
'நாய் பெற்ற தெங்கம் பழம்' என்பது ஒரு பழமொழி. இதன் பொருள் ஒருவர் தனக்கும் பயன்படாமல், பிறருக்கும் உதவாமல் செல்வத்தை கஞ்சத்தனத்துடன் வைத்திருப்பதைக் குறிக்கும். நாய் ஒரு தேங்காயைப் பெற்றால் அதனால் அதை உடைத்து உண்ணவோ அல்லது மற்றவர்களுக்குக் கொடுக்கவோ தெரியாமல், அதை உருட்டிக்கொண்டே அலையும். அதுபோலவே ஒரு கஞ்சத்தனமான நபர் பெற்ற செல்வமும், அவருக்கும் பயன்படாமல், பிறருக்கும் பயன்படாமல் பயனற்றுப் போகும் என்பதே இதன் பொருளாகும். தெங்கம் பழம் என்பது நன்கு முற்றிய தேங்காயை குறிக்கும்.
'தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமாம்' என்ற பழமொழி, தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனை மரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? இந்தப் பழமொழியை அப்படியே அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. எங்கோ ஒரு செயல் நடந்தால் அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்பதுதான் இதன் பொருள்.
தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமல் இருப்பதற்காக ஒருவிதமான எண்ணையை உடலில் பூசிக்கொண்டு மரம் ஏறுவார்கள். அப்படி ஏறும் பொழுது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணையின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது. ஆனால், தேளின் விஷம் உடலுக்குள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்திற்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறி கட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்பொழுதுதான் அதன் உண்மையான வலி தெரியும். 'தென்னை மரத்தில் ஏறும்போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும்போது நெறி கட்டும்' என்பதே உண்மையான பழமொழி. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்று பின்னர் மருவி கூறப்படுகிறது.
'தென்னை மரத்திற்கு தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும்' எனும் பழமொழி, தென்னை மரத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தால் அது தலையாலே, அதாவது உயரமாக வளர்ந்து இளநீர் போன்ற நல்ல பலனைத் தரும் என்பதைக் குறிப்பதாகும். ஒருவர் தொடர்ந்து உதவி செய்தால் அவர் நல்ல பலன்களைப் பெறுவார் என்பதை உணர்த்தும் பழமொழி இது.
'தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்' என்னும் பழமொழி, ஒரு பண்ணையில் தென்னை மரங்கள் செழித்து வளர்ந்தால், அந்தப் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வளமாக்கும். தென்னை மரங்களின் வளமான வளர்ச்சி, அம்மரங்களிலிருந்து கிடைக்கும் பல வகையான பொருட்களான இளநீர், தேங்காய், நார்ப்பொருள் போன்றவற்றின் மூலம் பண்ணையின் வருமானத்தை அதிகரிக்கும். தென்னை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், ஒரு பண்ணையின் பொருளாதார நலனுக்கும், விவசாயிகளின் செழிப்புக்கும் தென்னை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை அழகாக எடுத்து கூறும் பழமொழி இது.
‘தேங்காய் தின்னது ஒருத்தன், தண்டங்கட்டுனது ஒருத்தன்’ எனும் பழமொழி, ஒருவர் பலனை அனுபவிக்க, மற்றொருவர் சிரமப்படுவதைக் குறிப்பதாகும்.
'தென்னை வைத்தவன் தின்னுட்டு சாவான், பனை வைத்தவன் பார்த்திட்டு சாவான்' எனும் பழமொழி, தென்னை மரம் ஐந்து வருடங்களுக்குள் பலன் தரக்கூடியது. பனை மரமோ பருவம் அடைய 15 வருடங்கள் எடுத்துக்கொள்ளும். தென்னை மரம் ஐந்தாண்டுகளில் காய் பிடிக்கும். பனை மரம் வளர்ந்து காய் பிடிக்க கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகும். பனை வைத்தால் பெரும்பாலும் நமது காலத்துக்குள் பலன் கிடைக்காது. அதனால்தான் பனை மரம் குளத்துக் கரை, பாசனம் பண்ண முடியாத புறம்போக்கு இடங்களில் மட்டும் நடப்படுகிறது.