டம் டம் டம் டம் டமாரமாம்... டமார பெருமை அபாரமாம்! தெரிந்து கொள்வோம்..!

Damaram
Old Man playing Damaram
Published on

”தங்கள் சுயப் புராணங்களை ‘டமாரம்’ அடித்துக் கொள்ள, அதிக அளவில் பணம் செலவு செய்கின்றனர்.”

“தாய்மாமன் சீரைத் திருப்பி கேட்ட தம்பி... அதை ஊர்முழுக்க ‘டமாரம்’ அடித்த நாத்தனார்”

“வேளாண் விளை பொருள்களுக்கான விலையை உயர்த்தி விட்டதாக ‘டமாரம்’ அடிக்கிறது அந்தக் கட்சி”

- இப்படி பல செய்திகளில் ‘டமாரம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு செய்தி வேகமாகப் பரப்பப்படுவதை ‘டமாரம்’ அடிப்பது என்கின்றனர். 

இதேப் போன்று, காது கேளாத நிலையைச் சொல்வதற்கு, “இவன் காதில டமாரம் அடிச்சுச் சொல்லனும் போல” என்று சொல்வார்கள். இதன் வழியாக, டமாரத்தின் ஒலி அதிகச் சத்தம் கொண்டது என்று தெரிந்து கொள்கிறோம்.   

டமாரம் என்றால் என்ன? இந்த டமாரத்தின் செயல்பாடு என்ன?

டமாரம் (Damaram) என்பது ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழ்நாட்டின் மரபு வழியிலான ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவியின் பயன்பாடு, தற்போது தமிழ்நாட்டில் மிகவும் அருகி மறைந்து விடும் நிலையில் இருக்கிறது. தொலைவில் உள்ளவருக்கும் இந்த இசைக்கருவியின் ஓசை கேட்கும் என்பதால், இதற்கு டமாரம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நந்தி வாத்தியம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது முரசுடன் தொடர்புடையது. 

இரு கருவிகள் இணைந்த தோலிசைக்கருவி தம்பாளம். அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள்... இரண்டின் நடுப்புறமும் ஒன்றாக பிணைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் கட்டிக் கொண்டோ, கழுத்தில் மாட்டியபடியோ இசைப்பார்கள். இரும்புச் சட்டிகளில் தோல் கொண்டு வார்த்து தயாரிக்கப்படும் கருவி இது. சற்று கனத்த இரும்புத் தகரத்தில் சட்டி போன்ற உருவம் செய்து, மேலே மாட்டுத் தோல் கொண்டு சட்டியோடு சேர்த்து பின்னப்பட்டுள்ளது. கொடுகொட்டி, குந்தளம் போல் இல்லாமல், இந்தக் கருவியின் இரு முகமும் ஒரே அளவில்தான் இருக்கின்றது. இக்கருவியை வளைவு இல்லாத நேரான புளியங்குச்சி கொண்டே இசைக்கிறார்கள். தடிமனற்ற புளியங்குச்சியை உடைத்து, தண்ணீரில் நன்கு ஊற வைத்து, பின் நெருப்பில் வாட்டி வளைத்த பிறகே வாசிக்கத் தகுந்ததாகிறது.

இதையும் படியுங்கள்:
Slap Stick Comedy சொற்றொடர் எப்படி வந்தது தெரியுமா?
Damaram

வட தமிழகத்தில் டமாரம் என்று அழைக்கப்படும் இக்கருவி இரும்பு, பித்தளை அல்லது குடைந்த பலா மரத்தில் செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் பாரம் கருதி சில இடங்களில் மண்ணால் செய்யப்படுகிறது. பெரும்பாலும் இரு முகங்களும் சம அளவிலேயே உள்ளன. சில டமாரங்களில் ஒரு முகம் சற்று சிறியதாக உள்ளது. பசு அல்லது எருமை அல்லது ஆட்டின் தோல் கொண்டு பின்னப்படுகின்றது. அரளிக்குச்சிக் கொண்டு அடிக்கிறார்கள். குருவிக்குச்சி என்னும் குச்சியும் சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள். சில இடங்களில் நேரான குச்சியாலும் சில இடங்களில் ‘உ’ வடிவில் வளைந்த குச்சியாலும் டமாரம் அடிக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் நாகசுரத்துக்கு பக்க வாத்தியமாக டமாரம் இசைக்கபட்டு வந்தது. தவிலில் வாசிக்கக்கூடிய எல்லா தாளங்களையும் டமாரத்திலும் வாசிக்க இயலும். அதே போல் பிற தோல் இசைக் கருவிகளில் இசைக்கக்கூடிய திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம் ஆகிய ஐந்துவிதமான தாளங்களை டமாரத்தில் வாசிக்க இயலும்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் டமாரம் என்று சொல்லப்படும் இந்த இசைக்கருவி, தென் தமிழகத்தில் தம்பாளம் என்று சொல்லப்படுகிறது. தம்பாளம் வைணவக் கோவில்களில் அதிகமாக இசைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, நாங்குனேரி மற்றும் பெருங்குளம் ஆகிய கோவில்களில் இக்கருவி ஒலிப்பதைக் கேட்கலாம். இக்கருவியை இசைக்கும் பணியை கம்பர் என்கிற சமூகத்தினர் செய்கின்றனர். 

காஞ்சி வரதர் கோவிலில் டமாரம் தொன்றுதொட்டு இசைக்கப்படுகிறது. வரதர் கோவிலில் தாதா தேசிகன் சாற்றுமுறை நாளான கார்த்திகை மாத அனுஷம் நட்சத்திர நாளன்று, சுமார் 10 டமாரங்களை சிறப்பான முறையில் ஒரு கச்சேரி போன்று இசைக்கிறார்கள். டமாரக் கோஷ்டி என்று இதற்கு பெயர். பெருமாள் திருவீதி சென்று வரும் வரை இக்கருவி மிக நேர்த்தியாக இசைக்கப்படுகிறது. மணவாள மாமுனிகள் சாற்றுமுறைக்கு இரண்டு டமாரங்கள் ஒலிக்கின்றன. மேலும், வரதருக்கு பங்குனி பெருவிழாவிலும் அதையொட்டி இடம் பெறும் மலையாள நாச்சியார் திருக்கல்யாண விழாவிலும் டமாரம் இசைக்கப்படுகிறது. திருபெரும்புதூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மராத்தலான டமாரம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜப்பானிய பாரம்பரிய ‘ஓரிகாமி’ காகிதக் கலை வடிவம்!
Damaram

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முன் அமைந்த நகரா முரசு மண்டபத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 4.30 முதல் 5.00 வரை டமாரம் ஒலிக்கப்படுகிறது.

புனித தோமையார் மலைப் பகுதியிலுள்ள ஆவுடைநாயகி உடனுறை நந்தீசுவரர் கோயிலி்ல் அடிப்பாகம் சுடுமண்ணால் செய்யப்பட்ட டமாரம் உள்ளது. 

தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் தம்பாளம் / டமாரம் எனும் தொல் தமிழர் இசைக்கருவி பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது பயன்பாட்டிலுள்ள இடங்களில்,  குறிப்பாக, டமாரம் இசைக்கும் கோயில்களில் அதனைத் தொடர்ச்சியாக இசைக்கச் செய்து, அக்கருவி அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு செய்தி வேகமாகப் பரப்பப்படுவதற்கு உதாரணமாகவும், அதிகச் சத்தத்திற்கு உதாரணமாகவும் இருக்கும் டமாரம் எனும் இசைக்கருவி நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கத் தேவையான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை எடுத்திட வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com