
இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தில், முத்துக்கள் அழகிய ஆபரணங்கள் செய்ய பயன்பட்டன. இது பண்டமாற்று முறையில் மிகவும் மதிப்பு மிக்க பொருளாகவும் இருந்தது. குறிப்பாக பாண்டிய நாடு முத்துக்கள் வியாபாரத்தில் உலகப் புகழ் பெற்று செழித்து விளங்கியது. பாண்டிய நாட்டின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழகம் மெல்ல முத்து விபாயாரத்தில் தனது பிடியை இழந்தது. அதற்கு பின்னர் சுல்தானி்ய காலத்தில் ஹைதராபாத் முத்து வியாபாரத்தின் மையமாக மாறத் தொடங்கியது.
நிஜாம் காலத்தில் ஹைதரபாத் நகரம் முத்து வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அரச குடும்பங்களும் , உயர் அந்தஸ்து மிக்க குடும்பத்தினரும் முத்து நகைகளை அணிவதை பெருமையுடன் கருதினர். செல்வம், அரசாட்சி மற்றும் அதிகாரத்தை வெளிப்படுத்த முத்து ஆபரணங்கள் இன்றியமையாததாக நிஜாம்கள் கருதியதால் முத்துககளின் முக்கியத்துவம் இங்கு அதிகரித்தது.
ஹைதராபாத் நிஜாம்கள் முத்துக்களை அணிவதை மிகவும் விரும்பினர். ஒரு நிஜாமிடம் 2,000க்கும் மேற்பட்ட முத்துக்கள் பாதிக்கப்பட்ட ஒரு ஆரம் இருந்துள்ளது. முத்துக்கள் அரச பதவியின் அடையாளமாக மாறியிருந்தன. நிஜாம்கள் முத்து மற்றும் விலையுயர்ந்த நகைகளை விரும்பி அணிந்ததால் ஹைதராபாத் நகரில் ஒரு ஆடம்பர வைர மற்றும் முத்துக்கள் சந்தை உருவாகி இருந்தது.
ஹைதராபாத் நிஜாம் மற்றும் அரசு அதிகாரிகள், இந்த நகரத்தில் அதிகம் வசித்ததாலும் , ஆபரணங்களின் வியாபார மையமாக ஹைதரபாத் மாறத் தொடங்கியதாலும், இங்கு முத்து வியாபாரம் சூடு பிடித்தது. முத்துக்களை ஆபரணமாக மாற்றும் சிறந்த கொல்லர்கள் இங்கு இருந்ததால், அதிக விற்பனையும் நடைபெற்றது. ஹைதரபாத்தில் அருகில் கடல் இல்லா விட்டாலும் , விற்பனை ரீதியாக முத்து விற்பனையின் கொள்முதல் நிலையமாக இந்த நகரம் மாறியிருந்தது.
ஹைதராபாத் முத்துக்களின் நகரம் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டாலும் , அவர்கள் வாங்கும் முத்துக்கள், இந்தியாவின் பாரம்பரிய முத்துக் குளிக்கும் பகுதிகளில் இருந்து வாங்கப்பட்டதில்லை. வரலாற்று ரீதியாக பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன் இயற்கை முத்துக்களை ஹைதரபாத்துக்கு ஏற்றுமதி செய்வதில் பெயர் பெற்றது. வளைகுடாப் பகுதி முத்துக்கள் பெரும்பாலும் ஹைதராபாத் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டன. பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளின் முத்து வியாபாரிகளுக்கு ஹைதரபாத் சொர்க்க பூமியாக இருந்தது. அரபு நாடுகளில் வசிக்கும் மக்களிடம் ஹைதராபாத் நிஜாம் உலகின் பெரிய செல்வந்தர் என்ற எண்ணம் இருந்தது. அதற்கேற்ப நிஜாமும் அரபு நாடுகளுக்கு ஏராளமான நிதியுதவிகள் செய்து வந்துள்ளார்.
தற்போதைய காலத்தில் வளர்ப்பு முத்துக்கள் புகழ் பெற்று வருவதால் பஹ்ரைன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்துள்ளது. இந்தியாவில் முத்துக்களை வர்த்தகம் செய்வதற்கான எளிமையான ஒரு மையம் ஹைதரபாத் நகரம் . இங்குள்ள லாட் பஜார் மற்றும் பதேர்கட்டி ஆகிய இடங்களில் முத்துக்கள் பதித்த எளிய காதணிகள் முதல் மிகவும் விலை உயர்ந்த ஆரங்கள் வரை விற்பனை ஆகின்றன.
சார்மினார் அருகே உள்ள லாட் பஜார், 400 ஆண்டுகளுக்கும் மேலாக முத்துக்கள் மற்றும் வளையல்களை விற்பனை செய்து வருகிறது. இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் வண்ணமயமான சந்தை. மேலும் ஹைதராபாத் வளையல்களும் உலக அளவில் புகழ்பெற்றவை.
ஹைதராபாத் திறமையான நகை கொல்லர்களுக்கும், பல்வேறு வகையான முத்து நகைகளை விற்பனை செய்யும் பணக்கார சந்தைகளுக்கும் பெயர் பெற்றது. ஹைதராபாத் முத்துக்கள் அவற்றின் பளபளப்பு, மென்மை மற்றும் சீரற்ற வட்ட வடிவத்திற்கு பெயர் பெற்றவை. தற்போது இயற்கை முத்துக்கள் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. வளர்ப்பு முத்துக்கள் மற்றும் செயற்கை முத்துக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் தயாராகி ஹைதரபாத் வருகின்றது. ஹைதராபாத் குறைந்த விலையில் மக்கள் பலனடையும் வகையில் அழகான செயற்கை முத்து நகைகளை உருவாக்குகிறது.