நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரி மாதம், அந்நாட்டின் மீது போர்த் தொடுத்தது. இந்தப் போரால் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 3 ஆண்டுகளைக் கடந்தும் போர் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை என்றால், அந்நாட்டின் மீது அதிக வரிவிதிப்பை கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நேட்டோ தலைவரான மார்க் ருட்டே, அதிபர் ட்ரம்பை ஓவல் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, “ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் மீது நான் மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா இன்னும் 50 நாட்களுக்குள் முடிவுக்கு கெண்டுவர வேண்டும். அப்படி இல்லையென்றால் ரஷ்யாவின் மீது மிகக் கடுமையான வரிகளை விதிக்க நான் தயங்கமாட்டேன். அதோடு இரண்டாம் நிலை வரியாக ரஷ்யா பொருட்களின் மீது 100% கூடுதல் வரியை விதித்து விடுவேன். அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், டாலரின் மதிப்பை உயர்த்தவும் வர்த்தகத்தை நான் பயன்படுத்தி வருகிறேன். போரை நிறுத்தவும் என்னால் வர்த்தகத்தைப் பயன்படுத்த முடியும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ருட்டே ஆகிய மூவரையும் ஒரே இடத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இவர்கள் மூவரையும் தனித்தனியாக சந்தித்து போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் ஆலோசனை செய்திருக்கிறார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை நிறுத்த ஒரு துருப்புச் சீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பொருளாதார தடைகளை ரஷ்யா ஏற்கனவே பலமுறை கண்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல; இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உலக நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்பை அமல்படுத்தி வரும் அமெரிக்கா, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவும் இதே யுக்தியை தற்போது கையில் எடுத்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா மொழி பேசும் லூஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சான் மற்றும் ஸபோரிஷியா போன்ற மாகாணங்களை ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும் எனவும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் நிரந்தரமாக இணையக் கூடாது எனவும் ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. இதனை ஏற்க மறுக்கும் உக்ரைன், பதிலுக்கு ரஷ்யாவை தாக்குகிறது. இந்தப் போர் எப்போது முடியும் என காத்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு ட்ரம்பின் 50 நாள் கெடு எவ்விதமான பலனை அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.