

மனித வாழ்க்கையானது அழுகையிலேயே தொடங்கி அழுகையிலேயே முடிகிறது. இறந்தவர்களின் வீட்டில் எல்லோரும் கதறி அழுவார்கள். இப்படி அழுவதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது? இறந்தவர்கள் திரும்பி வந்து விடவா போகிறார்கள்? இல்லை... ஆனால், ஒப்பாரி வைத்து மாரடித்து அழுவது எவ்வளவு ஒரு நல்ல செயல் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? இறந்தவர்களின் வீட்டில் ஏன் ஒப்பாரி வைத்து மாரடித்து அழுகிறார்கள் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாய்க் காண்போம்.
ஒப்பாரி என்றால் என்ன?
ஒப்பாரி என்பதற்கு 'ஒத்து ஆர்ப்பரித்தல்' என்று பொருள். அதாவது அழகான தமிழில் 'இரங்கற்பா' என்று கூட கூறலாம். இறந்தவர்களின் வீட்டில் விடிய விடிய ஒப்பாரிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஏனென்றால், இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவர் வாழ்ந்த வாழ்க்கை முறை, எல்லோரிடமும் அன்பு செலுத்தும் பண்பு, அவருடைய சிறப்புகள், கொடைத்தன்மை, போன்ற எத்தனையோ விதமான தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
ஒருவரை நாம் எளிமையாக ஏதாவது செய்து சிரிக்க வைத்து விடலாம். ஆனால் அழ வைப்பது என்பது சற்று கடினம். நாம் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று அங்கு அவர்கள் இறந்தவர்களைப் பற்றி அழுது பாடும் அந்த ஒப்பாரிப் பாடலை கேட்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் தானாகவே வழிந்து ஓடும் என்பது உண்மையாகும்.
இப்படி ஒருவரை அழ வைப்பது என்பது இந்த ஒப்பாரி இசையில் மட்டுமே தான் இருக்கிறது.
நம் மனதில் உள்ள மன அழுத்தங்கள் அனைத்தும் நம் வாய்விட்டு சொல்லி அழுவதால் மனதில் உள்ள பாரம் முற்றிலும் இறங்கி நாம் சற்று நிம்மதி அடையலாம். அதனால் ஒப்பாரி என்பது இன்றுவரை கிராமங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒப்பாரி வைத்து அழுவதின் மூலம் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாரடித்தல்:
மாரடித்தல் என்பது இறந்தவர்களின் வீட்டில் நடக்கும் ஒரு சடங்கு முறையாகும். இதில் ஒரு அறிவியல் காரணமும் அடங்கி இருக்கிறது என்பது முக்கியமான ஒரு தகவலாகும். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை நாம் கேட்டவுடனே சில பேருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுவிடும். அப்படி மாரடைப்பு ஏற்படாமல் இருப்பதற்காக நாம் நெஞ்சில் மாரில் அடித்துக் கொண்டே அழுது புலம்பி பாடும் பாடலுக்கு தான் மாரடிப் பாடல் என்று பெயர் வந்தது.
இவ்வாறு மாரில் அடித்துக் கொண்டு அழும் முறையைத் தான் 'மாரடித்தல்' என்று கூறுகின்றனர். இறந்தவர்களின் வீட்டில் மாரில் அடித்துக் கொண்டு இப்படி பாடுவதால் யாருக்கும் மாரடைப்பு வராமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இறந்தவர்களின் வீட்டில் மாரடிப்பதற்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து மாரடிப்பார்கள். இதற்கு 'கூலிக்கு மாரடித்தல்' என்று பெயர். இதனை பிழைப்பாகவும் சில பெண்களும், ஆண்களும் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது ஒப்பாரி வைப்பதும், மாரடிப்பதும் என்ற எந்த ஒரு சடங்கு முறையும் இயல்பாக இல்லை. ரேடியோ கேசட் வந்து விட்டதால், அவற்றில் ஒப்பாரி பாடலையும், மாரடிப் பாடலையும் ஒலிக்கச் செய்கிறார்கள். இதனால் நமது பண்பாட்டு பாரம்பரியமான ஒப்பாரி வைத்து மாரடித்து அழும் சடங்கு முறை அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அத்தி பூத்தாற் போல ஆங்காங்கே ஏதாவது கிராமங்களில் மட்டுமே காணப்படுகிறது.