அன்று முதல் இன்று வரை திருமணமான பெண்கள் தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது என்பது இந்து மதத்தின் சம்பிரதாயமாக உள்ளது. இந்த சம்பிரதாயத்தை வெறுக்கும் சிலர் இதை தற்போது புறக்கணித்தும் வருகின்றனர். பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதன் தாத்பரியம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உண்மையில் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவதில் பல நன்மை தரும் விஷயங்கள் அடங்கி உள்ளன. நமது முன்னோர்கள் எதையும் காரண, காரியத்துடன்தான் சொல்லியும், செய்தும் விட்டுச் சென்றுள்ளனர் என்பதற்கு சாட்சியாகிறது மஞ்சள் கயிறு தாலி.
புற்றுநோயைத் தடுக்கும் குர்குமின் அடங்கிய மஞ்சள் ஆபத்தான மூலக்கூறுகளால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இதை சருமப்பூச்சாகவோ உணவுகளிலோ பயன்படுத்தி இளவயதிலேயே முதுமைத் தோற்றம் மற்றும் பிற உடல் பாதிப்புகளிலிருந்து பெண்கள் நிவாரணம் பெறலாம். குறிப்பாக, பெண்களின் சரும அழகைக் காக்க மஞ்சள் பெரிதும் உதவுகிறது.
அன்று விவசாயத்துடன் நெசவும் நம் பாரம்பரிய தொழிலின் அடையாளமாக விளங்கியது. ஆதி மனிதன் சிறிது சிறிதாக பெற்ற விஞ்ஞான வளர்ச்சியில் உடைகளை நெய்து அணிந்ததும் ஒன்று. இந்த நெசவின் அடிப்படை நூல்கள். நூல் புடைவை அணிந்து நூல்களினால் திரிக்கப்பட்ட கயிற்றில் மஞ்சள் தடவி அதில் விரலி மஞ்சளைக் கட்டி திருமணத்தின்போது தாலியாகக் கட்டி வந்தனர்.
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த அக்கால பெண்கள் குளிக்கும்போது தினமும் தாலி கயிற்றில் மஞ்சளைப் பூசி வந்தனர். மிகச்சிறந்த கிருமி நாசினியான மஞ்சளின் மகத்துவம் காரணமாக மார்பகப் புற்றுநோயை தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர்.
இதற்கு ஜோதிட ரீதியாகவும் கருத்து உண்டு. கயிறு என்பது கேதுவின் அம்சமாக கருதப்படுவதாகவும், பிரச்னைகளைத் தரக்கூடி கேது கிரகத்தை சமாளிக்க குருவின் அம்சமான மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவதால் மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய உதவும் எனவும் சொல்லப்படுகிறது.
இடைக்காலத்தில், மருத்துவ குணமிக்க விரலி மஞ்சளைக் கட்டி அணியும் பழக்கம் தங்கத்தின் வருகையால் மறைந்தது. தங்கம் அணிவது தெய்வீக ஆற்றலுடன் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தந்து உடலில் ஏற்படும் உடல் வெப்பம், மாதவிடாய் வலி போன்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வாகிறது என்ற கருத்துகளின் அடிப்படையில் பொட்டுத்தங்கமாவது பெண்கள் அணியும் பொருட்டு தாலியாக தங்கத்தை அணியத் துவங்கினர். தங்கம் அந்தஸ்தைக் காட்டும் பொருளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் நூல் புடைவை அணிந்து மஞ்சள் சரடு தாலி அணியும் வழக்கம் பெரும்பாலும் மாறவில்லை. காலப்போக்கில் படித்துப் பணிக்குச் செல்லும் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது குறைய ஆரம்பிக்க, மஞ்சள் கயிற்றில் தாலி போடுவதும் குறைந்து நாகரிகத்தின் மாற்றாக இன்று தங்கச்செயினில் தாலி ஏறி விட்டது.
காலங்களுக்கு ஏற்றாற்போல் சம்பிரதாயங்களும் மாறிப்போனது. மஞ்சள் கயிற்றில் அணிந்த தாலிகள் மங்கலப் பொருளாக விளங்கியதோடு மட்டுமில்லாமல், பெண்களை நோய்களில் இருந்து காத்த பெரும் மருத்துவப் பொருளாகவும் விளங்கியது என்பதில் சந்தேகமில்லை.