
கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது அனைவரது வீடுகளிலும் செய்யப்படும் பிளம் கேக்குகள்தான். இந்த சுவையான கேக் பழங்கள், நட்ஸ் மற்றும் மசாலா பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் வீட்டிலேயே பிளம் கேக் எளிதாக செய்யும் முறையைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
திராட்சை: 1 கப்
பேரிச்சை: 1/2 கப்
ஆப்பிரிக்கோட்: 1/2 கப்
துட்டிப்ருட்டி: 1/4 கப்
பாதாம்: 1/2 கப்
முந்திரி: 1/4 கப்
பிஸ்தா: 1/4 கப்
மைதா: 2 கப்
சர்க்கரை: 1 1/2 கப்
வெண்ணெய்: 1 கப் (உருக்கியது)
முட்டை: 3
பால்: 1/2 கப்
பேக்கிங் பவுடர்: 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா: 1/2 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ்: 1 தேக்கரண்டி
பட்டை: 2 துண்டு
லவங்கம்: 4
ஏலக்காய்: 4
ஆரஞ்சு தோல்: 1 தேக்கரண்டி (துருவியது)
ரம்: 1/4 கப் (விரும்பினால்)
செய்முறை:
உலர் பழங்களை ரம் அல்லது ஆரஞ்சு சாற்றில் குறைந்தது 3 மணி நேரம் அளவுக்கு ஊற வைக்கவும். இதனால், பழங்கள் மென்மையாகி கேக்கிற்கு சுவையைத் தரும்.
அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, மசாலா பொருட்களை சேர்த்து சலித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து கலக்கவும்.
பின்னர், இந்த கலவையில் பால், வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். இறுதியாக ஊறவைத்த உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்குங்கள். இப்போது கேக் டின்னில் வெண்ணெய் பூசி மைதா மாவு தூவி தயார் செய்து கொள்ளுங்கள். தயார் செய்த கலவையை கேக் டின்னில் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 160 டிகிரி செல்சியஸில் சுமார் ஒரு மணி நேரம் பேக் செய்யவும்.
கேக் சரியான பதத்திற்கு வெந்தவுடன் அதை ஓவனில் இருந்து எடுத்து நன்கு குளிர்விக்கவும். கேக் குளிர்ந்ததும் அதன் மீது நட்ஸ் தூவி அலங்கரித்தால் கிறிஸ்துமஸ் பிளம் கேக் தயார். இந்த கேக் வீட்டிலேயே செய்வதால் முற்றிலும் ஆரோக்கியமானது. இந்த ரெசிபி எப்படி இருந்தது என செய்து பார்த்து, உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.