தற்போதைய சூழ்நிலையில் மன அழுத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியாக வாழ்வதற்காக பெரும்பாலானோர் நாய்கள், பூனைகள், கிளிகள் மற்றும் பிற விலங்குகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்கிறார்கள். செல்லப்பிராணியை வளர்ப்பதற்கு முன்பு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நேரம்: செல்லப்பிராணியான நாய்களுக்கு நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி விளையாடுவதோடு, நாய்க்குட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பூனைகளும் விளையாட விரும்பும் என்பதால் அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
கிளி, மீன் போன்றவற்றை வளர்க்கும்போது கூண்டுகள் தொட்டிகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு நேரம் ஒதுக்குவதோடு, செல்லப்பிராணிகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கும் நேரம் இன்றியமையாதது. எனவே, அவர்களுக்காக தினமும் நேரம் ஒதுக்க முடியுமா என்று யோசித்துவிட்டு அவற்றை வீட்டில் வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.
2. வீட்டுச் சூழலுக்கு ஏற்ற செல்லப்பிராணி: அவரவர் வீட்டுச் சூழலுக்கு ஏற்ற செல்லப்பிராணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, நாய்களுக்கு ஓடவும், விளையாடவும் அதிக இடம் தேவைப்படும். கிளிகள் அல்லது மீன் போன்ற சிறிய விலங்குகளுக்கு குறைந்த இடமே போதும். ஆனால், அவற்றுக்குப் பாதுகாப்பான, வசதியான சூழல் தேவை.
ஒரு சிறிய அபார்ட்மெண்ட்டிற்குள் நாய் வளர்ப்பது சிறந்த தேர்வு அல்ல. ஆனால், பூனை, மீன் அல்லது கிளி போன்ற செல்லப்பிராணிகள் சிறந்த தேர்வாக இருக்கும்.
3. செலவு: செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்த்தால் அவற்றிற்கு உணவு, பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவிட வேண்டும். அவற்றிற்கு ஏதேனும் நோய் வந்தால் சிகிச்சைக்காக பணம் செலவழிக்க வேண்டும் என்பதால் பட்ஜெட்டை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
4. பொறுப்பு: செல்லப்பிராணியான நாய்கள் 10 முதல் 15 ஆண்டுகளும், பூனைகள் அதைவிட நீண்ட காலமும் வாழ்கின்றன. குரங்குகள், ஆமைகள் பல ஆண்டுகள் வாழ்கின்றன. சில சமயங்களில் தங்கள் உரிமையாளர்களை விட செல்லப் பிராணிகள் அதிக காலம் வாழ்வதால் செல்லப்பிராணிகளை வளர்ப்பது என்பது நீண்ட கால பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும்.
எனவே வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டால், உதாரணமாக வீடு மாறுதல் அல்லது வேலை மாற்றம் ஏற்பட்டால், அந்த சூழ்நிலையிலும் அவற்றை பார்த்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
5. வாழ்க்கை முறைக்கு ஏற்ற செல்லப்பிராணியைத் தேர்ந்தெடுக்கவும்: ஒவ்வொரு செல்லப்பிராணிக்கும் தனித்துவமான ஆளுமை மற்றும் ஆற்றல் நிலைகள் உள்ளன. நாய் அடிக்கடி வெளியே செல்பவர்களுக்கு பொருத்தமான செல்லப்பிராணியாக இருக்கும். ஆனால், வீட்டில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு பூனை அல்லது சிறிய விலங்கு மிகவும் பொருத்தமானது. எனவே வாழ்க்கை முறைக்கு ஏற்ற செல்லப்பிராணியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
செல்லப்பிராணியை வளர்க்க நினைப்பவர்கள் மேற்கூறிய 5 விஷயங்களை அவசியம் கவனத்தில் கொண்டுதான் அவற்றை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும்.