யூனிட் 731 மர்மங்கள்… மனுஷன 'மரக்கட்டை'னு நெனச்சி வெட்டிப் பார்த்த கொடூரம்!

Unit 731
Unit 731
Published on

இரண்டாம் உலகப்போர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஹிட்லரும், நாஜிக்கள் செய்த யூத படுகொலைகளும்தான். ஆனால், ஆசியாவில் அதைவிடக் கொடூரமான ஒரு சம்பவம் நடந்தது பலருக்கும் தெரிவதில்லை. ஜப்பான் போரில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில், அறிவியலின் பெயரால் மனித நேயத்தையே குழிதோண்டிப் புதைத்த கதைதான் "யூனிட் 731". 

ஷிரோ இஷி!

இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் மூலக்கர்த்தா ஷிரோ இஷி (Shiro Ishii) என்ற ஜப்பானிய ராணுவ மருத்துவர். 1925-ல் ஜெனிவா ஒப்பந்தம் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் போரில் பயன்படுத்தத் தடை விதித்தது. ஆனால் ஷிரோ இஷி, உலக நாடுகள் ஒன்றைத் தடை செய்கிறார்கள் என்றால், அது நிச்சயம் மிக சக்தி வாய்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்று விபரீதமாக யோசித்தான். ஜப்பான் பேரரசரைச் சம்மதிக்க வைத்து, சீனாவின் மஞ்சூரியாவில் ஒரு ரகசிய ஆய்வகத்தை அமைத்தான். வெளியுலகிற்கு இது ஒரு மரம் அறுக்கும் ஆலை, நீர் சுத்திகரிப்பு நிலையம் என்று பொய் சொல்லப்பட்டது.

மரக்கட்டைகள்!

இங்குச் சோதனைகளுக்காகக் கொண்டு வரப்பட்ட சீனர்கள், கொரியர்கள் மற்றும் ரஷ்யர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. அவர்களை ஜப்பானியர்கள் Maruta என்று அழைத்தனர். ஜப்பானிய மொழியில் அதற்கு "மரக்கட்டைகள்" என்று அர்த்தம். மரத்தை எப்படி வெட்டினால் வலி இருக்காதோ, அதேபோல இவர்களையும் வெட்டலாம் என்பதுதான் அவர்கள் லாஜிக். குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

கற்பனைக்கெட்டாத சோதனைகள்!

இங்கு நடந்த சோதனைகளைக் கேட்டாலே நெஞ்சம் பதைபதைக்கும். உயிருடன் இருக்கும்போதே, மயக்க மருந்து கொடுக்காமல் கைதிகளின் வயிறு மற்றும் நெஞ்சைக் கிழித்து உள்ளுறுப்புகளை ஆராய்ந்தனர். மயக்க மருந்து கொடுத்தால் பரிசோதனை முடிவுகள் மாறிவிடும் என்று ஷிரோ இஷி கருதினான்.

கடுமையான குளிரில் கைதிகளை நிறுத்தி, கைகள் மற்றும் கால்கள் முழுமையாக உறைய வைக்கப்படும். அதன் பின் அதைச் சுத்தியலால் தட்டினால், கண்ணாடி உடைவது போலச் சத்தம் கேட்கும் வரை உறைய வைப்பார்கள். பின்னர் சுடுநீரில் வைத்தால் சதை எப்படி உருகி விழுகிறது என்பதை ரசித்துப் பார்ப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
புதிய பாரதத்தை சமைப்போம்! வா இளைஞனே, வா!
Unit 731

கையெறி குண்டுகள் மற்றும் ஃபிளேம் த்ரோயர்களை உயிருடன் இருக்கும் மனிதர்கள் மீது வீசிச் சோதித்தனர். மேலும், பிளேக், காலரா, சிபிலிஸ் போன்ற நோய்க் கிருமிகளை ஊசி மூலம் ஏற்றி, அது எப்படி மனித உடலில் பரவுகிறது என்பதைக் கண்காணித்தனர்.

உயிரியல் போர்!

ஆய்வகத்திற்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் அவர்கள் அட்டூழியம் செய்தனர். பீங்கான் குண்டுகளில் பிளேக் கிருமி தாக்கிய உண்ணிகளை நிரப்பி, சீன கிராமங்கள் மீது வீசினர். சாதாரண இரும்புக் குண்டுகள் வெப்பத்தில் கிருமிகளைக் கொன்றுவிடும் என்பதால் பீங்கானைப் பயன்படுத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு மடிந்தனர்.

இவ்வளவு பெரிய இனப்படுகொலையைச் செய்த ஷிரோ இஷிக்கு என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா? ஒன்றுமே இல்லை. ஜப்பான் சரணடைந்த பிறகு, அமெரிக்கா ஷிரோ இஷியிடம் ஒரு ஒப்பந்தம் போட்டது. "உன் ஆராய்ச்சியின் தரவுகள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்துவிடு, நாங்கள் உன்னைத் தண்டிப்பிலிருந்து காப்பாற்றுகிறோம்" என்று அமெரிக்கா கூறியது.

இதையும் படியுங்கள்:
"போரை நிறுத்த வர்த்தகத்தைப் பயன்படுத்துவேன்"- ரஷ்யாவுக்கு கெடு விதித்த ட்ரம்ப்..!
Unit 731

ரஷ்யாவுக்கு இந்தத் தகவல்கள் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா இந்தத் துரோகத்தைச் செய்தது. இறுதிவரை எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல், தனது 67-வது வயதில் தொண்டைப் புற்றுநோயால் ஷிரோ இஷி இயற்கையாக மரணமடைந்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com