தோவாளை மாணிக்க மாலை - சிறப்புகள் அறிவோம்!

தென் மாவட்டங்களில் உள்ள பிரபலமான கோவில்களில் இந்த மாணிக்க மாலை இறைவனுக்கும் இறைவிக்கும் சூட்டப்படுகிறது.
thovalai manikka malai
thovalai manikka malaihttps://lakshmisharath.com
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை என்னும் ஊர், பூக்களுக்கு பிரசித்தி பெற்றது. இங்குதான் பெயர் பெற்ற மலர் சந்தை உள்ளது. இங்கு இருந்து தான் பூக்கள் பல மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் செல்கின்றன. தோவாளை, பூவுக்கு மட்டுமல்ல பூக்களை அழகாக மாலைகளாக கட்டுவதிலும் பிரசித்தி பெற்ற ஊராகும். இங்கு கட்டப்படும் மாணிக்க மாலைக்கு என தனி வரலாறு இருக்கிறது. மாணிக்க மாலை என்றதும் மாணிக்க கற்களை கோர்த்து செய்வது என நினைக்க கூடாது. இயற்கையாக மலரும் பூக்களை வைத்து தான் மாணிக்க மாலை கட்டப்படும்.

சாதாரண பூமாலைகளை போல தொடுக்காமல் பாய் பின்னுவது போன்று கோர்த்து மாணிக்க மாலை உருவாக்கப்படுகிறது. கூடை பின்னப்படுவதைப் பார்த்து அதே முயற்சியில் இந்த மாலையை தயாரித்தார்கள். சாதாரண பூ மாலைகள் உருளை வடிவில் கட்டப்பட்டிருக்கும். ஆனால் மாணிக்க மாலைகள் பட்டை வடிவில் கட்டப்படுகின்றன.

வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை மட்டுமே மாணிக்க மாலை செய்ய பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்காக அரளிப்பூ, சிவப்பு வண்ணத்துக்காக அரளி பூ மற்றும் பச்சை நிறத்துக்காக நொச்சி இலைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த பூக்கள் சம்பா நாரில் கோர்க்கப்படுகின்றன. பார்ப்பதற்கு பாய் விரித்தது போன்று வித்தியாசமாக இருக்கும்.

நான்கு நாட்கள் ஆனாலும் மாணிக்க மாலை வாடாதிருக்கும். சுவாமிக்கு அணிவிக்கும் மாணிக்கமாலை, தொங்கவிடப்படும் நிலை மாலை, கொத்துமாலை என மாணிக்கமாலையில் நிறைய வகைகள் உள்ளன. சாதாரணமாக, நார்களை மொத்தமாக வைத்துக்கொண்டு ஒரே ஒரு நாரால் பூக்களை கட்டி வைப்பார்கள். மாணிக்க மாலைக்கு நான்கு நார்கள் எடுத்து நான்கு நார்களாலும் பூக்களை கட்டுவார்கள். மற்ற மாலைகளைக் கட்ட அரை மணி நேரத்தில் முடித்துவிடலாம் என்றால் மாணிக்க மாலையை ஒரு முழம் கட்டி முடிக்கவே இருபது நிமிஷம் ஆகும். சின்ன மாலை கட்டவே நாலு மணி நேரம் ஆகும். மாணிக்க மாலையை எவ்வளவு நீளத்தில் எவ்வளவு அகலத்திலும் கட்டுகிறார்களோ அதற்கு ஏற்ப நேரமும் கூடிக் கொண்டே செல்லும்.

இந்த மாலைக்கு மாணிக்க மாலை என்று பெயர் வைத்தது யார் தெரியுமா ?

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஒருவர்தான் இந்த மாலைக்கு மாணிக்க மாலை என பெயர் வைத்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்த சமயத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு தோவாளையில் இருந்து தான் மலர்மாலைகள் தினமும் கொண்டுசெல்லப்பட்டன.

இதையும் படியுங்கள்:
திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி தினமும் சூடும் தோவாளை மாணிக்க மாலையின் பெருமை!
thovalai manikka malai

அப்போது இந்த மாலையும் பத்மநாபசுவாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதற்கு என தனி பெயர் இல்லை. அந்த மாலையை பார்த்த மன்னர், "இது என்ன வித்தியாசமான மாலையாக இருக்கு? தங்க நகைக்கு மேல மாணிக்கத்தை பொருந்தி வச்சது போல இருக்கே... இது என்ன மாணிக்க மாலையா?" என கேட்டார். அதன் பிறகு தான் இதற்கு மாணிக்க மாலை என்று பெயர் ஏற்பட்டது. அதன் பின்பு பத்மநாபசுவாமிக்கு தினமும் மாணிக்க மாலை சாத்தப்பட்டு வருகிறது. இன்றளவும் தினமும் தோவாளையில் கட்டப்படும் மூன்று ஜோடி மாணிக்க மாலைகள் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திருவிழா காலங்களில் தென் மாவட்டங்களில் உள்ள பிரபலமான கோவில்களில் இந்த மாணிக்க மாலை இறைவனுக்கும் இறைவிக்கும் சூட்டப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

தோவாளை மாணிக்க மாலை புவிசார் குறையீடு பதிவு கோரி சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவுகத்தில் 2022 ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகம் அறிவுசார் சொத்துரிமை மையம் ஆகிய நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு மத்திய அரசிதழில் 2024 நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசிதழில் வெளியிட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது. இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெரும் முதல் பூமாலையாக தோவாளை மாணிக்க மாலை இடம் பெற்றுள்ளது.

(கன்னியாகுமரி மாவட்டம் சிறப்புகள் என்ற நூலில் இருந்து)

இதையும் படியுங்கள்:
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு!
thovalai manikka malai

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com