதி குரு என்று கருதப்படும், வேத வியாசர் பிறந்த நாள். தலை சிறந்த ஆன்மீக குருவாகப் போற்றப்படும் வியாசர், ஐந்தாவது வேதம் என்று பூஜிக்கப்படும் மகாபாரதம் எழுதியவர். சப்தரிஷிகளுக்கு ஞானத்தைப் போதித்தவர்.

குரு என்பவர் ஞான மார்க்கத்தை தானும் அறிந்து, தன்னுடைய சீடர்களை, ஆன்மீக பாதைக்கு அழைத்துச் செல்கிறார். குரு, சிஷ்ய உறவு நிலையானது. காலத்தால் அழிக்க முடியாதது. இந்த உறவு நம்பிக்கை, மரியாதை, அவரின் போதனைகள் மீதுள்ள ஈடுபாடு ஆகியவற்றால் உருவாகிறது. குருவின் வழி காட்டுதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவன், தன்னைப் பற்றி அறிவதுடன், பரம் பொருளுடன் தன்னுடைய இணைப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறான்.

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுவடுகள்- 6 குரு பூர்ணிமா தினத்தில் எடுத்த முடிவு!
guru Purnima 2025

இந்துக்களைத் தவிர பௌத்த, சமண மதத்தைப் பின்பற்றுவர்களுக்கும் இந்த நாள் புனித நாள்.

பௌத்தர்கள் இந்த நாளை, கௌதம புத்தரை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறார்கள். போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்ற புத்தர், இந்த நாளில் சாரநாத்தில் தன்னுடைய முதல் ஆன்மீக சொற்பொழிவை நிகழ்த்தினார்.

சமண மதத்தைச் சேர்ந்தவர்கள், மகாவீரர் மற்றும் அவருடைய பிரதான சீடன் கௌதம் சுவாமி நினைவுகளைப் போற்றும் விதமாக இந்த நாளை அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த நாளை எவ்வாறு அனுசரிக்க வேண்டும்:

ஒரு மனிதனுக்கு ஆதி குரு அவன் தாயும், தந்தையும். இந்த நாளில் பெற்றோரை மற்றும் நம்மில் மூத்தோரை வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற வேண்டும்.

ஆசிரியர்களை வணங்கி அவர்களுக்கு பூக்கள், பழங்கள், இனிப்புகள் ஆகியவற்றை அளித்து நம் மரியாதையைத் தெரிவிக்க வேண்டும். ஆன்மீக குருவிற்கு இந்த நாளில் மரியாதை செலுத்த வேண்டும்.

திருத்தலங்கள் சென்று தெய்வ வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. அறிவு மற்றும் ஞானத்தின் கடவுளான விநாயகர், ஆதி குருவான சிவபெருமான் வழிபாடு செய்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
குரு தோஷ நிவர்த்தி தரும் பிரம்ம தேவன் திருத்தலம்!
guru Purnima 2025

குரு பூர்ணிமா என்பது இப்போது தொடங்கிய வழிபாடு அல்ல. நற்பாதைக்கு வழி காட்டிய குருவிற்கு தொன்று தொட்டு, செலுத்தி வருகின்ற மரியாதை இந்த நாள்.

குரு என்பவர் அறியாமையை என்ற இருளை நீக்கும் விளக்கு – சுவாமி விவேகானந்தர்.

மாணவனை யோசிக்கத் தூண்டுபவரே உண்மையான ஆசிரியர் – டாக்டர். இராதாகிருஷ்ணன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com