"More Things Are Wrought by Prayer Than This World Dreams Of"
இந்த உலகம் கனவில் காண்பதை விட அதிகமதிகம் பிரார்த்தனையால் பெறப்படுகிறது – கவிஞர் டெனிஸன்
மூளைக்கும் பிரார்த்தனைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று தனது லாபரட்டரி சோதனைகளால் உறுதிப் படுத்தியிருக்கிறார் ஒரு மூளை இயல் நிபுணர். உறுதிப்படுத்தியிருப்பது ஒரு நிபுணர் என்பதால் உலகம் சற்றுப் பரபரப்பை அடைந்திருக்கிறது.
ஆர்லீன் டெய்லர் (Arlene R. Taylor, PhD) என்ற அதிசயப் பெண்மணி ஒரு மூளை இயல் நிபுணர், எழுத்தாளர், ஆற்றல் மிகுந்த பேச்சாளர். இவரை உலகம் இப்போது ‘ப்ரெய்ன் குரு’ என்று பாராட்டுகிறது.
“நாம் பிரார்த்தனை செய்யும் போது மூளை மின்னலை துடிப்புகளாக வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் கடவுள் இருப்பதை நான் நம்புகிறேன். அவரிடம் மிகப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று இருக்கிறது. பெரிய திரையும் இருக்கிறது. அவரால் எல்லா பிரார்த்தனைகளையும் கேட்க முடிகிறது. அவரால் என்னுடன் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.” என்று கூறும் டெய்லர் (Arlene R. Taylor, PhD) மேலும் இது பற்றி விளக்குகிறார் இப்படி:
“இவையெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர், என்ன சிகிச்சை அல்லது மருந்துகளைப் பெறுகிறார் என்று அறிய முடியாதபடி செய்யும் ப்ளைண்ட் ஸ்டடி (BLIND STUDY) ஆகும். இதில் எலக்ட்ரோடுகளை உங்கள் தலையில் பொருத்தி ஆர்லாண்டோவில் உள்ள மருத்துவமனையிலோ அல்லது வேறெங்கோ இருக்கும் ஒருவருக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்கள். பிரக்ஞையற்று இருக்கும் அந்த நோயாளிக்கும் இது தெரியாது. அவருக்கு நடப்பது என்ன என்று தெரியாது. ஆனால் பிரார்த்தனையைச் செய்ய ஆரம்பித்த அந்தக் கணமே அவருடைய மூளையில் பெரிய மாற்றம் ஒன்று ஏற்படுகிறது. இது ஒரு மர்மமான சக்தி. இது தான் பிரார்த்தனையின் வலிமை.” என்கிறார் டெய்லர்.
ஒரு நாளைக்கு 12 நிமிடங்கள் வழக்கமாக விடாது பிரார்த்தனை செய்யும் ஒருவர் அல்ஜெமிர் வியாதியிலிருந்து மீண்டு வர முடியும் என்பது டெய்லரின் சோதனை முடிவுகளால் தெரிய வருகிறது. இது இப்போது அறிவியலால் ஆமோதிக்கப்பட்டுவிட்டது.
உலகெங்கும் டெய்லரின் புத்தகங்கள் அமோக விற்பனையாகி சக்கைப் போடு போடுகின்றன.
இவர் சிறந்த பேச்சாளர் என்பதால் மீண்டும் மீண்டும் இவரைப் பேச அழைக்கின்றனர். மூளை என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்திற்குமான வன்பொருள் (Hardware); மனம் என்பது நுண்மையான மென்பொருள் (Software). நமது எண்ணங்கள், நம்பிக்கைகள், பார்வைகள், உணர்ச்சிகள் ஆகிய அனைத்தும் வன்பொருளில் ஓடுகிறது என்று கணினி பாஷையில் விளக்குகிறார் டெய்லர்.
மூளையின் எச்சரிக்கை அமைப்பான அமிக்தலாவை பிரார்த்தனை அமைதிப்படுத்துவதால் மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவை பிரார்த்தனை செய்வோரைப் பாதிப்பதில்லை.
அது மட்டுமல்ல, மூளையின் நியூரோபிளாஸ்டிசிடி தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் அதிசயிக்கத்தக்க சக்தியை பிரார்த்தனை தருகிறது.
ஒருமுனைப்பட்ட கவனத்துடன் தீவிர தியானமானது, ப்ரீ ஃப்ரண்டல் கார்டெக்ஸ் என்னும் மூளைப் பகுதியை ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கிறது. இதைத் தொடர்ந்து ஊக்குவிப்பதால் அதிக கவனமும், அன்றாட வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடும் உண்டாகிறாது.
பிரார்த்தனை இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. வளர்சிதை மாற்றத்தை மெதுவாக ஆக்கி அமைதியையும் அதிகத் திறனையும் தருகிறது. வலி இருந்தால் அதைப் போக்குகிறது. அமிக்தலா செயல்படுவதை மெதுவாக ஆக்குவதால் பயம், மன அழுத்தம் ஏற்படுவதில்லை. எதிர்மறை எண்ணங்கள், மனச் சோர்வு ஆகியவை குறைகிறது. நன்றி உணர்வு, இரக்கம் ஆகியவை மேம்படுகிறது.
பக்கம் பக்கமாக பிரார்த்தனையின் சக்தியை 32 புத்தகங்களில் டெய்லர் விளக்குகையில் நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. அவரது உரைகள் பலவற்றை யூடியூபிலும் கேட்கலாம். அறிவியல் பூர்வமாக BLIND STUDY சோதனைகள் மூலம் பிரார்த்தனையின் பலன்கள் விளக்கப்படுவதால் இந்த பிரார்த்தனை டாக்டரை அனைவரும் பாராட்டுகின்றனர்.