'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'... நிஜமான அர்த்தம் இதுதானா?

உங்க தாத்தா பாட்டி சொன்ன பழமொழிகளின் நிஜமான அர்த்தம் இதுதான்! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Proverbs with real meaning
Proverbs with real meaning
Published on

சமுதாயத்தில் நீண்ட காலமாக பழக்கத்தில் இருக்கும் அனுபவ குறிப்புகளே பழமொழிகள் ஆகும். பழமொழி என்பது நம் சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவு கூர்மையையும் விளக்குகிறது. ஒரு பொருளை சுருக்கமாக,தெளிவாக, சுவைபட சொல்வதில் பழமொழிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லலாம். நம்மிடையே காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் சில பழமொழிகளையும் அதன் உண்மை அர்த்தங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1: பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க :

புதிதாக திருமணமான மணமக்களை வாழ்த்தும்போதோ, அல்லது மனநிறைவோடு ஒருவரை வாழ்த்தும்போதோ 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!' என வாழ்த்துவார்கள். பதினாறு பிள்ளைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று தான் இது நம்மிடையே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

ஆனால் இதன் உண்மையான அர்த்தம் 16 செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்பதாகும். அந்த 16 செல்வங்கள் நோயின்மை, கல்வி, செல்வம், குறையாத தானிய வளம், ஒப்பற்ற அழகு, நுண்ணிய அறிவு, புகழ், பெருமை, இளமை, குழந்தை பேறு, வலிமை, துணிவு, நீண்ட ஆயுள், காரிய வெற்றி, நல் விதி, மற்றும் இன்ப நுகர்ச்சி ஆகும்.

2. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை:

கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்பதே நம்மிடையே இருக்கும் அர்த்தமாகும். ஆனால் இதன் உண்மையான பொருள் இது இல்லை. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அந்தப் புல்லில் பாய் தைத்து படுத்தால் கற்பூர வாசனை வரும் என்பது இதன் அர்த்தமாகும்.

இதையும் படியுங்கள்:
வாழ்வின் எதார்த்தம் கூறும் அயல்நாட்டு பழமொழிகள்..!
Proverbs with real meaning

3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆயிரம் நபர்களைக் கொன்று ஒரு மருத்துவன் அரை வைத்தியன் ஆகிறான் என்பது நம்மிடையே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் பொருள். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

ஒரு நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு செய்யப்பட்ட மருந்தை கொடுப்பவன் அரை வைத்தியன் என்பதே இதன் முழுமையான பொருளாகும். அரை வைத்தியனுக்கே ஆயிரம் வேர் என்றால் அப்பொழுது முழு வைத்தியன் எவ்வளவு விஷயங்களை கற்று இருக்க வேண்டும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்!

4. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே:

இன்பமும் துன்பமும் பெண்களாலேயே நடைபெறுகிறது என்பதே நம்மிடையே கொள்ளப்பட்டிருக்கும் அர்த்தம்.

ஆனால் இதன் உண்மையான பொருள் நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணை மையமாகக் கொண்டே நடைபெறுகிறது என்பதாகும்.

5. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் :

மற்றவர்கள் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானாக வளரும் என்பதே இப்பழமொழிக்கு நாம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தம்.

ஆனால் இதன் உண்மையான பொருள் ஊரான் வீட்டுப் பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால் (கவனித்து வந்தால்) அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை ஆரோக்கியமாக வளரும் என்பதாகும்.

இதையும் படியுங்கள்:
தென்னை பற்றிய அர்த்தமுள்ள 6 பழமொழிகளும் அறிந்திராத அரிய தகவல்களும்!
Proverbs with real meaning

6. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் :

ஐந்து பெண் குழந்தைகளை பெற்றால் அவர்களை வளர்த்து திருமணம் செய்து, சீர் கொடுத்து அரசனும் தன் செல்வத்தை எல்லாம் தொலைத்து ஆண்டி ஆகிவிடுவான் என்பதே இப்பழமொழிக்கு நம்மிடையே இருக்கும் அர்த்தம்.

ஆனால் இதன் உண்மையான பொருள்

  • ஆடம்பரமாக வாழும் தாய்

  • பொறுப்பு இல்லாத தந்தை

  • ஒழுக்கம் தவறும் மனைவி

  • துரோகம் செய்யும் உடன்பிறப்பு

  • பிடிவாத குணம் உள்ள பிள்ளைகள்

இந்த ஐந்து குணங்களைக் கொண்ட எந்த குடும்பமும் முன்னுக்கு வராது என்பதாகும்.

7. புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து

மனது புண்பட்டிருக்கும்போது போதை ஏற்படுத்தக்கூடிய புகையிலை போன்றவற்றை எடுத்துக் கொண்டால் கவலை மறக்கும் என்பதே நம்மிடையே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் அர்த்தம்.

இதன் உண்மையான பொருள் மனது புண்பட்டு இருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புகவிட்டு (கவனம் செலுத்தி) ஆற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

8.சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்:

பாத்திரத்தில் சாப்பாடு இருந்தால் தான் கரண்டியால் எடுக்க முடியும் என்பதே நம்முடைய அர்த்தமாகும்.

இதன் உண்மையான பொருள் சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதாகும். நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் கந்த சஷ்டி அன்று விரதம் இருந்தால் அவர்களுக்கு இறைவனின் அருளால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதே இதன் உண்மையான அர்த்தம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
பழமொழிகள் தெரியும்; ஜோதிடப் பழமொழிகள் தெரியுமா?
Proverbs with real meaning

நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்திய பல்வேறு பழமொழிகளும், சொலவடைகளும் இன்றும் நம்மிடையே புழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அதற்கான பொருள் தான் மாற்றப்பட்டு வேறு வேறு அர்த்தத்தில் நாம் பொருள் புரிந்து கொள்கிறோம். இனிமேல் எந்த ஒரு பழமொழியாக இருந்தாலும் அதன் உண்மையான பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்பொழுதுதான் நம்முடைய முன்னோர்களின் அறிவுக்கூர்மையை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com