சிறு வயதில் நம்மை மண்ணில் விளையாடக் கூடாது என்று வீட்டில் கண்டித்திருப்பார்கள். ஆனால், தற்போது மண் குளியல் சிகிச்சை செய்துக்கொள்வது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இதை செய்வதால், உடலிலுள்ள பல பிரச்னைகள் குணமாவதாக சொல்லப்படுகிறது. இது உடலை ரிலாக்ஸாக வைப்பது மட்டுமில்லாமல், மூட்டுப் பிரச்னை, சருமப் பிரச்னை, மனம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மண் குளியல் செய்வதை பல நூற்றாண்டுகளாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். அழகு பராமரிப்பிற்கும், மருத்துவ ரீதியாகவும் மண் குளியல் செய்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. மண் குளியல் செய்வது ஆன்மிக ரீதியான பலன்களை அளிப்பதாகவும் சிலர் நம்புகிறார்கள்.
மண் குளியல் செய்வதால், உடலில் உள்ள ஸ்ட்ரெஸ், மூட்டுவலி, கீழ்வாதம், சருமப் பிரச்னைகள் சரியாகிறது. இதை செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல். உடலில் நல்ல இரத்த ஓட்டம் ஏற்படவும் உதவுகிறது.
மண் குளியல் செய்யும்பொழுது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை அது உறிஞ்சி நீக்குகிறது. குறிப்பாக, வயிற்றுப் பகுதியில் இருந்து நச்சுக்களை நீக்குவதால், வயிறு சம்பந்தமான பிரச்னை நீங்கி உடலில் மெட்டபாலிசம் சரியாக நடைபெறுகிறது. இதனால், உடல் எடை குறையவும் உதவுகிறது.
மண் குளியலை சில ஸ்பாக்கள் மற்றும் Resortல் செய்துக்கொள்ளும் வசதிகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படும் மண்ணில் Zinc, Magnesium, Bromine, Sulphur போன்ற மினரல் இருப்பதால், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது, இறந்த செல்களை எக்ஸ்பாலியேட் செய்கிறது, Eczema, Psoriasis போன்ற சருமப் பிரச்னையை குணமாக்க உதவுகிறது. வாதநோய் பிரச்னைகளால் ஏற்படும் வலியைப் போக்குகிறது.
மண் குளியலுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணில் பெரும்பாலும் மினரல் அதிகமாக இருக்கும் களிமண் மற்றும் தண்ணீரை சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் சூடுபடுத்தி அதில் குளிப்பதும், மண்ணை உடலில் எடுத்துப் பூசிக்கொண்டு 15 முதல் 20 நிமிடம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும். அப்போதுதான் மண்ணில் இருக்கும் மினரலை உடலால் உறிஞ்சிக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.
மண் குளியல் செய்யும்போது கண், காது, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் மண் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கர்ப்பிணிப் பெண்கள், மது அருந்துபவர்கள், அதிகமாக சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மண் குளியல் செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்ததாகும்.