இந்திய வரலாற்றில் மன்னர்களின் காலம், வீரமும் வரலாறும் கலந்தது. பல மன்னர்கள் நம் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சி செய்திருந்தாலும், ஒருசில மன்னர்கள் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து கம்பீரமாக நிற்கிறார்கள். இந்தியாவின் வலிமை வாய்ந்த டாப் 10 அரசர்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 321 - 297): சந்திரகுப்த மௌரியர் பண்டைய இந்தியாவின் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றான மௌரியப் பேரரசை நிறுவியவர். அவர் இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை ஒரே ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்த முதல் அரசராக விளங்கினார். பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி நந்த வம்சத்தை வீழ்த்தி ஆட்சியில் அமர்ந்தார்.
2. அசோகர் (கி.மு. 268 - 232): சந்திரகுப்தரின் பேரனான அசோகர், இந்திய வரலாற்றில் மிகவும் பிரபலமான மன்னர்களில் ஒருவர். இன்று வரை அவரது பெயர் வரலாற்றில் தவிர்க்க முடியாததாக உள்ளது. கலிங்கப் போர் என்று அழைக்கப்படும் இந்தியாவின் மிகவும் கொடூரமான போருக்குப் பிறகு, அவர் புத்த மதத்தைப் பின்பற்றுபவராக மாறினார். புத்த மதத்திற்கு மாறிய பின் அசோகர் தனது பேரரசு முழுவதும் அமைதி, கருணை மற்றும் மத சகிப்புத்தன்மையை ஊக்குவித்தார்.
3. சமுத்திரகுப்தர் (கி.பி. 335 - 380): ‘இந்தியாவின் நெப்போலியன்’ என்று அழைக்கப்படும் சமுத்திரகுப்தர், வட இந்தியா முழுவதும் குப்தப் பேரரசை விரிவுபடுத்தினார். அவரது ஆட்சிதான் இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கமாகக் கூறப்படுகிறது. அவர் இறக்கும்போது, அவர் 20க்கும் மேற்பட்ட ராஜ்ஜியங்களை இணைத்திருந்தார்.
4. ஹர்ஷவர்தனர் (கி.பி. 606 - 647): ஒட்டுமொத்த வட இந்தியாவின் மன்னராக ஹர்ஷர் இருந்தார். அவர் பல சிறிய ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து ஒரு ஐக்கியப் பேரரசை உருவாக்கினார். இராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தது மட்டுமின்றி, ஹர்ஷர் கற்றல் மற்றும் கலாசாரத்தின் சிறந்த ஆதரவாளராக இருந்தார்.
5. முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1014): தமிழ் மக்களிடையே சோழ வம்சம் இப்போதும் பலமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது, இந்தியாவில் பாண்டிய மற்றும் சேர ராஜ்ஜியங்களின் கூட்டணி மற்றும் இலங்கையில் சிங்கள ராஜ்ஜியங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது.
6. முதலாம் ராஜேந்திர சோழன் (ஆட்சி கி.பி. 1014 - 1044): ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் தனது தந்தையின் வழியிலேயே சோழப் பேரரசை மேலும் விரிவுபடுத்தினார். அவர் சோழ கடற்படையை வலிமையாக்கி, தென்கிழக்கு ஆசியா முழுவதும் வர்த்தகப் பாதைகளை உருவாக்க உதவினார்.
7. பிரித்விராஜ் சௌஹான் (கி.பி. 1177 - 1192): முஸ்லிம் படையெடுப்பாளர்களை எதிர்த்துப் போராடிய மிகச்சிறந்த ராஜபுத்திர மன்னர்களில் பிருத்விராஜ் சௌஹானும் ஒருவர். உண்மையில் முகமது கோரிக்கு எதிரான போர்களுக்காக அவர் மிகவும் பிரபலமானவர். அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த போர் இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான போர்களில் ஒன்றாகும். இருப்பினும் அவர் போரில் இறுதியில் தோற்றார். அவரது வீரம் போலவே அவரது காதல் கதையும் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும்.
8. ஷேர் ஷா சூரி (ஆட்சி கி.பி. 1540 - 1545): ஷேர் ஷா சூரி, சூரி பேரரசின் நிறுவனர் ஆவார். இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்திய பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அவர் பிரபலமானவர். உதாரணமாக ரூபாய் என்ற ஒரு புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது அவர்தான்.
9. அக்பர் (கி.பி 1556 - 1605): இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களில் முகலாயர்கள் மிகவும் முக்கியமானவர்கள். முகலாயர்களின் தாக்கம் இன்றுவரை இந்தியாவில் தொடர்கிறது. ஜஹாங்கீர், ஷாஜஹான் போன்ற பல சக்தி வாய்ந்த ஆட்சியாளர்கள் முகலாய வம்சத்தில் தோன்றியிருந்தாலும் முகலாயப் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளராக பேரரசர் அக்பர் இருந்தார்.
10. சிவாஜி போன்ஸ்லே (1627 - 1680): சிவாஜி போன்ஸ்லே சத்ரபதி சிவாஜி என்றும் அழைக்கப்படுகிறார். முகலாயர்களை தீவிரமாக எதிர்த்த சிவாஜி, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்தியாவின் போர் முறைகளில் சிவாஜி பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.