நள்ளிரவில் நடந்து செல்ல பாதுகாப்பான Top 10 நாடுகள்... லிஸ்டுல இந்தியா இருக்கா?
நள்ளிரவில் நான் எதுக்கு நடுரோட்டில் நடந்து போகணும்? என்று நீங்கள் நினைக்கலாம். நள்ளிரவில் எந்த ஒரு பயமும் இல்லாமல் நடந்து செல்லும் போது தான், நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை உணர முடியும். இந்திய விடுதலைக்குப் பின்னர் காந்திஜியிடம் ஒரு நிருபர், "இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டார்.
அதற்கு காந்தியோ "என்றைக்கு நள்ளிரவில் ஒரு பெண், எந்த பயமும் இன்றி தைரியமாக இந்தியாவில் வலம் வருகிறாளோ, அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக நான் நினைப்பேன்" என்று கூறியுள்ளார். ஆனால் இப்போது, நள்ளிரவில் ஆண்கள் நடந்து செல்ல முடியுமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் நள்ளிரவில் பாதுகாப்பை உறுதி செய்யும் நாடுகளைப் பற்றி ஒரு ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளதுகேலப் நிறுவனம். கேலப் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் 144 நாடுகளில் 145,000க்கும் மேற்பட்ட நேர்காணல்களைக் மேற்கொண்டு, பாதுகாப்பு பற்றிய கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்:
1. நீங்கள் வசிக்கும் நகரத்திலோ கிராமத்திலோ இரவில் தனியாக நடந்து செல்வது பாதுகாப்பானதாக இருக்கிறதா?
2. நீங்கள் வசிக்கக்கூடிய நகரத்தில் அல்லது கிராமப்புறங்களில் உள்ள காவல் நிலையத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
3. கடந்த ஒரு வருடத்தில் உங்கள் குடும்பத்தினர் மீதும் அல்லது நீங்கள் அறிந்த குடும்பத்தினர் மீதும் ஏதேனும் திருட்டு முயற்சிகள் நடந்துள்ளதா?
4. கடந்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் எதற்காகவாவது தாக்கப்பட்டீர்களா அல்லது உங்களது பொருட்கள் ஏதேனும் திருடு போனதா?
மேற்கண்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களை வைத்து அந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு தரம் , தரவரிசைப்படுத்தப்பட்டது. அதன்படி இரவில் தனியாக நடந்து செல்ல பாதுகாப்பான நாடுகளின் லிஸ்ட் இதோ...
1. சிங்கப்பூர் - 98 %
2. தஜிகிஸ்தான் - 95%
3. சீனா - 94 %
4. ஓமன் - 94%
5. சவுதி அரேபியா - 93%
6. ஹாங்காங் - 91%
7. குவைத் - 91%
8. நார்வே - 91 %
9. பஹ்ரைன் - 90%
10. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 90%
இந்த நாடுகள் எப்படி பட்டியலில் இடம் பிடித்தன?
இந்த நாடுகள் மக்களின் பாதுகாப்பை உணர வைத்துள்ளனர். மக்களின் பாதுகாப்பிற்காக சட்ட திட்டங்களை கடுமையாக வைத்துள்ளனர். சீனா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் சட்டம் சற்று கடுமையாக இருக்கும். அங்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் கடுமையான முறையில் தண்டிக்கப்படுகின்றனர்.
அந்த நாடுகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிகமான பாதுகாப்பு விதிகள், தீவிரக் கண்காணிப்பு, சட்டத்தின் மீதான பயம் ஆகியவற்றால் இருள் சூழ்ந்த பிறகும் நாட்டு மக்களின் மீது பாதுகாப்பு என்னும் வெளிச்சம் இருந்து கொண்டே உள்ளது.
நார்வேயின் தனித்தன்மை:
மற்ற நாடுகளை விட நார்வே இந்த பட்டியலில் இடம் பிடித்தது சிறப்பு வாய்ந்தது. வேறு எந்த ஐரோப்பிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் சட்ட விதிகள் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் , நார்வே மக்கள் சமூக பொறுப்பை உணர்ந்து , பாதுகாப்பாக நாட்டை வைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களின் சமூகப் பொறுப்பை உணர்ந்து நாட்டை பாதுகாக்கும் விதிகளை பின்பற்றி வருகின்றனர். எவருடைய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அவர்கள் இருப்பது இல்லை.
இந்தியாவின் நிலை:
இந்த பட்டியலில் பெரும்பாலான இந்திய நகரங்கள் முன்னேறியுள்ளன. ஆயினும் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியவில்லை. இந்தியா 72% மதிப்பெண்களை பெற்றுள்ளது. பெரிய நாடாக இருந்தாலும், இந்தியாவின் சட்டங்கள் குற்றவாளிகளை பெரிதும் அச்சுறுத்துவது இல்லை. அதனால் , பெரிய இலக்கை அடைவதில் சிக்கல் உள்ளது.