அவரவர் இடத்தை உணர்ந்தால் ஆனந்தமே!

Avaravar Idathai Unarnthaal Ananthame
Avaravar Idathai Unarnthaal Ananthamehttp://dakshinkosaltoday.com
Published on

ரு மனிதன் மற்றொரு மனிதனை பார்த்து நலம் விசாரிப்பதற்கு, ‘சௌக்கியமா’ என்று கேட்பார்கள். ‘சௌக்கியமா‘ என்பதற்கு பொருள்,  ‘எல்லாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றதா?’ என்பதே ஆகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் யாரும் அவரவர்கள் இடத்தில் இருப்பதில்லை என்பதே உண்மை. ஆசிரியர்கள் குருவாக, வழிகாட்டியாக இருப்பதில்லை, கல்விக் கூடங்களை அறிஞர்கள் நடத்துவதில்லை, அரசியல்வாதிகள் தலைவர்களாக விளங்குவதில்லை, தலைவர்களாக இருப்பவர்கள் தியாகங்களை செய்யத் துணிவதில்லை, தியாகிகள் ஆட்சிக்கு வர முடிவதில்லை.

மனிதன் ஆசையாலும் எதிர்பார்ப்பாலும் துரத்தப்படுகிறான். அந்த ஆசைதான் நம்மை அடுத்தவனோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது. அடுத்தவன் வாழ்க்கைக்குள் நம் வாழ்க்கையை தேட வைக்கிறது. அதன் விளைவுதான் நம் வீட்டுக் கண்ணாடியே நம்மைக் காட்ட மறுக்கிறது. நிறைவேறாத ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றத்தை தருகின்றன. இதைத்தான், ‘சன்னியாசியின் ஆசை சம்சாரம், சம்சாரத்தின் ஆசை சன்யாசி’ என்று கூறுவார்கள்.

பாரதப் போரில், சாரதியாக இருந்த கண்ணன், போர்க்களத்தில் தேரை நிறுத்துகிறான். அர்ஜுனன் போர் தொடுக்க மறுக்கிறான். பார்த்தன் அவனை இடைமறிக்கிறான். இங்கே பிறக்கிறது கீதை.

இதையும் படியுங்கள்:
சம்பளமாகக் கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்துமிக்க காய் எது தெரியுமா?
Avaravar Idathai Unarnthaal Ananthame

சாரதியாய் இருப்பது கண்ணனின் இடம் என்றால், சண்டையிடுவது அர்ஜுனன் இடம். இருவருக்கான இடமும் கடமையும் வேறு வேறு. கவியரசர் கண்ணதாசன் தனது, ‘அனுபவ மொழிகள்’ என்னும் நூலில் , ‘கடலில் கலந்துவிட்ட நீருக்காக, கங்கை நதி அழ முடியாது. நிலத்தில் உதிர்ந்து விட்ட இலைகளுக்காக, மரம் துக்கம் கொண்டாட முடியாது. கடலின் ஆழத்தை விட ஏரியின் ஆழம் குறைவுதான். ஆனால், ஏரி நீர் பயன்படும் அளவிற்கு நாம் பயன்பட முடியவில்லை என்று கடல் நீர் கவலைப்பட முடியாது’ என்கிறார்.

ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு இடம், ஒரு பயன், ஒரு பணி, ஒரு தர்மம் உண்டு. எனவே, மனிதர்களாகிய நாம், நமக்கு எது இடம், எது தர்மம் என்று உணர்ந்து அதனைப் பின்பற்ற வேண்டும். ‘எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும். நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு, அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று’ என்று கவியரசர் கண்ணதாசனின் வரிகளை அனைவரும் நினைவில் கொள்வது நலம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com