Puli Thevar
Puli Thevar

சுதந்திர போரின் முதல் வீரர் பூலித்தேவர் மறைந்த இடம் எங்குள்ளது தெரியுமா?

Published on

வெள்ளையர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்டவரும், 12 முறை வெள்ளையர்களை தோற்கடித்த மாவீரனான பூலித்தேவர் வரலாற்றினை பார்ப்போம்.

13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் கிளைவழியில் தோன்றிய சிற்றரசு தான் பூழிநாடு. முதலில் பாண்டியர்களுக்கும் பிறகு விஜயநகர பேரரசுக்கும் உட்பட்டு ஆட்சி செய்தனர். இவர்களில் பலருக்கும் பூலித்தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த வம்சத்தில் வந்த பத்தாவது சிற்றரசர் தான் பூலித்தேவர். முதலில் ஆவுடையாபுரத்தை தலைநகராக கொண்டவர்கள் பின்னர் நெற்கட்டான் சேவலை தலைநகராக்கினர்.

1715 ஆம் ஆண்டில் சித்திரபுத்திரத் தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் மகனாக பிறந்தார். கயற்கண்ணி நாச்சியாரைத் திருமணம் செய்த அவருக்கு கோமதி முத்துத்தலச்சி என்ற மகளும், சித்திரபுத்திரத்தேவன், சிவஞான பாண்டியன் என்ற பெயர்களையுடைய மகன்களும் பிறந்தனர். 1726இல் பூலித்தேவர் அரியணை ஏறினார்.

கம்பனி அதிகாரியாக இராபர்ட் கிளைவ் 1950இல் திருச்சியை கைப்பற்றி தென்னாட்டு அரசர்களையும் பாளையக்காரர்களையும் சந்திக்க ஆணையிட்டான். இதில் கோவம்கொண்ட பூலித்தேவன் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் கிளைவ் உடனான சந்திப்பில் சண்டையிட்டு வெற்றி பெற்றார் என ‘பூலித்தேவன் சிந்து’ கூறுகிறது. 

1755ஆம் ஆண்டு கர்னல் ஹெரான் தலைமையில் கம்பனியர் நெற்கட்டான்சேவல் கோட்டையை முற்றுகையிட்ட போது, விரட்டியடித்து வெற்றி பெற்றார் பூலித்தேவர். மறுபடியும் களக்காட்டிலும், நெற்கட்டான் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் முகமது யூசுப்கான் என்ற மருதநாயகத்தை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாப் படையை தோற்கடித்தார். 1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மருதநாயகத்துடன் நடந்த போரில் பூலித்தேவரின் நண்பர் மூடேமியா கொல்லப்பட்டதும் போரை நிறுத்தித் திரும்பினார். இதனால் திருநெல்வேலியை இழந்தார்.

கிழக்கிந்திய கம்பனியின் பலம் அறிந்த பூலித்தேவர். அவர்களுக்கு எதிராக, இந்திய அரசுகளின் கூட்டணியை உருவாக்கினார். அதில் கொல்லங்கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை ஆகிய பாளையங்களும் திருவனந்தபுரம் அரசும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
பாண்டிய நாட்டுக்கு சமண முனிவர்கள் வழங்கிய மிகப்பெரிய வரம் என்ன?
Puli Thevar

1760ஆம் ஆண்டு நெற்கட்டான்செவல் கோட்டையை தாக்கிய மருதநாயகம் சதி செய்து வென்றான். பூலித்தேவரின் படையில் இருந்த பல வீரர்களுக்கு மருதநாயகம் இலஞ்சம் கொடுத்தான். திருவனந்தபுரம், நடுவக்குறிச்சி பாளையத்தை அணி மாற்றினான். வென்றாலும் பூலித்தேவரை பிடிக்க முடியாததால் அவரின் 29 கோட்டைகளை இடித்தான் மருதநாயகம்.1764இல் தான் நாட்டினை மீட்டார் பூலித்தேவர்.1765 அக்டோபரில் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய கேப்டன் பெரிட்சன் பூலித்தேவரிடம் தோற்றான்.1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்குதல் நடத்திய போதும் அவர் வெற்றிபெற்றார்.

1767ஆம் ஆண்டு மே மாதம் டொனல்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் பிரம்மாண்டமான படையோடு வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கினார்கள். பீரங்கிகளின் தாக்குதலினால் கோட்டை சுவரில் விழுந்த ஓட்டையை களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் கிடைக்காத சூழலில் வீரர்கள் தங்கள் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்தனர். ஆயினும் கோட்டை தகர்க்கப்பட்டது. மன்னர் பூலித்தேவனை கைது செய்து பாளையங்கோட்டைக்கு செல்லும் வழியில், சங்கரநயினார் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட அனுமதி கேட்டார். அதன்படி பூலித்தேவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையில்  கைவிலங்குகள் அறுந்து விழ ஜோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இதற்கு ஆதாரமாக சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள்:
மூக்கறுப்பு: அவமானத்தின் நிழல்! 
Puli Thevar

பூலித் தேவர் கொல்லப்பட்டதாக தகவல் இருந்தாலும் அதற்கு ஆதாரம் ஏதுமில்லை. வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் போரிட்டவர் பூலித்தேவர் தான். தொடர்ச்சியாக 17 வருடங்கள் கம்பனியர், ஆற்காட்டு நவாப், மருதநாயகத்தோடு நீண்ட போரை நடத்தி பலமுறை வென்ற பெருமைக் கொண்டவர்.

logo
Kalki Online
kalkionline.com